உலகிலேயே அதிக எடையுள்ள பழங்களை தரவல்லது பலாமரம். ஒரு கிலோவிலிருந்து நூறு கிலோவிற்கு மேலான எடையுள்ள பழங்களை கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் விளைகின்றது. நட்ட 3 ஆண்டுகள் முதல் 300 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரும்.ஒரு வளர்ந்த பெரிய மரம் 750 பழங்களுக்கு மேலாக காய்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.
முதிர்ந்த ஒரு மரம் சுற்றளவினை பொறுத்து. அதிகபட்சமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை விலையாகிறது. பலா, பிஞ்சு நிலையிலும், முற்றாத நிலையிலும், கறி உணவாகவும், முற்றிய பின் பழமாகவும், கொட்டை உணவுப் பண்டங்களை தயாரிக்கவும் உதவுகிறது.
கால்நடைகளுக்கு தீவனம் தருகிறது. பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட பலா தோப்பிலிருந்து ஒரு எக்டரில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் வருமானம் கிடைக்கிறது. சுவையான பலாச்சுளையை சாப்பிட ஆரம்பித்தால் நம்மை அறியாமலே அரை கிலோ (10) சுளைவிற்கு மேல் சாப்பிடத் தூண்டும்.
ஏழைகளின் உணவாகிறது. பிற பழங்களை விட பன்மடங்கு சத்துக்கள் செறிந்தது. நூற்றுக்கும் மேலான உணவுப் பண்டங்கள் செய்திட ஆதாரமாக உள்ளது. பலா, அல்வா, சிப்ஸ், ஐஸ்கிரீம், வற்றல்கள், ஊறுகாய், பழவற்றல், வருவல்கள், பழச்சாறு, பலாமிட்டாய், பலா புட்டு, பலா பன், பலா பிரியாணி, பலாக் கொட்டை மாவு, பலா ஜாம், பலா பாயாசம், பலா ஒயின், பலா பொறியல், பலா கொழுக்கட்டை, விநாயகருக்கு படைக்கும் மோதகம், எனும் இனிப்பு பண்டம் என பல நூறாகிறது.
பலாப் பழத்தினை, இனிப்புக்காகவும், நிறத்திற்காகவும், வாசனைக்காகவும், தகுந்த அளவில் சேர்த்து செயற்கை வாசனைப் பொருட்கள், செயற்கை நிறமிகள் சேர்ப்பதை தவிர்த்து பேக்கரி உணவுப் பொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளில் சேர்க்கலாம்.
பலாவின் புரதம், கொழுப்பு, மாவுச் சத்துடன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி , செறிந்ததாக உள்ளது. இது பல்வேறு உடல் உபாதைகளுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. பலா தொழில் முனைவோருக்கு பிரகாசமான வாய்ப்பினையும், வேலை தேடுவோருக்கு வேலை வாய்ப்பினையும் தரக்கூடியது. முற்றிய பலா மரத்திலிருந்து வீடு கட்ட தேவையான சட்டங்கள், ஜன்னல்கள், கதவுப்பலகை மிருதங்கள், தபேலே போன்ற இசைக்கருவிகள் செய்திட உதவுகிறது. பலாவினை பராமரிக்கவும் அறுவடை செய்யவும் குறைந்த வேலையாட்கள் போதுமானது. அவசர பண தேவைக்கு 20 ஆண்டுக்கு மேற்பட்ட பலா மரத்தினை விற்று உடன் பணமாக்கலாம். பலாவிலிருந்து களையாகவும், மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாகவும் மாற்றி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணி ஈட்டும் மரமாக உள்ளது. ஒட்டு மொத்தத்தில் பலா ஒரு பல்வேறு சவால்களுக்கும் தீர்வளிக்கும் ஒரு தாவரமாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தரும், உணவுப் பாதுகாப்பு தரும், இயற்கை இடர்பாடுகளை தாங்கி வளரும், ஏழைகளின் பாதுகாவலன், பலாஎன்றால் மிகையாகாது.
தமிழ்நாட்டில் பலா ரகங்கள்
பாலூர் 1
பாலூர் 2
பர்லியார் 1
பேச்சிப்பாறை 1
சிங்கப்பூர் பலா
இவற்றுள், பாலூர்1, பர்லியார்1, பேச்சிப்பாறை1 மற்றும் சிங்கப்பூர் பலா ஆண்டிற்கு இரு பருவங்களில் காய்ப்பினை தரவல்ல ரகங்களாகும். அதிக மகசூல் தருவதிலும் அதிக லாபம் தருவதிலும். சத்து செறிந்த பழங்களை தருவதிலும், விலை மதிப்புள்ள மற்றும் அறுவடை மிகுந்த சந்தை வாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஏழைகளின் உணவு ஆதாரமாக இருப்பதிலும், பலா மரத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பது வெளிச்சம்.
ஆண்டு முழுவதும் பலாப்பழம்
பலாப்பழம் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அதிக அளவில் அறுவடை தரும் பருவம். பின் பருவ அறுவடை ஆகஸ்டு வரை நீடிக்கும். தற்போது ஆண்டுக்கு இரண்டு முறை காய்த்து பலன் தரக்கூடிய இரகங்கள் சாகுபடியில் உள்ளது. பண்ருட்டி பகுதியில் சில மரங்கள் பருவத்திற்கு முன்னதாகவே காய்க்கும் குணாதியங்களை கொண்டுள்ளது.
சில மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை ஆகஸ்டு மாதங்களில் தான் முற்றிய காய்களைத் தரும் குணத்தை கொண்டு உள்ளது. இவ்வாறு ஒரு தோப்பில் ஏதாவது ஒரு மரத்தில் பிஞ்சு, காய் என ஆண்டு முழுவதும் பலாக்காய் கிடைப்பதை காண்கிறோம்.
இன்றைய தேவை
பலாப்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கச் செய்திடும் வகையில் ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் முற்றிய பழங்களைத் தரும். பின் பருவ மரங்களை அடையாளம் கண்டு புதிய ரகங்கள் வெளிவர வேண்டும் அதற்கான ஆராய்ச்சிகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.