மனிதர்களுக்கு முப்பது வயது ஆகி விட்டால் போதும். ஆணானாலும் சரி… பெண்ணானாலும் சரி. மூட்டு வலிக்கிறது என்று புலம்ப ஆரம்பித்து விடுவர். வயதாக ஆக மேலும் இவர்களுக்கு மூட்டு வலி அதிகமாகுமே தவிர குறையாது. இவர்கள் அனைவரும் எந்த வயதினராக இருப்பினும் மருத்துவம் பார்க்க படையெடுக்கின்றனர். சரியோ, தவறோ எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் இவர்கள் யார் எதைச் சொன்னாலும் அப்படியே மருத்துவம் பார்க்கவும் ஆரம்பித்து விடுவர். மூட்டு வலி பாதிப்பைப் பொறுத்த வரை தமிழக மக்களுக்கு இன்னும் அறியாமை இருக்கத் தான் செய்கிறது. இப்பாதிப்பைப் பற்றி கொஞ்சம் விரிவாக, விளக்கமாக பார்க்கலாம்.
மருத்துவப் பார்வை
நமது உடல், எலும்புகளால் ஆனது. இதில் தனியாக கை மற்றும் கால்களில் நீட்டி மடக்க, சுழற்ற எனும் பயன்பாட்டிற்காக இறைவன் மூட்டுகள் என்ற இணைப்புகளைக் கொடுத்துள்ளார். மனிதன் தான் நடக்க ஆரம்பித்த நாள் முதல் அவன் காலகளை பலவாறாகப் பயன்படுத்துகிறான். மனிதர்கள் உடலில் இரண்டு எலும்புகள் சேருமிடத்திற்கு எலும்பு இணைப்புகள் என்று பெயர். இந்த இரண்டு எலும்புகள் இணைவதற்கு காரணமாயிருப்பவைகள் இணைப்புத் திசுக்கள், கார்ட்டிளேஜ் திசுக்கள், லிகமென்ட்கள் எனப்படும் தசைநார்கள், குறுத்தெலும்புகள் ஆகியவையாகும். இவற்றில் ஏதேனும் வலி, வீக்கம், இறுக்கமான உணர்வுகள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு மூட்டு வலியாகும்.
கார்ட்டிளேஜ் திசுக்கள் மென்மையான திசுக்கள் ஆகும். இவை குழைந்து ஒரு உராய்வு விசையை மூட்டுக்களுக்குக் கொடுக்கும். இவ்வாறு செயல்படும் பொழுது கார்ட்டிளேஜ் திசுக்கள் நைந்து போக நேர்ந்தால், அவ்விடத்தில் மூட்டு எலும்புகள் குருத்தெலும்புடன் மோதும். இதனால் ஏற்படும் உராய்வு வலியாக உருவெடுக்கும். வலியை அசட்டை செய்யும் போது, அவ்வுராய்வு ஏற்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்படும். இந்த பாதிப்பபின் பெயர் தான் மூட்டு வலி ஆகும்.

லிகமென்ட்கள் சேதமடைந்தாலும் இந்த மாதிரி மூட்டு வலிகள் ஏற்படும். அதிகமான உடல் எடை, புகைப் பிடிக்கும் பழக்கம், உடலின் நோய் எதிர்ப்பு திறனில் பிரச்சனை, விபத்துக்களினால் ஏற்படும் கை, கால் எலும்புகளின் பிரச்சனைகள் இந்த பாதிப்பிற்கு அறிகுறிகளாகும். பரம்பரை நோய்களும், வயதாகுவதாலும் இந்த நோய் வருவதற்கு வழிகோலுகின்றன.
வெள்ளையணுக்களின் குறைபாட்டாலும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட அணுக்கள் மஜ்ஜையில் கலந்து விட்டால் அது மூட்டுகளை அரித்து விடும். இதனால் ஏற்படும் வீக்கத்திற்கு ரூமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று பெயர். இது இளம் வயதினரை பாதிக்கக் கூடியது.
