கரும்பு வெல்லம்

Spread the love

வெல்லம் என்று பொதுவாக நாம் சொல்வது, கரும்புச்சாறிலிருந்து எடுக்கப்படும் வெல்லத்தை தான். ஆனால் பனை மரத்திலிருந்தும், பேரீச்சமரத்திலிருந்தும் கூட, நல்ல தரமான வெல்லம் கிடைக்கிறது. ஏன், ஜவ்வரிசி மரம், தென்னை மரத்திலிருந்தும் எடுக்கப்படும் மரச்சாற்றிலிருந்து வெல்லம் கிடைக்கும்.

கரும்பு வெல்லம்:-

கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாறிலிருந்து வெல்லமும், சர்க்கரையும் கிடைக்கின்றன. வெல்லம் நீர் பசையின்றி கெட்டியாக காய்ச்சப்பட்ட கரும்புச் சாறிலிருந்து கிடைக்கும். கரும்புச்சாற்றை காய்ச்சும் போது, கெட்டி வெல்லமாகும் பதத்திற்கு முன்பே இறக்கப்பட்ட வெல்லம் ‘இளம்பத வெல்லம்’ எனப்படும். இந்த இளம் பதம் மருந்துகளில் பயன்படும். வெல்லப் பாகை விட எளிதில் ஜீரணமாகும்.

கருப்பஞ்சாறு சுண்ட காய்ச்சப்படும் போது, வெல்லம் கெட்டியாக கிடைக்காது வெல்லப்பாகை அச்சுக் குழிகளில் ஊற்றாமல், பலகையில் ஊற்றித் தேய்த்தால் சர்க்கரை கிடைக்கிறது. பாகின் அழுக்கை நீக்கி, ரசாயன கலவைகளை சேர்த்து, வெளுப்பான கல்கண்டு, டைமன்ட் கல்கண்டு தயாரிக்கப்படுகிறது.

‘கரும்பு’ வெல்லம் – வயிற்றில் வாய்வு சேர்வதை தடுக்கும். புஷ்டி தரும். சிறுநீரை பெருக்கும். ஆனால் வயிற்றில் புழுக்களை உண்டாக்கும். கிருமி உள்ளவர்களுக்கு வெல்லம் ஏற்றதல்ல. சித்த வைத்தியத்தின் பாட்டு ஒன்று வெல்லத்தின் குணத்தை விவரிக்கிறது.

          குன்ம பித்தம் போக்குமதி கோழைதனை யுண்டாக்குந்

          துன்மலத்துட் கீடத்தைத் தோற்றுவிக்கும் – நன்மைபோல்

          மெல்லமது நீரை விளைவிக்கு மாமதுர

          வெல்லமென நாளும் விளம்பு.


Spread the love