கருவேல மரங்கள் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத ஆபத்து

Spread the love

வெப்பமயமாதலால் (குளோபல் வார்மிங்) உலகமே வெந்து நொந்து நூடுல்சாகி கொண்டிருக்கிறது. மரங்களை வளர்ப்பதும், காடுகளை அழிக்காமல் பெருக்குவதும்தான் நமக்குள்ள ஒரே வழி. மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். ஆண்டுதோறும் பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடும் தலைவர்கள் எல்லாம் தங்கள் பிறவிக்கு புண்ணியம் சேர்ப்பதற்காக மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் சமூக தொண்டாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இயற்கை ஆர்வலர்கள் பலரும் மரம் வளர்த்து ‘குளோபல் வார்மிங்’கை தவிர்ப்போம் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மரம் நடுவோம் என்ற கோஷத்தோடு, மரத்தை வெட்டுங்கள் என்ற கோஷமும் எழுந்துள்ளது. அவர்கள் வெட்டச் சொல்வது நச்சுத்தன்மை உள்ள மரங்களைத்தான். அதனால், நம் மண்ணின் தன்மை காப்பாற்றப்படும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை.

அமெரிக்க தாவரவியல் பூங்கா, ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் காட்டு கருவேல மரம் தான் அது.

காட்டு கருவேல மரங்கள் வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவற்றிற்கு பாதிப்பு இல்லை. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி விடுகிறது. இப்படி உறிஞ்சி, உறிஞ்சியே நிலத்தடி நீர் வற்றிப் போனாலும் கருவேல மரத்துக்கு கவலை இல்லை. தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தை இம்மரம் உறிஞ்சிக் கொள்ளும். நிலத்தடி நீரையும், காற்றின் ஈரப்பதத்தையும் களவாடி விடும் மரம் இது.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் என்கிறார்கள். இதன் வேர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவது மட்டுமல்ல.. அந்த நீரை விஷமாகவும் மாற்றிவிடுகிறது.

மரத்தின் மிகப்பெரிய பலனே, மற்றவர்களுக்கு நிழல் தருவதுதான். ஆனால், கருவேல மரத்தின் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது. இந்த மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம், இந்த மரங்கள், பிராண வாயுவான ஆக்ஸிஜனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கின்றன. ஆனால், கார்பன் டை ஆக்சைடை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிட்டு சுற்றுப்புற காற்று மண்டலத்தையே நச்சுதன்மையாக மாற்றிவிடுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் பலருக்கும் இந்த நச்சு மரத்தின் தன்மை தெரியவில்லை. விறகுக்காக இதை வளர்க்கின்றனர். கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால், அங்கு ஒரு இடத்தில் கூட இந்த மரத்தை காண முடியாது.

மரங்கள் என்றாலே நிழல் தருபவை. மனிதர்களுக்கு மகிழ்ச்சியை தருபவை. மருத்துவ குணங்கள் மிக்கவை. இவற்றில் இருந்து முழுவதுமாக வேறுபட்டு கருவேல மரம் மனிதனுக்கு தீங்கு விளைவிப்பதையே தீர்மானமாக கொண்டுள்ளது. இந்த மரத்தை பூண்டோடு ஒழிப்பதுதான் சுற்றுச் சூழலுக்கும் மனித குலத்துக்கும் நாம் செய்யும் சேவை.

குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம், மரம் வளர்ப்பதை பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். அவர், குடியரசுத் தலைவராக இருந்தபோது கேரளாவுக்கு பயணம் செய்தார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பல மரங்களை அதிகாரிகள் வெட்டினர். அவர்களுக்கு அப்துல் கலாம் என்ன தண்டனை கொடுத்தார் தெரியுமா? வெட்டிய மரங்களைப் போல் பல மடங்கு மரங்களை நட்டு அவர்கள் பராமரிக்க வேண்டும் என்றார்.

கருவேல மரங்களை வெட்டுவோம்! அந்த இடத்தில் மனிதனுக்கு.. சுற்றுச் சூழலுக்கு பல வகையிலும் பயன்படும் பல்வேறு மரங்களை நட்டு பாதுகாப்போம்! இதுதான் மனித குலத்துக்கு நாம் செய்யும் மகத்தான சேவை. மக்கள் சேவையே மகேசன் சேவை.

ஆயுர்வேதம்.காம்


Spread the love