நாளும் நாம் உண்ணுகின்ற உணவில் காலை உணவு ஒரு தனியிடத்தைப் பெறுகிறது. நாள் ழுழுதும் தேவைப்படும் திறனை, சக்தியை அளிக்க வல்லதாக இவ்வுணவு அமைவது அவசியம். உடலுக்குத் தேவையான புரதச் சத்தும், மாவுச்சத்தும், கனிமச் சத்தும், விட்டமின்களும் கொண்ட சமச்சீர் உணவாக இது அமைய வேண்டும்.
ஆனால் நடைமுறையில் நாம் காண்பது இதற்கு நேர்மாறாக இருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், அலுவலகம் சென்று பணிபுரிபவர்களும் காலை உணவை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. “நான் காலையில் வெறும் காபி மட்டும் தான் சாப்பிடுவேன்” என்றும், “இரண்டு இட்லி ஒரு டம்ளர் காபி, இது தான் நம்ம ப்ரேக்ஃபாஸ்ட் என்றும் பலர் சொல்ல நாம் கேள்விப்படுகிறோம். பள்ளி செல்லும் அவசரத்திலும், பஸ்ஸைப் பிடிக்க வேண்டிய பதட்டத்திலும் ஏதோ இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு ஒடுகின்றவர்களையும் நாம் அறிவோம்.
காலை உணவில் அரிசி தவிரப் பிற தானிய வகைகளும், கொட்டைகளும், பழங்களும், முட்டையும், பாலும் இடம் பெற வேண்டும். அத்துடன் காலை உணவைக் காலந்தாழ்த்தாது எடுக்க வேண்டும். குளித்துத் துவைத்து, பூஜை புனஸ்காரங்களை எல்லாம் முடித்துப் பத்து மணிக்குக் காலை உணவு எடுப்பதில் பொருளில்லை. பசியுணர்வு மிகுதியினால் மீதூண் உண்ணவும், பகல் உணவு கெடவுமே இது வழிவகுக்கும். மாறாக காலை 7.30 மணியிலிருந்து 8 மணிக்குள் காலை உணவு எடுப்பதே நல்லது.
காலை
சூர்யோதத்திற்கு 2 மணி முன்பு எழுந்திருக்க வேண்டும். இந்த சமயத்தில் ‘வாதம்‘ ஓங்கியிருக்கும். இதமான, சுத்தமான, புதிய தென்றல் காற்று வீசும் சமயம். இரண்டு டம்ளர் சுடுநீர் அருந்தி காலைக் கடன்களை கழிக்கவும். பல் தேய்த்து நாக்கை வழிக்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். யோகா, உடற்பயிற்சி இவை செய்யவும். நல்லெண்ணெய்யை உடலில் தடவி குளிக்கவும். பூஜையோ, தியானமோ 12 நிமிடங்கள் செய்யவும். நம் உடலுக்கு அதிக சூடும், குளிர்ச்சியும் இல்லாத தண்ணீரில் குளிக்கவும்.
காலை உணவு மித சூடாகவும் சத்துள்ளதாகவும் இருக்க வேண்டும். காலை உணவு மிக அவசியம். நாம் சாப்பிடும் உணவு குளுகோஸ் என்கிற சர்க்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு தேவையான எரிசக்தியாக செயல்படுகிறது. இரவு முழுவதும் தூங்கும் போது உடலில் உள்ள குளுகோஸ் 6 லிருந்து 8 மணி வரை போதுமானது அதனால் நாம் தூங்கி எழுந்தவுடன் இரவு பட்டினி என்றால் சர்க்கரை காலையில் குறைந்து விடும். மூளை சக்தியை தேடி தவிக்கும். வேறு உடல் பாகங்களிலிருந்து சர்க்கரையை இழுத்துக் கொள்ளும். இதனால் உடல் ஆரோக்கியம் பழுதடையும். எனவே, காலை உணவினால், குளுக்கோஸ் கிடைக்கப்பட்ட மூளை சரிவர இயங்குகிறது. காலை உணவை தவிர்க்கக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் காலை உணவை எடுத்துக் கொள்ளவும்.
காலை உணவு பூரணமாகவும், சத்துள்ளதாகவும் இருக்க வேண்டும். வசதியுள்ளவர்கள் ஆரஞ்சு (அ) சாத்துக்குடி, ஆப்பிள் பழச்சாறுகளை பருகி, காலை உணவை தொடங்கலாம். காலை உணவில் அவசியம் இருக்க வேண்டியவை நார்ச்சத்து மிகுந்தவை. வழக்கமான இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளுடன், தயாரிக்கப்பட்ட காலை உணவுகள் (கார்ன்ஃப்ளேக்ஸ் ஒட்ஸ் போன்றவை), முளை கட்டிய தானியங்களினால் தயாரிக்கப்பட்டவை. காரமில்லாத உணவுகள் இவற்றை சேர்த்துக் கொள்ளவும். சப்பாத்தி, நெய், கீரைகள் கலந்து செய்யப்பட்ட அடை, கோதுமை ரவை உப்புமா, பால் சாதம் போன்றவைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தங்கள் நலன் கருதி,
ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார்.