பொதுவாக அனைவருமே நம்மிடம் கூறுவது, கிழங்கு வகைகளை உணவில் சேர்த்து கொள்ளக் கூடாது என்று. ஆனால் நம் உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டிய ஒரே கிழங்கு கருணை கிழங்கு மட்டும் தான். நோயில் கருணை காட்டும் ஒரே கிழங்கு இந்த கருணை கிழங்கு மட்டும் தான்.
உடல் உஷ்ணம் அதிகரித்ததின் காரணமாக ஏற்படும் நோய்களில் இருந்து காக்க கூடியது, இந்த கருணை கிழங்கு. ஆகையால், கோடைகாலத்தில் கருணை கிழங்கை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
பெண்களுக்கு பெரிய தொல்லையாக இருக்கும், வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கு இந்த கருணை கிழங்கு ஒரு வரமாகும். உடல் எடை, மூலம், மூட்டு வலி போன்றவற்றிற்கு இந்த பிடி கருணை ஒரு நல்ல மருந்தாகும்.
பிடி கருணைக்குழம்பு ஊற்றி சாதம் சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும். கிராமங்களில் இந்த கருணை குழம்பு அடிக்கடி செய்து சாப்பிடுவார்கள். செய்யவதற்கும் எளிதானது என்பதால் அடிக்கடி செய்வது கிராமங்களில் வழக்கம்.
தேவையான பொருட்கள்
பிடிகருணை கால் கிலோ (வேக வைத்தது)
சின்ன வெங்காயம் 10
பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் இரண்டரை தேக்கரண்டி,
தேங்காய்ப்பால் ஒரு கப்
புளி எலுமிச்சை அளவு
சீரகம் 2 தேக்கரண்டி (வறுத்தது)
எண்ணெய் 2 மேசைக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலியை எடுத்து அதில் சிறிது எண்ணெயை விட்டு அதனுடன் சீரகம், வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், புளிக்கரைசல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து மூடி, கொதிக்க விட வேண்டும். நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பால் ஊற்றவும், பின் வேக வைத்த கிழங்கை சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்..