அஜீரணத்தை அகற்றும் கடுகு ரோகினி
கடுகு ரோகினி மூலிகைக்கு ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. இது ஆயுர்வேத கடவுள் தன்வந்திரி அவர்களாலேயே உண்ணப்பட்ட மூலிகை. அதனால் இதை தன்வந்திரி கிரஹாதா என்கிறார்கள். பிரசித்த பெற்ற இந்த மூலிகை, பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தி வரப்பட்டுள்ள மூலிகைகளில் ஒன்றாகும்.
இந்த மூலிகைக்கு பல பெயர்கள். அவற்றில் ஒன்று ‘கடூக்கி’. வடமொழியில் “கடூக்கா” என்றால் கசப்பு என்று பொருள். கசப்பாக இருப்பதால் இந்த மூலிகை கடூக்கி எனப்படுகிறது.
தாவரவியல் பெயர் – Picrorrhiza Kurrova
குடும்பம் – Scrophulariaceae
இதர பெயர்கள் – சமஸ்கிருதம் – கடுரோகினி, கடுகரோகினி, அசோகரோகினி, இந்தி – கடூக்கி, தெலுங்கு – கடூக்கு, கன்னடம் – கடூரோகினி, மலையாளம் – கடுகரோகினி, தமிழ் – கடுகு ரோகினி, கடுரோகினி, ஆங்கிலம் – Black hellebore, Hellebore, Kurroa.
தாவர விவரங்கள்
கடுகுரோகனி நீடித்து வாழும், காட்டு மர, கசப்பான தாவரம். உபயோகமாகும் பாகங்கள் – வேர், மட்டத்தண்டுகிழங்கு (Rhizome). வேர்களின் வெளிப்பட்டை பழுப்பு – வெளுப்பு நிறமுடையது. ஆனால் உள்ளிருக்கும் “உட்சோறு” (Pith) கருமையாக இருக்கும். செடியின் வெளிப்பட்டை செதில்கள் போன்ற அமைப்புடன், வட்ட தழும்புகளுடன் இருக்கும்.
கடுகு ரோகணி வடமேற்கு இமயமலையில் – காஷ்மீர் தொடங்கி- சிக்கிம் வரை காணப்படுகிறது. இமயமலையில் 9000 &- 15000 அடி உயரங்களில் பயிரிடப்படுகிறது. தண்டுக் கிழங்குகளால் பயிரிடப்பட்டாலும், இயற்கையான இனப்பெருக்கம் விதைகள் மூலமாக.
பயன்கள்
அஜீரணம், அதுவும் ஜுரத்துடன் கூடிய பித்த அஜீரணத்திற்கு கடூக்கி நல்ல மருந்து.
கடூக்கி, ஜுரத்தை குறைக்கும், வயிற்றுப் பூச்சிகளை அகற்றும், இதமான மலமிளக்கி வயிற்று வலியை போக்கும்.
ஆஸ்துமா, ரத்தக் கோளாறுகள், அழற்சி, சிறுநீர் போகும் போது தோன்றும் எரிச்சல், படர்தாமரை, இவைகளின் சிகிச்சையில் பயன்படுகிறது.
பசியை தூண்டும்.
ஆயுர்வேத நூல்கள், கடூக்கியின் வேர்கள், ஜுரத்தை குறைக்க, அஜீர்ணத்தை போக்க, உடலின் கழிவுப் பொருள்களை வெளியேற்ற, உதவும் என்கின்றன.
வேர்கள் பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் உள்ளதால், காமாலை நோய்கள், வாத நோய்கள், சிறுநீர் பாதைகளில் தொற்று, கல்லீரல் கோளாறுகள், வெண்குஷ்டம், இவற்றின் சிகிச்சைக்கு பயனாகின்றன.