மலர்கள் இறைவனளித்த தெய்வீக வெகுமதிகள். ரோஜா மலர்களின் அரசன் என்றால் மல்லிகை மலர்களின் அரசி. மயக்கமூட்டும் மணத்தை கொண்ட மல்லிகைப் பூ, இந்தியாவில் விளையும் 15,000 பூப்பூக்கும் தாவரங்களில் முக்கியமானது. வர்த்தக ரீதியாக மல்லிகை, விவசாயிகளுக்கு நல்ல பணம் ஈட்டித் தரும் மலர். மல்லிகை மணம் மட்டும் தருவது அல்ல, பணத்தையும் தரும்.
மல்லிகையின் விசேஷ குணம், மல்லிகையின் பிரத்யேக குணம் அது இரவில் தான் இதழ் விரித்து பூக்கும். வாசம் தரும். இரவு நேரங்களில் மல்லிகை தோட்டங்களில் அதன் மயக்கும் வாசத்தை உணரலாம். பெரும்பான்மையாக மல்லிகை மங்கைகள் தலையில் சூடிக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவத்திலும், இறைவழிபாட்டுக்கும் மல்லிகை உபயோக மாகிறது.
மல்லிகை Oleaceae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தவை இந்த குடும்பத்தில் 204 இனங்கள் உள்ளன. மல்லிகை இனத்தில் 26 வகைகள் உள்ளன. பூக்களின் தாவர இயல் பெயர்கள்
Jasminum Angustifolium – காட்டு மல்லிகை
J. Anborescens – நாகமல்லி
J. Auriculatum – ஊசி மல்லிகை, முல்லை
J. Humile – செம்மல்லிகை, இதாலிய மல்லிகை என்றும் சொல்லப்படுகிறது.
J. Multoflorum (J. Pubescens) – மகரந்தம்
J. Officinale (variety) Grandiflorum – பிச்சிப் பூ
J. Ritchief – கருமுல்லை
J. Rottlerlanum – எருமை முல்லை
J. Sambac – மல்லிகை, அரேபிய மல்லிகை, அனங்கம், புருணம் மாலதி, விசகலி, குண்டு மல்லிகை, சாதி மல்லிகை.
J. Nudiflorum – சீனா ரக மல்லிகை. ஒரே ஒரு மஞ்சள் பூ உடையது.
J. Mesnyi – இது Primrose Jasmine என்றும் சொல்லப்படுகிறது. வாசனையில்லா மல்லிகை. அதன் ‘தேனுக்காக’ பிரசித்தி பெற்றது.
தாவர விவரங்கள்
மல்லிகை ஒரு கொடி இனம். ஆங்கிலத்தில் Jasmine எனப்படும் இந்த வார்த்தை பாரசீக மொழியின் ‘யாஸ்மின்’ என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ‘யாஸ்மின்’ என்றால் வாசமுள்ள மலர் என்று பொருள். பாரசீக பெண்களுக்கு வைக்கப்படும் பொதுவான பெயர்.
மல்லிகை பாரசீகத்தில் தோன்றியது என்று சொல்லப்பட்டாலும், சில தாவிர இயல் வல்லுனர்கள், அது இந்தியாவில் (இமய மலையின் பள்ளத்தாக்குகளில்) தோன்றியிருக்கலாம் என்கின்றனர். கி.பி. 1600 ல் ஐரோப்பாவுக்கு பரவியது.
பொதுவாக மல்லிகை கொடி 3 லிருந்து 5 மீட்டர் உயரம் வளரும். வருடத்தில் 12 (அ) 24 அங்குலங்கள் வளரும். மிக அழகான கொடி. பளபளக்கும் பச்சை நிற கோள வடிவான இலைகள் – மூன்றாக இருக்கும். பல ரகங்கள் இருப்பதால் இனத்தைப் பொருத்து பூக்கள் வெள்ளை (அ) மஞ்சளாக இருக்கும். செடித்துண்டுகளை கொண்டு மல்லிகை கொடி நடப்படும். துண்டு மண்ணில் 6 அங்குலமாவது இருக்கும் படி நட வேண்டும். மண் ஈரமாக இருப்பது அவசியம். அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். உரமிட வேண்டும். நல்ல சூரிய வெளிச்சம் தேவை. அடிக்கடி கொடியை “கத்தரிக்க” வேண்டும். இதைத் தவிர்க்க, கொடி நுனிகளை கிள்ளி விடலாம். கொடியை சுற்றி களை எடுக்க வேண்டும். கொடி மேல் எழும்ப நல்ல ‘கொழுமரம்’ வேண்டும். வருடமிரு முறை பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உரமிட வேண்டும்.
