குளிர் பிரதேசங்களில் குறிப்பாக இந்தியாவின் வடக்கு, கிழக்குப் பகுதியில் அஸ்ஸாம், நாகலாந்து, அருணாசலம் மற்றும் காஷ்மீர், இமாசலப் பிரதேசத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டு உற்பத்தியாகும் கிவிப் பழமானது உலகிலேயே அதிகமாக நியூசிலாந்து நாட்டில் தான் உற்பத்தியாகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, சைபீரியா, சீனா, மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, கொரியா, ஜப்பான் நாடுகளில் பயிரிடப்படுகின்றது. இதன் அறிவியல் பெயர் ஆகட்னிடியா சைனன்ஸிஸ்: தாவரக் குடும்பம் ரோசேசியா ஆகும்.
கிவி பழத்தினை சைனிஸ் கூஸ் பெரி என்றும் அழைப்பார்கள். சப்போட்டாப் பழம் போன்று பெரிய பழமாக முட்டை வடிவில் காணப்படும் கிவிப்பழம் தமிழ் நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் குறைந்த அளவு பயிரிடப்படுகிறது. குளிர்ந்த சூழ்நிலையில் நன்றாக வளரக்கூடியது. கொடிகளில் காய்க்கும் படரக்கூடிய பழ மரம் இது. வீடுகளிலும் வளர்க்க இயலும். கொடிகள், கம்பிகளில் படரவிட்டு காற்றின் வேகத்துக்கு ஒடிந்து விடாமல் பார்த்துக் கொண்டால் போதும். பழங்களின் மீது நேரிடையாக வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் தேங்காத மண்ணில், தண்டு முழுவதும் மிதமான அளவில் ஈரப்பதம் இருக்க வேண்டும். நெல்லிக் கனிக்கு அடுத்து அதிக அளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. கிவிப்பழம் அனைத்து வகையான கிருமிகளால் தோன்றும் நோய்களையும் குணப்படுத்துகிறது. வைட்டமின் பி சத்து மற்றும் ஆப்பிள், பீச் பழங்களைவிட அதிக அளவில் சர்க்கரைச் சத்தும், அஸ்கார்பிக் அமிலமும் காணப்படுகின்றன. கிவிப்பழத்திலிருந்து ஜூஸ், ஸ்குவாஷ், ஜாம் தயாரித்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளமை துடிப்புடன் இருக்க விரும்புவோர் கிவிப்பழத்தை சாப்பிட வேண்டும்.