பழச்சாறுகள் அருந்துவது ஆரோக்கியமானது தான். ஆனால், ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற பழச்சாறுகள் உள்ளன. கர்ப்பிணிகள் சாப்பிடுவது முதல் வயதானவர்கள் சாப்பிட வேண்டிய பழச்சாறுகளும் உள்ளன. பழச்சாறுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல.. மருத்துவ குணமும் மிக்கது.
உங்களது தினசரி உணவுகள் பட்டியலில் இயற்கை தரும் உணவுகளில் காய்கறிகளும் பழங்களும் அதிகச் சத்துக்களை கொண்டுள்ளதால் பல வித வகைகளில் சமைத்தோ சாறு தயாரித்தோ உட்கொள்வது நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளித்து உடலும் மனசும் பலம் பெறும். அதிலும் பழவகைகளை பசுமையாக அப்படியே சாப்பிடுவது அல்லது பழச்சாறுகளாக தயாரித்து அருந்துவது மிகவும் பலன் தரும். தினசரி ஓரிரு கோப்பைகள் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டபின் ஓரிரு மாதங்கள் கழித்து அதன் அருமையை புரிந்து கொள்ள முடியும். உடலில் இரத்தம் சுத்தம் செய்யப்பட்டு, ஒவ்வொரு உறுப்புகளும் சரி செய்யப்படடு பலம் அடைந்து வெளிப்புற உறுப்புகளான தோல் பளபளப்பு, முகப் பொலிவு பெற்று புது வாழ்வு கிடைத்த உணர்வு தோன்றும். பழவகை உணவுகளை எடுத்துக் கொள்வதால் வளர்சிதை மாற்றங்களை சரி செய்யும். சிதைந்து போன, பலமிழந்த திசுக்களைச் சரி செய்து விட இயலும்.
நீரிழிவு, செரிமானக் கோளாறுகள், இரத்தபேதி, சீத பேதி, வயிற்றுக் கடுப்பு, மலச்சிக்கல், குடல் புண், வாய்வுத் தொல்லை, பித்தம் மற்றும் வாந்தி போன்றவை ஆஸ்த்துமா மற்றும் இதர நுரையீரல் சார்ந்த சிக்கல்கள் உருவாவதற்கு முதன்மையான காரணம் நமது அலட்சியப்படுத்தபட்ட மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் தான். நமது தினசரி வாழ்க்கையில் காய்கறிகள், பழங்கள் (நேரிடையாகவோ சாறாக தயாரித்தோ) உணவில் சேர்த்திருக்க தவறிவிட்டோம். இக்கட்டுரையில் நாம் எவ்வித வயதினர், எந்த அளவிற்கு பழவகைகளை சாப்பிட வேண்டும், சாறாக அருந்த வேண்டும் என்பதை தெரிவிக்கிறோம். அதுமட்டுமல்லாது ஒரு சில பழவகைகள் ஒரு சில நோய்கள் இருப்பவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பதையும் அறிந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும். கீரை மற்றும் எலுமிச்சையுடன் காரட் சாறு குளிர்காலத்தில் குடிக்கலாம். குளிர்ச்சி உடம்பு உள்ளவர்கள் மற்றும் ஜலதோஷம் பாதிப்புள்ளவர்கள் எலுமிச்சைச்சாறு தவிர்க்க வேண்டும்.
சிறுகுழந்தைகளுக்கு பழச்சாறுகள்:
சிறு குழந்தைகளின் ஜீரண சக்தியானது மிகவும் மென்மையானது. தாய்ப்பால் அல்லது பவுடர் பாலினால் அவர்கள் வளர்க்கப்படுவதால் இவ்வாறு கூறப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை திட உணவு அளித்தல் கூடாது. ஆறு மாதங்களுக்குப் பின்பு, இனிப்புள்ள எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் திராட்சைப் பழச்சாறு அல்லது நன்கு குழைவு செய்யப்பட்ட வாழைப் பழம் போன்றவற்றை அவர்களின் அன்றாட வழக்கமான உணவுகளான பால் மற்றும் சத்துமாவு உணவுகளுடன் சேர்த்து வழங்கலாம். மதியம் அல்லது மாலை வேளைகளில் மேற்கூறிய பழச்சாறினை சிறிது சூடு (இதமான மிதமான சூட்டில்) செய்து அருந்தச் செய்யலாம். அக்குழந்தை விரும்பாத எவ்வகையான உணவுகளையும் (பழச்சாறு) வலுக்கட்டாயமாக திணித்து அருந்தச் செய்யக் கூடாது.
