கண்வலிக்கிழங்கு பயன்கள்

Spread the love

கண்வலிக்கிழங்கு வேலி ஓரங்களில் படர்ந்து வளரும் கொடி வகையைச் சார்ந்ததாகும். இதனை கலப்பைக் கிழங்கு என்றும் அழைப்பர் இக்கிழங்கு ‘V’ வடிவில் காணப்படும். இதன் பூ ஆரஞ்சு, மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது நான்கு மாதத்தில் பூத்து காய்ந்து விடும். வடிகால் வசதியுடைய மண், செம்மண், பொறை மண் போன்றவை இதற்கு ஏற்றதாகும். இது வறட்சியைத் தாங்கி வளரும்.

இதன் காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம்பச்சை அல்லது பழுப்பு நிறமாக மாறி காய்களின் தோல் கறுத்து காணப்படும். இதுவே காய்களை பறிக்க ஏற்ற தருணமாகும்.

இதன் பிறப்பிடம் இந்தியா. இது பிற நாடுகளான ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, மடகாஸ்கர், இலங்கை, அமரிக்கா போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது.

கண்வலிக்கிழங்கு எனப்படும் காந்தள் மலர் மருந்து செடி அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் கிழங்கு மற்றும் விதைகளில் கோல்சிசின் மற்றும் சூப்பர் டின் போன்ற மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. இதிலிருந்து மருந்து பொருட்கள் பெறப்படுகின்றது.

தாவர விவரம்

மூலிகையின் பெயர்கண்வலிக்கிழங்கு
தாவரப்பெயர்GLORIOSA SUPERBA
தாவரக்குடும்பம்LLIACEAE
வேறு பெயர்கள்கலப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு, நாபிக் கொடி, கார்த்திகை கிழங்கு, காந்தல் மலர்ச்செடி, செங்காந்தல் மலர்
பயன் தரும் பாகங்கள்விதை மற்றும் கிழங்குகள்

மருத்துவ பயன்கள்

கண்வலிக்கிழங்கு ஏழுவகை நஞ்சு பதார்த்தங்களில் ஒன்றாகும். இக்கிழங்கு வாதம், மூட்டுவலி, தொழு நோய், பேதி, பால்வினை நோய், வெண்குஷ்டம், வயிற்று உபாதைகள் மற்றும் பாம்புகடி போன்றவற்றிலிருந்து விடுபட மிகச்சிறந்த மருந்தாகும்.

இது நம் உடலிற்கு சக்தி தரும் டானிக்காகவும், தலையில் உள்ள பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் கௌட் எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

சரும நோய் நீங்க

சொரி, சிரங்கு, ஊரல், படை போன்றவை நீங்க கண்வலிக்கிழங்கு, சிறிது கருஞ்சீரகம், கார்போக அரிசி, காட்டுசீரகம், கஸ்தூரி மஞ்சள், கிளியுரம்பட்டை, கௌலா, சந்தனத்தூள் முதலியவற்றை சம அளவு எடுத்து நன்கு அரைத்து உடலில் தேய்த்து குளிக்கலாம்.

பாம்புகடி நீங்க

உலர்ந்த கிழங்கை 3 நாள் வரையில் ஊறவைத்து மெல்லியவைகளாக அரிக்கவும். பின் உப்பிட்ட மோரில் சேர்த்து இரவு முழுவதும் நன்கு ஊற வைத்து உலர்த்தவும். இவ்வாறாக ஏழு நாள் தொடர்ந்து செய்து வர  இதில் உள்ள நஞ்சு விலகும்.

பாம்பு கடித்தவர்களுக்கு இதில் ஒரு சிறிய துண்டை மென்று சாப்பிட கொடுக்கவும். இது உடலில் உள்ள விஷத்தை அரைமணி நேரத்திற்குள் வெளியேற்றுவதைக் காணலாம். இவ்வாறு செய்தும் விஷம் முரியவில்லையெனில்  3 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை சிறிய துண்டை சாப்பிட கொடுக்கவும்.

ரோகங்கள்  நீங்க

கண்வலிக்கிழங்கை நன்கு அரைத்து அதனை ஒரு மெல்லிய சேலையில் லேசாக கட்டி, ஒரு மண்பாண்டத்தில் குளிர்ந்த நீரில் வைத்து  நன்கு பிசையவும். பிசைந்த நீரில்  கலக்கி வரும் மாவு போன்ற சத்து வெளியாகும். பின் சிறிது நேரம் நீரினை  தெளிய வைக்கவும். கலங்காமல் தெளிவான  நீரை வடித்து மீண்டும் சிறிது நீர்  விட்டு நன்கு கலக்கவும். முன் போல் தெளிய வைத்து வடிக்கவும். இவ்வாறாக 7 முறை செய்து நன்கு உலர்த்தி அரைத்துச் சீசாவில் பத்திரப்படுத்தவும்.

இதனை தேகத்திற்கு ஏற்றவாறு ஒன்று அல்லது இரண்டு நேரங்கள்  கொடுத்து வர குஷ்டம், வயிற்று வலி, சன்னி, சுரம், வாத, கப சம்பந்தமான ரோகங்கள் அனைத்தும் நீங்கும். இதில் முழுமையாக சுகம் கிடைக்க வில்லையெனில் மருந்தை அதிகப்படுத்தவும்.

ஒரு சமயம் கொடுத்து அளவில் தவறாக செய்திருந்தால் தாமதப்படுத்தாமல் மிளகு கியாழத்தைக்  கொடுத்து மருந்தின் வீரியத்தை முறித்து விடலாம்.

பிரசவ பெண்களுக்கு

பிரசவ காலங்களில் நஞ்சுக்கொடி கீழ் நோக்காமல் வேதனைப்படும் பெண்களுக்கு இதன் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்றவற்றில் தடவி தண்ணீர்  கொண்டு சுத்தம் செய்யலாம்.

பக்கவாதம் நீங்க

கண்வலிக்கிழங்கு எண்ணெயை பக்கவாதம், தலைவலி, கழுத்து, நரம்புகளின் இசிவு வலி போன்ற பாதிக்கப்பட்ட  பகுதியில் தேய்த்து வர நல்ல பலனை காணலாம்.

எண்ணெய் தயாரிப்பு முறை

கண்வலிக்கிழங்கு பச்சை கிழங்காக           –      15 கிராம்

வேப்ப எண்ணெய்                          –      150 மி.லி

செய்முறை

கண்வலிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை  வேப்ப எண்ணெயுடன்  சேர்த்து சிறு தீயில் எரிக்கவும். பின் சிறிது நேரத்தில் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். நன்கு ஆறியதும் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைக்கலாம். கண்வலிக்கிழங்கு எண்ணெய் தயார்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love