கப பிரக்ருதிகள்

Spread the love

கடந்த அத்தியாயங்களில் வாத பித்த பிரகிருதிகளின் குணாதிசயங்களை பார்த்தோம். மூன்று தோஷங்களில் மூன்றாவதான கபப் பிரகிருதிகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.

உடலில் கபமிருக்குமிடம்

கபம் நமது உடலில் மார்பிலும், தொண்டையிலும், தலையிலும், மூட்டுக்களிலும், நாக்கிலும் அதிகமாக உள்ளது. பொதுவாக கபம் இதயத்தின் மேலிருக்கும்.

கபத்தின் ஆட்சி குழந்தைப் பருவத்தில் அதிகம் இருக்கும். கபத்தின் நேரம் அதிகாலை. கபப்பிரகிருதிகளுக்கு நீர், பூமி ஆளுமையில் இருப்பதால் சக்தியும் நல்ல உடல்வாகும் உடையவர்களாக இருப்பார்கள்.

கப குணாதிசயங்கள்

நல்ல உடல்வாகுடன், அதிக உடல் எடையுடன் இருப்பார்கள். இவர்களுக்கு சீக்கிரம் எடை கூடிவிடும். கை கால்கள் வாட்டசாட்டமாயிருக்கும்.

சர்மம் எண்ணை பசையுடன், பளபளப்பாக இருக்கும். குளிர்ந்த தேகம், தோல் மிருதுவாக இருக்கும்.

அழகான, அமைதியான முகமுடையவர்கள், சிவந்த நிறம்.

அழகிய கண்களும், அடர்ந்த புருவமும் உள்ளவர்கள். முடி கருப்பாக, எண்ணைப் பசையுடன் இருக்கும்.

அடர்த்தியான, சுருண்ட தலை முடி உள்ளவர்கள், முடி கருப்பாக, எண்ணைப் பசையுடன் இருக்கும்.

பற்கள் வரிசையாக வெண்மையாக இருக்கும். நகங்கள் வலுவாக இருக்கும்.

நல்ல உடல் பலம் உள்ளவர்கள்.

நல்ல பசியுள்ளவர்கள். கசப்பு, துவர்ப்பு, காரச் சுவையுள்ள உணவுகள் பிடிக்கும். சத்தான உணவுகளையே அதிகம் விரும்புவார்கள். நேரம் தவறாமல் சாப்பிடுவார்கள்.

ஜீரண சக்தி சராசரி பல சமயங்களில் நன்றாக இருந்தாலும் சில சமயங்களில் மந்தம்.

மலம் கழிப்பது ஒழுங்காக இருக்கும். வியர்வை சராசரி.

நன்றாக தூங்குவார்கள். எழுப்புவது தான் கஷ்டம்.

நடை கம்பீரமாக இருக்கும்.

குரல் இனிமையாக இருக்கும்.

அமைதியானவர்கள், நிறுத்தி நிதானமாக பேசுவார்கள். அதிகம் பேசமாட்டார்கள்.

தட்ப, வெப்ப நிலை மாற்றங்களால் அதிக பாதிப்பு அடையமாட்டார்கள்.

உடலுறவில் ஸ்திரமான நாட்டமும், தேவையான சக்தியும் உடையவர்கள்.

காற்றையும் வெட்பத்தையும் விரும்புபவர்கள். குளிர் ஆகாது.

நாடித்துடிப்பு மெதுவாக இருக்கும்.

புரிந்து கொள்ள நேரம் எடுத்துக் கொண்டாலும், நல்ல ஞாபக சக்தி உடையவர்கள்.

பொதுவாக, கபப்பிரகிருதிகள் சுலபமாக பணத்தை சேமிப்பார்கள். பணச் செழிப்புடையவர்கள், பணம், சொத்துக்கள் இவற்றை விரும்புவார்கள்.

ஆழ்ந்த அபிப்பிராயங்கள் உடையவர்கள், தங்கள் கருத்துக்களை பொதுவாக மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

திட்டமிட்டு நடப்பவர்கள். நன்கு உழைப்பவர்கள்.

பொறுமை சாலிகள்.

அதிக ஆயுள் உள்ளவர்கள்.

நிதானமாக ஆனால் உறுதியாக செயல்படுவார்கள்.

சாந்த குணமுடையவர்கள். படிப்பாளிகளாக இருப்பார்கள்.

கபப்பிரகிருதிகளுக்கு ஏற்ற உணவு

காரம், கசப்பு, துவர்ப்பு உள்ள உணவுகள்.

சோளம், பார்லி, கொள்ளு, பழங்கள், உலர்ந்த பழங்கள், கத்திரிக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், கீரைகள், இஞ்சி, ஒமம், கிராம்பு, மிளகு, பெருங்காயம் போன்றவை.

தவிர்க்க வேண்டியவை / குறைக்க வேண்டியவை

மாமிசம், அரிசி, கோதுமை, தேங்காய், தக்காளி, உருளைக்கிழங்கு, நெய், தேன் போன்றவை (குறைவாக பயன்படுத்தலாம்)

பகல் உறக்கம், அதிக ஒய்வு.

தாக்கும் நோய்கள்

ஜலதோஷம், நுரையீரல் நோய்கள், இருமல், முகப்பரு மற்றும் இதர தோல் வியாதிகள், மூட்டுவலி, ருமாடிஸம், சிறுநீரக பாதிப்புகள், மூளை தொற்று நோய்கள் போன்றவை வரலாம்.

நோயை தவிர்க்க உடற்பயிற்சி மேற்கொள்ளவும். பகலில் தூங்க வேண்டாம்.


Spread the love