வளரும் குழந்தைகளுக்கு பழச்சாறுகள்:
வளரும் குழந்தைகள் பசுமையான காய்கறிச் சாறுகள் மற்றும் பழச்சாறுகளை அதிக அளவு அருந்த வேண்டும். குறைந்தது தினசரி மதிய உணவு எடுப்பதற்கு ஓரிரு மணி நேர அவகாசத்திற்கு முன்பும் மாலை வேளை அவர்கள் வீடு திரும்பும் போதும் ஒரு முறையும் பழச்சாறுகள் சிறுவயது குழந்தைகள் உட்கொள்வது அவசியம். இதிலும் மேற்படி வேண்டியது என்னவெனில் பழச்சாறு மேற்கொள்ள விரும்புபவர்கள் அவர்களின் தனிப்பட்ட தேவைகள், உணவுப் பொருத்தங்களுக்கு ஏற்றவாறு உணவு அருந்தும் நேர கால அளவை மாற்றிக் கொள்ள இயலும். அதிக விலை கொண்ட காய்கறிகளிலும், பழவகைகளிலும் அதிக சத்துக்களும் இருக்கும் என்று எண்ணுகிறார்கள். இது தவறான கண்ணோட்டமாகும் உண்மையிலேயே சொல்லப் போனால் குறைந்த விலை கொண்ட காய்கறிகள், பழங்களிலும் கூட அதே அளவு சத்துக்கள் உள்ளன. நம் வாங்கும் சக்திக்கு ஏற்ப காய்கறிகள், பழங்களை பெற்று உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
டீன் ஏஜ் மற்றும் வளர்ந்த இளம் வயதினருக்குப் பழச்சாறுகள்:
12 வயதிற்குப் பின்னர் குழந்தைகளின் டீன் ஏஜ் வயது ஆரம்பித்த பின்னர் அவர்களது உடல்நிலையிலும் மனநிலையிலும் மாற்றம் காணலாம். பெண் பாலினத்தில் மாதவிலக்குச் சுழற்சியானது இளம் சிறுமியர்களிடம் பதட்டத்தை, அச்சத்தை தோற்றுவிக்கிறது. அவர்களின் உடலியல் மாற்றங்களுக்கு ஏற்ப உணவுப் பழக்க வழக்கங்கள். விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொள்ளப் படவேண்டும். டீன் ஏஜ் வயதில் உடலுக்கு அதிக அளவு காய்கறிகளும் பழங்களும் தேவைப்படுகிறது. டீன் ஏஜ் வயதினர் கண்டிப்பாக மதிய வேளையில் ஒரு கோப்பை பழ ரசம் அல்லது காய்கறிச் சாறு அருந்த வேண்டும். மதியம் மற்றும் இரவு உணவில் பசுமையான காய்கறி சூப்பாக, பழரசமாக அருந்த வேண்டும்.
மலச்சிக்கல் அடிக்கடி பிரச்சனையுள்ளவர்கள் வழக்கமாக மிதமான சூடான வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து ஒரு டம்ளர் குடித்து வர மென்மையாக மலக்குடல் இளகி நன்கு விரிவு கொடுத்து மலம் எளிதாக வெளியேற உதவும். கடுமையான மலச்சிக்கலுக்கு குணம் பெற பப்பாளிப்பழச்சாறினை அல்லது பழமாக காலை ஒரு வேளையும் மாலை அல்லது இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட்டு வரவேண்டும். அவர்கள் வெண்டைக்காய் தவிர்த்தல் நல்லது.
