கற்பூரவல்லி

Spread the love

துளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லியின் மற்றொரு பெயர் ஒமவல்லி.

பசுமையான இந்த தாவரம் நல்ல கனமான, வட்டவடிவான வாசனைமிகுந்த அழகிய இலைகளை உடையது. இலை ஓரங்கள் கத்தரித்துபோல் அழகாய் இருக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். தண்டுகளை நட்டு இந்த செடியை வளர்க்கலாம். தமிழ் முனிவர் அகத்தியரால் கற்பூரவல்லியின் பயன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

சளி, கபத்திற்கு அருமருந்தான இந்த மூலிகையை பற்றி அகத்தியர் கற்பாறை யொத்து நெஞ்சில் கட்டு கபம் வாதம் போம் என்று பாடியிருக்கிறார்.

வீட்டு வைத்தியத்தில் ஜலதோஷம், இருமல் நீங்க, இரண்டு கற்பூரவல்லி இலைகளை கழுவி, நசுக்கி சாறு பிழிந்து 1/2 தேக்கரண்டி தேனுடன் உண்டால் நிவாரணம் கிடைக்கும். ஒரு இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு ஜீரணம் நன்றாக ஆகும்.

ஆயுர்வேதத்தில் உபயோகங்கள்

இலைகள் பரவலாக, அஜீரணம், ஜலதோஷம், கபம், சளி இவற்றை நீக்க குழந்தைகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

தொன்றுதொட்டு கற்பூரவல்லி இலைகள் உணவு ஜீரணக்கவும், கபம், சளி ஜூரம் குறையவும், பசி பெருகவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

சிறுநீரக நோய்கள், சிறுநீரக கற்கள் ஆஸ்துமா இவற்றுக்கும் நல்ல மருந்து.

சிறு பூச்சிக்கடிகள், ஒவ்வாமையால் தோலில் உண்டாகும் தடிப்புகள், எரிச்சல் இவற்றுக்கு இலைச்சாறு தடவப்படுகிறது. மேற்கண்டவற்றுக்கு மட்டுமில்லாமல் உணவிலும் கற்பூரவல்லியை, தென் அமெரிக்க தேசங்கள், ஜாவா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய தேசங்களில் பயன்படுத்துகிறார்கள்.

கற்பூரவல்லி இலைகளை தேங்காய், பருப்பு, மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சட்னியாக செய்து சாப்பிடலாம். உடலின் சளி நீங்க இலைகளை அரைத்து நீர்கலந்து கொதிக்க வைத்து ஏலக்காய், கிராம்பு (சிறிதளவு) மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து 3 நாட்களுக்கு தினசரி 2 வேளை பருகி வரவும். இலைகளை பஜ்ஜி போல் கடலை மாவில் தோய்த்து செய்யலாம்.

உணவு நலம் அக்டோபர் 2011

கற்பூரவல்லி, மூலிகை, ஆயுர்வேதத்தில் உபயோகங்கள், அஜீரணம், ஜலதோஷம், உணவு ஜீரணக்கவும், ஜூரம் குறையவும், பசி பெருகவும்,


Spread the love