Korai kilangu benefits
கோரை என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். இது தேரிக்காடு போன்ற வறண்ட பகுதிகளில் வளரக்கூடிய தாவரம் ஆகும். கோரைக் கிழங்கானது நீர்ப்பரப்பான இடங்களில் எளிதில் கிடைக்கும். கோரைக்கிழங்கு முட்டை வடிவில் நறுமணமுடையதாகும். கசப்புத் தன்மை உடையது. இதன் தண்டுகள் மூன்று பட்டையானவை, உறுதியற்றவை.
கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகளவில் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். இது புல்வகை சேர்ந்த சிறு செடியாகும். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
தாவர விபரம்
மூலிகையின் பெயர் | கோரை |
தாவரப்பெயர் | CYPERUS ROTUNDUS |
தாவரக்குடும்பம் | CYPERACEAE |
வேறு பெயர்கள் | முத்தக்காசு, எருவை, கோரா, கோரைக்கிழங்கு |
பயன் தரும் பாகங்கள் | கிழங்கு |
இது சீன, இந்திய மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. மூட்டு வலி, தசைவலி, வயிற்றுக் கோளாறுகளுக்கு பெரிதும் துணைபுரிகிறது. கோரைக்கிழங்கு சாலையோரங்களிலும், தோட்டங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடியதாகும். இதன் வேர்க்கிழங்குகளே கோரைக்கிழங்கு என்றழைக்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
மருத்துவ குணங்கள்
கோரைக்கிழங்கு பித்தம், வாதம், கபம், தேக எரிச்சல், குளிர்சுரம், வாத சுரம், தாகம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும்.
காய்ச்சல் நீங்க
கோரைக்கிழங்கு 5 கிராம், சுக்கு பொடி மற்றும் பனங்கற்கண்டு கால் ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும். கோரைக் கிழங்கை நன்கு நசுக்கி அதனுடன் சுக்குப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு நன்கு கொதிக்க வைக்கவும். இதனை வடிகட்டி குடித்து வர காய்ச்சல் நீங்கும்.
பசியின்மை நீங்க
கோரைக்கிழங்கை குடிநீராக தயாரித்து, காய்ச்சிய பாலில் கலந்து மோராகவோ அல்லது சோற்றுடன் பிசைந்து சாப்பிட சிறுவர்களுக்கு உண்டாகும் பசியின்மை நீங்கும்.
உடல் எடை அதிகரிக்க
கோரைக்கிழங்கை நன்கு காயவைத்து அதனை சூரணமாக்கவும். பின் இதனை 1 முதல் 2 கிராம் அளவு எடுத்து தினமும் இருவேளை என பாலில் கலந்து குடித்து வர உடல் எடை அதிகரிக்கும்.
கோரைக்கிழங்கு சூரணத்தை உடம்பில் தேய்த்துக் குளித்து வர உடல் துர்நாற்றம் நீங்கும். கோரைக் கிழங்கு சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதற்கு எவ்வித பத்தியமும் தேவையில்லை.
முக அழகு மேம்பட
கோரைக்கிழங்கு சரும நோய்கள், வியர்வை நாற்றம், உடல் வலி என பலவற்றிற்கு சிறந்த தீர்வாகும்.
கஸ்தூரி மஞ்சள், கோரைக் கிழங்கு, சந்தனம் ஆகியவற்றின் பொடிகளை சம அளவு பாலுடன் கலந்து முகத்தில் பூசலாம். இதனை 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர முகச்சுருக்கம் நீங்கி, முகப்பரு வருவது தடுக்கப்படுகிறது.
ஞாபக மறதி
கோரைக்கிழங்கு மூளையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தி, ஞாபக மறதியை குறைத்து, நினைவாற்றல் திறனை அதிகரிக்கிறது.
பெரியவர்கள் கோரைக்கிழங்கு பொடியை இரண்டு கிராம் அளவு எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். இதன் நெய் அரை கிராம் அளவு எடுத்து நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வரலாம்.
மூட்டு வலி நீங்க
கோரைக்கிழங்கை நன்கு உலர வைத்து அதனை பொடியாக்கவும். பின் தினம் இருவேளை என ஒரு தம்ளர் பாலில் கலந்து குடிக்க தசை வலி, மூட்டு வலி நீங்கும்.
இரத்த மூலம் நீங்க
கோரைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, பிரண்டை, வாழைத்தண்டு, கடுகு, சுக்கு, சீந்தில், பரங்கி, பட்டை, கடுக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்கு பொடியாக்கவும். பின் இதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் மட்டும் குடித்து வர இரத்த மூலம் நீங்கும்.
சருமத்திற்கு
சருமத்தில் ஏற்படும் வியர்க்குரு, முகப்பரு, தேமல், உடல் சூட்டினால் உண்டாகும் கொப்புளங்கள் போன்றவை மறைய கோரைக்கிழங்கு அருமருந்தாகும். கோரைக்கிழங்கு பொடி மற்றும் கஸ்தூரி மஞ்சள் ஒன்றாக கலந்து சருமத்தின் மீது தடவி குளிக்கலாம்.
குழந்தைகளுக்கு
கோரைக்கிழங்கினை நன்கு நசுக்கி அதனுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இக்குடிநீரை இரு நாட்கள் இரு தேக்கரண்டி அளவு குடிக்க கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் அஜீரணக் கோளாறு நீங்கும்.
கற்றாழை நாற்றம் நீங்க
கோரைக் கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு இதனை சம அளவு எடுத்து பொடி செய்து அதனுடன் மூன்று மடங்கு ஆவாரை பொடி சேர்த்து தினமும் உடலில் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
குடல் பூச்சிகள் வெளியேற
ஒரு துண்டு இஞ்சி இவற்றை சுத்தம் செய்து நன்கு இடிக்கவும். பின் சிறிதளவு தேன் கலந்து நன்கு மையாக அரைக்கவும். இதனை சுண்டைக்காயளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் உண்ணவும்.
இது குடலில் உள்ள கிருமிகள் அனைத்தையும் அழித்து வெளியேற்றுகிறது. இம்மருந்து உட்கொள்ளும் சமயத்தில் சுடுசோற்றில் நெய் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து உண்ணவும். இம்முறையில் சாப்பிடுவதால் கடுமையான சீதபேதியும் குணமாகும்.
சிறுநீர்ப் பாதை தொற்று நீங்க
சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளுக்கு கோரைக்கிழங்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதற்கு கோரைக்கிழங்கை கஷாயமாக காய்த்து குடித்து வரலாம்.
தேவையான பொருட்கள்
கோரைக்கிழங்கு, வெந்தயம், சோம்பு, பனங்கற்கண்டு
செய்முறை
கோரைக்கிழங்கை நன்கு நசுக்கவும். வெந்தயத்தை இரவிலே ஊற வைக்கவும். பின் சோம்பு, வெந்தயம், பனங்கற்கண்டு, கோரைக்கிழங்கு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு தம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் வடிகட்டி குடித்து வர சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்று நீங்கும்.
குறிப்பு
இது நாட்டு மருந்து கடைகளில் காய வைத்து பொடி செய்து விற்கப்படுகின்றது. இதனை வாங்கி உபயோகிக்கலாம்.
ஆயுர்வேதம்.காம்