கர்ப்பமுற்றுள்ள தாய்மார்களுக்குப் பழச்சாறுகள்:
கர்ப்பமுற்ற பெண்களுக்கு, அவர்கள் அதிக அளவு உடற்பயிற்சியின்மை அல்லது உடல் உழைப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் கனமான செரிமானம் எளிதில் அடையாத உணவு வகைகளை, மாவு, கொழுப்பு, எண்ணெயில் வறுக்கப்பட்ட மற்றும் காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்குப் பதிலாக தாய்மையடைந்துள்ள பெண்களுக்கும் அவர்கள் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் போதுமான சத்தான உணவுகளை அறிந்து தரவேண்டியுள்ளது. திரவ வகை உணவுகளான காய்கறிச்சாறு, பழச்சாறு, பால், பருப்பு வகைகளை சிபாரிசு செய்யப்படுகிறது.
அதிகப் பட்சமாக இயன்ற அளவுக்கு அல்லது முழுவதுமாக இறைச்சி உணவுகளை தவிர்த்து விட வேண்டும். தனக்கும் தன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சேர்த்து தாய்மை அடைந்த பெண் உணவு எடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதால், தினசரி காலை, மாலை என இரு வேளையாக வேளைக்கு 250 முதல் 350 மி.லி. வரை பழச்சாறுகள் அதிக அளவு அருந்த வேண்டியது அவசியமாகிறது.
மேற்கூறிய படி ரசமானது ஆரஞ்சு, எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை, கொய்யா, தர்பூசணி, லிச்சி போன்ற பழங்களாகவோ, அப்போதுதான் பறித்த புத்தம் புதிய பசுமையான காய்கறிகளின் சாறாகவோ இருக்கலாம். சாப்பாட்டிற்கு முன்போ அல்லது பின்போ மேற்கூறிய சாறுகளை அருந்தலாம். மாம்பழச் சாறு மிக அதிக அளவு சத்துள்ள மிகவும் அருமையான பழச்சாறு ஆகும். பழரசமாக தயாரித்து அருந்த இயலாத பட்சத்தில் பழ வகைகளை நன்கு கழுவி தோலுடன் அப்படியே சாப்பிடுவதும் சிறந்தது தான்.
வயதானவர்களுக்குப் பழச்சாறுகள்:
வயதாகும் பொழுது மனிதர்களில் பெரும்பாலோனோரும் உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சளி, காய்ச்சல், மூச்சுக் கோளாறுகளான ஆஸ்துமா, நுரையீரல் சார்ந்த காச நோய், மூட்டுப் பிடிப்பு மற்றும் வலி,எலும்புக் குறைபாடுகள் போன்ற நோய்களில் ஏதாவது அல்லது ஓரிரு பாதிப்புகளினால் உடல் நலமும் மனநிலையும் செயலற்றுப் போய்விடுகிறது. உணவு ஜீரணமாவதில்லை. பசி உணர்வு காணப்படாமல், உடற்பயிற்சியில்லாமலிருத்தல் போன்றவை முக்கியமான பிரச்சனைகளாக வயதானவர்களிடம் காணப்படுகிறது.
ஒருவருக்கு ஒத்துக் கொள்ளும், பலன் தரும் பழரசம் மற்றோருவருக்கு பொருந்துவதில்லை. இதன் காரணமாகத்தான் வயதானவர்களுக்கு பழரசங்கள் இவைதான் பொருந்தும் எனக் கூற இயலுவதில்லை. எளிதில் சீரணமாகக் கூடிய திராட்சை, எலுமிச்சை, மாம்பழம், லிச்சிப்பழங்களில் நீர் அதிகம் உள்ளது. பூண்டு, கொத்தமல்லி, எலுமிச்சை, பீட்ரூட் மற்றும் கீரை இலைச்சாறுகள் வயதானவர்கள் உட்கொள்ளலாம். இறைச்சி உணவை அறவே தவிர்க்க வேண்டும். உலர் பழங்கள் சாப்பிடுவதையும் அதிக பட்சம் தவிர்க்க வேண்டும். சிறிதளவு வேண்டு மெனில் சாப்பிடலாம்.