ஒரு ஹெக்டேருக்கு 6000 பவுண்ட் (2721 கிலோ) பூக்கள் கிடைக்கும். ஒரு கொடிக்கு 200 கிராம் என்று வைத்துக் கொள்ளலாம். பூக்கள் சீக்கிரமே வாடி விடுவதால், பரித்தவுடனே சந்தைக்கு அனுப்ப வேண்டும். அனுபவமுள்ள ஆள், ஒரு நாளில், 10,000 – 15000 மலர்களை பறிக்க முடியும்.
மல்லிகை மலரின் பயன்கள்
மருத்துவப் பயன்கள்
ஆயுர்வேதத்தில் மல்லிகை பல மருந்துகளில் இடம் பெறுகிறது. செடியின் இலை, பூ, வேர் மூன்றும் மருத்துவத்தில் பயனாகின்றன.
J. Sambac – ரக மல்லிகை பூக்கள் பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பை நிறுத்த உதவும். அரும்புகளை ஒவ்வொரு மார்பகத்திலும் 100 கிராம் எடை அளவில், இரவில் கட்டி, காலையில் எடுக்க வேண்டும். 3 நாட்கள் இதை செய்ய வேண்டும். இந்த முறை ஊசி போட்டுக் கொள்வதை விட சிறந்த இயற்கை முறை.
இதே போல மார்பகங்களில் வீக்கம் தடிப்பு ஏற்பட்டால் மல்லிகைப் பூவை அரைத்து பூசலாம்.
மல்லிகை கொடியில் சலிசிலிக் அமிலம், லினாலூல், (Linalool) மற்றும் அல்கலாயிடுகள் (Alkaloid) முதலிய வேதிப்பொருட்கள் இருப்பதால், நரம்புகளை சமனப்படுத்த, காதல் உணர்வுகளை தூண்ட, வலியை குறைக்க மல்லிகை பயன்படுகிறது.
மல்லிகையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல பயன்களுடையது. பூவும், எண்ணெய்யும் ஆயுர்வேதத்தில் சாத்வீக குணமுடையதாக கருதப்படுகின்றன. மல்லிகை மலர் கருணை, கனிவு, காதல் உணர்வுகளை பிரதிபலிக்கும் பொருளாக மதிக்கப்படுகிறது. எனவே பெண்கள் மலரை தலையில் சூடிக் கொண்டால் காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.
மல்லிகை எண்ணெய் கர்ப்பாசிய டானிக், ஆன்டி செப்டிக் மற்றும் மனச்சோர்வை குறைக்கும் மருந்தாகும்.
மல்லிகை கொடி (J. Sambac) குளிர்ச்சியூட்டும். மனோவியாதிகள், பலவீனமான கண்கள், வாய்ப்புண்களுக்கு மருந்தாகும்.
இதர மருத்துவ குணங்கள்
காட்டு மல்லிகை, செம்மல்லிகை, பிச்சிப் பூ இவற்றின் வேர்களின் பொடியுடன், வசம்பு, எலுமிச்சம் சாறு சேர்த்து தடவ படர் தாமரை (Ring Worm) மறையும்.
ஆயுர்வேதத்தில் J. Offininale var. Grandiflora (பிச்சிப் பூ) வின் இலைகளும், பூக்களும் சிறந்த மருத்துவப் பயன்கள் உடையதாக உபயோகிக்கப்படுகிறது. வயிற்றுப் பூச்சிகளை அழிக்கவும். சிறுநீரை பெருக்கவும், ருது உண்டாக்கவும், மாதவிடாய் கோளாறுகளுக்கு மருந்தாக இவை பயன்படுகின்றன. இலைச்சாறு வாய்ப்புண்களுக்கு மருந்து.
நாகமல்லி – பூக்கள் சரும நோய்களுக்கு மருந்து. இதன் இலைச்சாறு மிளகு, பூண்டு மற்றும் இதர பொருட்களுடன் சேர்த்து நுரையீரல் கபம் வெளியேற வாந்தியை தூண்டும் மருந்தாக பயனாகிறது.
செம்மல்லிகை – பூக்கள் இதயத்திற்கு டானிக். முன்பே சொன்னபடி வேர் படர்தாமரைக்கு மருந்து. சைனஸ், பௌத்திர கோளாறுகளுக்கு செடியின் பால் போன்ற திரவம் பயனாகிறது.
கருமுல்லை – இலைகள் பல் வலிக்கும், பூக்கள் மூல வியாதிக்கும் மருந்து.
எருமை முல்லை – இலைகள் எக்சிமாவுக்கு மருந்து.
மல்லிகை பூக்களால் ஆன ஒத்தடம் கொடுக்க தலைவலி நீங்கும்.
கால் ஆணிகளை (Corns) போக்க மல்லிகை சாற்றை தடவலாம்.
