கோடம்புளியானது நாம் அன்றாடம் பயன்படுத்தும் புளியைக் காட்டிலும் மிதமான புளிப்பு சுவையுடையதாகும். இதனை கேரள மக்கள் உபயோகப்படுத்துகின்றனர். இது கேரளா, மலைப்பிரதேசங்களில் அதிகளவில் கிடைக்கின்றது. மர வகையைச் சேர்ந்த கோடம்புளி செம்மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரக்கூடிய தாவரம் ஆகும். இது மூன்று ஆண்டுகளில் பலன் தரக்கூடியது. இதன் அறிவியல் பெயர் கார்சீனியா இண்டிகா.
கோடம்புளியின் பழம் பொடி செய்து சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பழம் மஞ்சள் நிறத்தில் பூசணிக்காய் போன்று காணப்படும். இதனை 5 நாட்கள் நிழலில் உலர வைத்து பயன்படுத்தலாம்.
இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தொழில் துறை மற்றும் மருந்து வகைகளிலும் பல்வேறு நன்மைகள் தரக்கூடியதாகும். இதன் பயன்பாடுகள் குறித்துப் பார்க்கலாம்.
தாவர விபரம்
மூலிகையின் பெயர் | கோடம்புளி |
தாவரப்பெயர் | GARCINIA CUMBOGIA |
தாவரக்குடும்பம் | CLUSIACEAE |
வேறு பெயர்கள் | கொறுக்காய் புளி, TOM RONG |
பயன் தரும் பாகங்கள் | பழம் |
இந்தியாவில் கோடம்புளி மேற்கு தொடர்ச்சி மலை, அந்தமான் நிக்கோபார் தீவுகள், வடகிழக்கில் பசுமையான காடுகள், ஆறுகள் அல்லது தரிசு நிலங்களிலும் வளர்கிறது. மேலும் வடகிழக்கு ஆசியா, மத்திய மேற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. இதன் தாயகம் இந்தியா மற்றும் இந்தோனேஷியா. கோடம்புளி இந்தியாவின் தெற்குப் பகுதிகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
இதில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் ஹோமியோபதி மருத்துவத்தில் வயிற்றுப் போக்கை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
தென்னிந்திய உணவுகளில் கோடம்புளி அதிக அளவில் ரசத்தில் பயன்படுத்துகின்றனர். இது கோடைக் காலங்களில் பானமாகவும் அருந்தப்படுகிறது. இதில் உள்ள புளிப்பு சுவை காரணமாக தேங்காய், பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு பயன்படுத்தி செய்யப்படும் சமையல் வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இது சட்னி மற்றும் ஊறுகாயில் சேர்க்கப்படுகின்றது.
ஊட்டச்சத்துக்கள் விபரம்
வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், மெக்னிசியம், சிட்ரிக் அமிலம், ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை அடங்கியுள்ளன. இது நம் உடலின் ஊட்டச்சத்தை அதிகரிக்க உதவுகிறது.
மருத்துவ பயன்கள்
வைட்டமின் சி நிறைந்த கோடம்புளி பழமானது நம் உடலின் எடை, இரத்த அழுத்தம், இதய பலம் மற்றும் நோய் பரவாமல் ஆரோக்கியம் மேம்பட பெரிதும் உதவுகிறது.
மேலும் இது தோல் தொடர்பான நோய்கள், உதடு வெடிப்பு, கை, காலில் ஏற்படும் வெடிப்பு, குடல் புண் நோய்கள், அஜீரணக் கோளாறு, தொண்டைப் பிரச்சனைகள், கர்ப்பப்பை மற்றும் சிறுநீர் மலவாயில் ஏற்படும் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது.
இதன் பொடியை மருத்துவர் ஆலோசனைப்படி கூறிய அளவுகளில் உட்கொள்ளவும்.
முதுமைத் தன்மை நீங்க
கோடம்புளியின் செல் மீளுருவாக்கம் பண்புகள் வயதான தோற்றத்தை தாமதப்படுத்துவதற்கு பெரிதும் உதவுகின்றது. இது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
மூளை ஆரோக்கியம் மேம்பட
கோடம்புளி மூளையில் உள்ள நரம்பு செல்களின் வளர்ச்சியை தூண்டுவதால் இதன் செயல்பாடு அதிகரிக்கின்றது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.
