வயிற்று உப்புசம் விலக கடுகுரோகிணி

Spread the love

கடுகுரோகிணி நமது நாட்டில் உள்ள இமயமலைச் சரிவுகளில் ஏறத்தாழ 2700 முதல் 4500 மீட்டர் உயரத்தில்  இது இயற்கையாகவும், பயரிடப்பட்டு வளர்கிறது/வளர்க்கப்படுகிறது. ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் இதே குணமுடைய  ஜென்சன் மூலிகை என்ற தாவரமும் வளர்கிறது. ஆதலால் இது மறு பெயரால் மஞ்சள் ஜென்சன் என அழைக்கப்படுகிறது. இதிலுள்ள தாது உப்புக்கள் அதி நவீன மருத்துவத் துறையில் பயன்படுகிறது. இந்த மூலிகைகளின் ஒரு பிரிவிலிருந்து தான் நவீன மருத்துவத் துறையில்,   வெளி உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் மருந்தான ஜென்சன் வயலெட் என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இச்செடியானது கிழங்கு போன்ற கெட்டியான வேருடையது.  இமயமலைப் பகுதிகளிலும், குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களிலும்  இவை  கிடைக்கின்றன.  இலைகள் சிறியதாக நீண்டு பட்டைக்கத்தி போன்ற தோற்றமளிக்கும். இதன் பூவானது வெளிர் மற்றும் இளநீல நிறத்தில் இருக்கும். இதன் பழங்கள் முட்டை வடிவில் மூடிய உறை போல் காட்சியளிக்கும். இச்செடியின் வேர்ப் பகுதியும் மருத்துவ குணம் கொண்டது.

தாவரவியல் பெயர்    -Picrorhiza kurroa

தாவர குடும்பம் – பிளான்டாஜினேஸி

Plantaginaceae

மருத்துவ குணங்கள்:

இது கசப்பு தன்மை உடையது.

இது அஜீரணம் மற்றும் மலச்சிக்கலைக் குணப்படுத்தும். ஆனால் இதை அதிக அளவில் உபயோகித்தால் பேதியாகும்.

காய்ச்சல்களை குணப்படுத்தும் குணமுடையாதாக இது மலேரியா நோய்க்கும், பித்த நீரை வெளிப்படுத்துவதால் மஞ்சள் காமாலை நோக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் சுரம், பிரமேகம், காசநோய், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவற்றை குணமாக்க இது பயன்படுத்தப்படுகிறது.

யுனானி மருத்துவத்தில், சிறுநீர்ப்பையில் ஏற்படும் சிறுநீரகக் கற்களைக் கரைக்கவும், கொடிய விஷம் அருந்தினால் வாந்தி ஏற்படுத்தி விஷத்தை முறிக்கவும், பக்கவாதத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

கண் நோய் சம்பந்தப்பட்ட மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

உடல் பலவீனம், ஜீரணக் குறைவு, பசியின்மை ஆகியவற்றை நீக்கவும், கல்லீரல் மற்றும் மண்ணீரல்  சம்பந்தப்பட்ட நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தவிர மஞ்சள் காமாலை நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன் படுத்தப்படுகிறது.

இது நம் உடலின் உள் மற்றும் வெளி உறுப்புக்களை சுத்தம் செய்வதுடன் சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.

இத்தகைய மருத்துவ குணம் கொண்ட கடுகுரோகிணியின் பயனை உணர்ந்து அதனை நம் அன்றாட உணவுடன் கலந்து உண்போம்; நோயின்றி வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

மருத்துவ பலன்

இதன் சூரணத்தை எட்டு கிராம் எடுத்து அதை அரை லிட்டர் நீர் விட்டு அரைக்கால் லிட்டராக சுண்ட கஷாயமாக்கி சர்க்கரை கலந்து சாப்பிட மலச்சிக்கல் நீங்கும்.

கடுகுரோகிணி, அதிமதுரம், முந்திரிப்பழம், வேப்பமரத்தின் பட்டை, பதினெட்டு கிராம் ஆகியவற்றை  ஒரு லிட்டர் நீர் விட்டு கொதிக்க வைத்து கால் லிட்டர் வருமாறு சுண்டக்காய்ச்சி அதை சிறிதளவு காலை, மாலை பருகி வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

கடுகுரோகிணி, மிளகு, நார்த்தை காய், சந்தனக்கட்டை, சீரகம் ஆகியவற்றை நான்கு கிராம் எடுத்து  கொதிக்கும் நீரில் போட்டு மூடி வைக்க வேண்டும். குளிர்ந்த பிறகு  இதனை வடிகட்டி முப்பது மி.லி  முதல் அறுபது மிலி வரை தினமும் இரண்டு முதல் நான்கு வேளைகள் சாப்பிட, வலிப்பு, வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் குணமாகும்.

குறிப்பு:

இதன் கசப்பு சுவை காரணமாக இதை மிளகு, பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து  சாப்பிடவேண்டும்.

இவ்வளவு மருத்துவ குணங்களைக் கொண்ட கடுகுரோகிணியின் பயனை உணர்ந்து, அதை நம் அன்றாட உணவுடன் சேர்த்து நோயின்றி வாழ்வோம்.

ரா கோபால்


Spread the love