மல்லிகை எண்ணெய் வாசனை சிகிச்சையில் (Aroma Therapy) முக்கியமானது. டிப்ரெஷன் (மனச்சோர்வு) நீங்க மல்லிகை எண்ணெய் மசாஜ் உதவுகிறது. மல்லிகை எண்ணெய் தயாரிக்க வெறும் பாலும் J. Grandiflorum மற்றும் J. Officinale வகைகள் பயனாகின்றன.
மல்லிகை பூக்கள் மஞ்சள் காமாலை, பாலியல் நோய்களுக்கு மருந்தாகும்.
மல்லிகை மொட்டுக்கள் அல்சர், கட்டிகள், சர்ம நோய்கள், கண்கோளாறுகள் இவற்றுக்கு மருந்தாகும்.
சித்த மருத்துவத்தில் மல்லிகை
போகமிக வுண்டாகும் பொங்குகபங் கட்பிரமை
யாகவனற் சூனியமு மண்டுமோ – பாகனையாய்
மன்னு திருவசியம் வாய்க்குஞ் சூடென்றவரும்
பன்னு மல்லிகைப்பூவாற் பார்.
மல்லிகைப்பூவினால் புணர்ச்சியில் அதிக விருப்பு உண்டாகும், இதனால் கோழை, கண் மயக்கம், சரீர உஷ்ணம், சூனியம் ஆகியவை நீங்கும். இதனால் இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
முல்லைப் பூவின் குணம்
முல்லையெனு மூசிமல்லி மொய்ந்த மலரெவர்க்கு
மொல்லை மனநோயை யொழிக்குங்காண் – மெல்ல
வழலைத் தணிக்கு மரோசகத்தைப் போக்கு
மழலைமொழி யாயறிந்து வை.
முல்லை என்கின்ற ஊசி மல்லிகை மனோவியாதிகளையும், உள்வெப்பத்தையும், உணவின் வெறுப்பையும் போக்கும்.
மல்லிகை எண்ணெய்
அரோமா தெரபி எனும் வாசனை சிகிச்சையில் மல்லிகை எண்ணெய் இன்றியமையாத பொருள். மல்லிகை மணம் இரவுகளில் ‘தூக்கலாக’ இருப்பதால் இரவில் பறிக்கப்பட்ட மலர்கள் எண்ணெய் தயாரிக்க தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஃப்ரான்ஸ், இத்தாலி, மொராக்கோ, எகிப்து, சீனா, ஜப்பான் மற்றும் துருக்கி தேசங்கள் தரமான சிறந்த மல்லிகை எண்ணெய்யை தயாரிக்கின்றன. மல்லிகை எண்ணெய் விலை உயர்ந்த வாசனை திரவியம். ஒரு பவுண்டு எண்ணெய் டாலர் 1500 லிருந்து 3000 வரை போகும். ஃபிரான்ஸ் எப்போதுமே வாசனை திரவியங்களுக்கு புகழ் பெற்ற தேசம். மல்லிகை ஃப்ரான்சின் பெரிய தொழில்களில் ஒன்று. 1000 பவுண்ட் (ஒரு பவுண்ட் 453 கிலோ) பூக்கள் ஒரு பவுண்ட் எண்ணெய் தரும். இதில் 0.2% தான் வாசனை திரவிய அணுக்கள்.
மல்லிகை எண்ணெய்யில் உள்ள வேதிப் பொருட்கள் – பெனஜில் அசிடேட், டெர்பினால், ஜாஸ்மோன், பென்சில் பென்சோயிட், லினாலூல், சில ஆல்கஹால்கள் முதலியன. மல்லிகை எண்ணெய் மனதை பதட்டப்படாமல் நிதானமாக இருக்க உதவும். குறிப்பாக மனச்சோர்வு, பிரசவ காலங்களில் ஏற்படும் மனச்சோர்வு பாதிப்புகளுக்கு மல்லிகை எண்ணெய் நல்ல சிகிச்சை மருந்து. மல்லிகை எண்ணெய் சோப்பு, ஷாம்பூ, க்ரீம்கள் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சருமத்தை காப்பதில் சிறந்த எண்ணெய்யாக பயனாகிறது.
மல்லிகை தேநீர்
மல்லிகைப்பூவால் தயாரிக்கப்பட்ட தேநீரை உட்கொள்வதால் – புற்றுநோய், உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்தல், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல், இரத்த அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் பல் சொத்தையாவதை தடுத்தல் போன்ற பல நன்மைகள் ஏற்படும்.
மல்லிகை டீ யை சுலபமாக தயாரிக்கலாம். விரிந்து மலர்ந்த பூக்களை ஒரு கப் சூடான நீரில் 10 – 15 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். இந்த மல்லிகை நீரை அப்படியே பருகலாம். இல்லை தேநீரில் சேர்த்து குடிக்கலாம்.