கோடம்புளியை காரக் குழம்பு, மீன் குழம்பு, ரசம், சாம்பார் என நாம் வழக்கமாக புளி சேர்த்து சமைக்கும் அனைத்து குழம்பு வகைகளிலும் சேர்க்கலாம்.
கூந்தல் வளர்ச்சி மேம்பட
கோடம்புளியை தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன் கலந்து ஷாம்பு அல்லது கண்டிஷனராக பயன்படுத்தி குளித்து வரலாம். இது கூந்தலை மென்மையுடன் பளபளப்பாக வைக்க உதவுகிறது.
மாதவிடாய் காலங்களில்
கோடம்புளியிலுள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் செரிமானத்தை மேம்படுத்தி, மாதவிடாய் சுழற்சி சீராக இயங்க உதவுகிறது. மேலும் இக்காலங்களில் ஏற்படும் கால் வலி மற்றும் தசை பிடிப்புகளை தடுக்கவும், இது பெரிதும் துணைபுரிகிறது.
உடல் எடை குறைய
கோடம்புளி பானம் உடல் சூட்டைத் தணித்து, நீர் ஆற்றலை அதிகரிக்கின்றது. இது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவுகிறது.
கோடம்புளி நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவை சீராக வைக்க பெரிதும் உதவுகின்றது. இதிலுள்ள ஹைபோ கொலஸ்டரோலீமியா கலோரிகள் கொழுப்பாக மாறாமல் கட்டுப்படுத்துகிறது.
கோடம்புளி கொண்டு உடல் எடை குறைக்கும் போது போதுமான அளவு தூக்கம், உடற்பயிற்சி, உடல் உழைப்பு, தேவையான அளவு தண்ணீர் அருந்துதல், காய்கறி, பழங்கள் உண்ணுதல் போன்றவற்றை சீராக கடைபிடிப்பது அவசியமாகும். இவ்வாறு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
கோடம்புளி பானம் தயாரித்தல்
எலுமிச்சை உருண்டை அளவு கோடம்புளியை எடுத்து அதனை ஒரு தம்ளர் நீரில் இரவு முழுவதும் நன்கு ஊற வைக்கவும். பின் மூன்று தம்ளர் அளவு நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டவும். கோடம்புளிபானம் தயார்.
இதனை காலை, மதியம், இரவு என உணவிற்கு அரை மணி நேரத்திற்கு முன் ஒரு தம்ளர் அளவில் அருந்தலாம். இவ்வாறாக தினமும் மூன்று வேளை தவறாமல் அருந்தி வர உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
கோடம்புளி சாறு தயாரித்தல்
கோடம்புளியை இரவு முழுவதும் ஊறவைத்து நன்கு பிசைந்து சாறு எடுக்கவும். பின் அதனுடன் உப்பு, கருப்பு மிளகு தூள் சேர்க்கவும். கோடம்புளி சாறு தயார்.
கோடம்புளி சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இது அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வாயு பிரச்சனைகள் மற்றும் இரைப்பை சார்ந்த பிரச்சனைகளை நீக்குகிறது.
கொழுப்பை குறைக்கும்
கோடம்புளி சூப்
தேவையான பொருட்கள்
கோடம்புளி – 50 கிராம்
கருப்புக்காணம் – 20 கிராம்
தேன் – 5 மில்லி
வாய்விடங்கம்
சுக்கு, மரமஞ்சள் – தேவையான அளவு
செய்முறை
கோடம்புளி மற்றும் கருப்புக்காணம் இவற்றை அரை லிட்டர் வெந்நீரில் சேர்த்து இரவிலேயே ஊற வைக்கவும். காலையில் இதனை கொதிக்க வைத்து ஒரு தம்ளர் அளவாக வரும் வரை நன்கு காய்ச்சி வடிகட்டவும்.
பின் இவற்றில் சிறிதளவு வாய்விடங்கம், சுக்கு, மரமஞ்சள் ஆகியவற்றின் பொடியை சேர்க்கவும். இதனை தேன் கலந்து அருந்தவும். கோடம்புளி சூப் தயார். இதனை 5 மில்லி அளவில் காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும்.
குறிப்பு
கோடம்புளியை தேவையான அளவு மட்டுமே எடுப்பது நலம் பயக்கும் . அதிகளவு சேர்ப்பதால் இரத்தம் உறைதல் ஏற்படலாம்.
இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.