மூட்டு வலி பாதிப்பின் அறிகுறிகள்
பெரும்பான்மை அறிகுறிகள் என்னவென்றால் வீக்கமும், வலியும் தான். சிலருக்கு அறிகுறிகள் ஒரு நாள் இருக்கும். ஒரு வாரம் இருக்காது. இவர்கள் மூட்டுக்களுக்குத் தேவையான பயிற்சிகளை செய்து வருவது நல்லது. கவனிக்கா விட்டால் இருதயம், கண், சிறுநீரகம் போன்ற உள்ளுருப்புகளுக்குப் பிரச்சனை ஏற்படும்.
குணம் பெற
மருத்துவர்கள் மூட்டு வலி உள்ளவர்களை தீர விசாரித்து, பின் பரிசோதனைகள் செய்வர். பாதிப்பிற்குள்ளானவர் அனுபவிக்கும் வலியின் அளவு, எந்த அளவிற்கு மூட்டுப் பகுதியை அசைக்க முடிகிறது என்று பரிசோதனைகள் நடக்கும். பரிசோதனைகளில் எக்ஸ் ரே சோதனையும், எம்.ஆர்.ஐ.யும் இருக்கும்.
பின் தேவைக்கேற்ப சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு, நோயின் தீவிரம் கட்டுக்குள் கொண்டுவரப் படும். சிலருக்கு நிரந்தரமாக குணம் காண முடியாது. இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பின், மூட்டு வலியின் தீவிரத்தை குறைக்க இயலும். சிலருக்கு அறுவைச் சிகிச்சையும் தேவைப்படலாம்.
மூட்டு வலி சிகிச்சையில் முக்கியமாக எல்லோராலும் விரும்பப்படுவது ஃபிசிக்கல் மற்றும் ஆக்குபேஷனல் தெரப்பி., ஆகும். ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு இது மிகுந்த பலனளிக்கும். மேலும் சரிசமவிகித உணவும், முக்கியமாக நல்ல ஓய்வுமிருந்தால் குணம் காணுவர்.
வருமுன் காக்க
1. உடலைத் தாங்கி நிற்பது கால்களே. எனவே, உடல் எடையை எப்போது கட்டுக்குள் வைப்பது நல்லது.
2. தினமும் மூட்டுப் பயிற்சிகளை குறைந்தது அரைமணி நேரம் செய்ய வேண்டும்.
3. மாதர்போகம் விஷயத்தில் அளவோடு இருக்கவும்.
4. யோகாவில் சுலபமாக தசை நார்களை தளர்த்தும் ஆசனப் பயிற்சிகள் பல உள்ளன. அவற்றை செய்து வரவும். இதனால், மூட்டுகளின் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும்.
5. எந்த ஒரு தசைப் பிரச்சனைக்கும், மூட்டுப் பிரச்சனைக்கும் சுய மருத்துவம் கூடாது.

6. பிசியோதெரபி மருத்துவத்தில், கை. கால் மூட்டுகளின் உபயோகம், இவைகளில் சின்ன பாதிப்பு ஏற்பட்டிருப்பின் அதற்கு குளிர் ஒத்தடம் மற்றும் வெப்ப ஒத்தடம் கொடுப்பது எப்படி என்று சொல்லித் தரப்படும். ஆரம்ப அறிகுறிகள் இருப்பவர்கள் இதனை பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
7. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். புகை பிடித்தலை விட வேண்டும்.
8. உணவில் வாரத்திற்கு மூன்று மூறை ஒமேகா 3 அமில உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். மீன்கள், ஃபிலாக்ஸின் விதைகள், வால்னட், முட்டை, சோயா பீன்ஸ், காலிஃப்ளவர் போன்ற உணவுகளில் ஒமேகா 3 அதிகம் உள்ளது. இதனால், மூட்டுகளுக்கு தேவையான அடிப்படை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கிடைக்கின்றன.