உலகிலேயே பெரிய பழம் பலாப்பழம் தான். குறைந்த பட்சம் 25 செ.மீ. சுற்றளவு இருக்கும். மெலிந்த 10 செ.மீ. சுற்றளவு உள்ள பலாமரங்கள் கூட பெரிய அளவு பழங்களை தரும். பலாப்பழம் 36 கிலோ எடை, 90 செ.மீ. நீளம், 50 செ.மீ. சுற்றளவு இந்த அளவுகளை எட்டியிருக்கிறது.
முக்கனிகளில் ஒன்றானாலும், மற்ற இரண்டு கனிகளான மாம்பழம், வாழைப்பழம் போல பலாப்பழம் அதிகமாக உண்ணப்படுவதில்லை. காரணம் அதிக அளவு பலாப்பழம் வயிற்றுக்கோளாறுகளை உண்டாக்கும் என்ற கருத்துதான்.
பலாப்பழத்தின் தாயகங்கள் இந்தியா, பங்களாதேஷ், நேபால், ஸ்ரீலங்கா, பசிபிக் தீவான ஹவாய் மற்றும் தென்அமெரிக்க பிரேசில், ஆப்ரிக்காவில் சுரிநாம், மடகாஸ்கார், மேற்கிந்திய தீவுகள் போன்ற இடங்களிலும் பலாப்பழம் விளைகிறது. பிரேசிலை பொறுத்தவரை, பலாமரம் ஒரு தொல்லை கொடுக்கும் தாவரமாகிவிட்டது. ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள தியூகா தேசிய பூங்காவில் (Tijica National Park) வளர்க்கப்பட்ட பலா மரங்கள், அபரிமிதமாக பெருகின. கீழே விழுந்து பிளந்த பழங்களை அங்குள்ள மர்மோசெட் (அடர்த்தியான வாலுடைய சிறிய குரங்கு போன்றது) மற்றும் கோயாடி (Coati) விலங்குகள் ஆர்வமாக உண்டு, பலாமர இனப்பெருக்கத்தை அதிகமாக்கின. இதனால் மற்ற மரங்களுக்கு இடத்தட்டுபாடுஏற்பட்டது. தவிர பலாபழத்தை உண்ணும் இரண்டு விலங்குகளும் பறவை குஞ்சுகள், முட்டைகளை உண்பவை. அதிகமாக இனப்பெருக்கம் செய்த இந்த விலங்குகளால் பறவை இனம் அழியத்தொடங்கியது. எனவே 2002 – 2007 வருடங்களில் 55, 662 பலாச்செடிகள், பிரேசிலில், அழிக்கப்பட்டன.
தொல் பொருள் ஆராய்ச்சியின் படி இந்தியாவில் 3000 – 6000 வருடங்களுக்கு முன்பே பலாமரம் பயிரிடப்பட்டுவந்திருக்கிறது. வராஹமீத்ரர், அவரது “பிருஹத் சம்ஹிதை”யில் பலாமரத்தை பற்றி ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறார். தற்போது இந்தியாவில், அஸ்ஸாம் மாநிலம் பலாப்பழ உற்பத்தியின் முதலிடம் வகிக்கிறது.
பலாப்பழத்தின் தோல் கரடுமுரடாக முள்ளுடன் கூடியது. உள்ளே உள்ள சுளைகள் மஞ்சள் நிறமாக இனிப்பாக இருக்கும். நார்ச்சத்தும், ஸ்டாச்சும் உள்ளவை. பலாபழத்தின் சுளைகளின் உள்ளே உள்ள விதை (பலாக்கொட்டை) சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
பலாமரம் காடுகளில் தானாகவே வளரும். வீடு / தோட்டங்களிலும் வளர்க்கலாம். 3-8 ஆண்டில் பலன்தரும். வருடத்தில் 6 மாதம் பழங்களை தரும். பலாமரத்திற்கு பனி ஆகாது. பங்களாதேஷ், இந்தோனேஷியா வின் “தேசிய” பழம் பலாப்பழம். பயன்படும் பாகங்கள் – இலை, காய், பழம், விதை, பால், வேர்.
100 கிராம் பலாப்பழத்தின் உள்ளவை
ஈரம் – 76.2கி, புரதம் – 1.9கி, கொழுப்பு – 0.1கி, தாதுப்பொருட்கள் – 0.9கி, நார்ச்சத்து – 1.1கி, கார்போஹட்ரேட் – 19.8கி, கால்சியம் – 20மி.கி, பாஸ்பரஸ் – 41மி.கி, இரும்பு – 0.56மி.கி, கரோட்டின் – 175ம்யூகி, தியாமின் – 0.03மி.கி, ரிபோப்லாவின் – 0.13மி.கி, நியாசின் – 0.4மி.கி, வைட்டமின் ‘சி‘ – 7மி.கி, இவை தவிர பல தாதுப் பொருட்களும் பலாப்பழத்தில் உள்ளன.
பொதுக்குணங்கள்
இலை, காய், விதை, பால், வேர்- துவர்பூட்டும், பழம்- மலமிளக்கி, உள்ளழல் ஆற்றும், உடலுரமாக்கும்.
பயன்கள்
இலை-குன்ம நோயை போக்கும்.
பிஞ்சு-தாகம் அடங்கும். ஆண்மையை உண்டாக்கும் இலைக்கொழுந்தை அரைத்து சிரங்குகளுக்கு பூச அவை மறையும். செரியாமை ஏற்படும்.
காய்-ஆண்மையை தரும். வாயுவை பெருக்கும். இருமலை உண்டாக்கலாம்.
பழம்- நரம்புத்தளர்ச்சிக்கு நல்லது. மூளை நரம்புகளை பலப்படுத்தும். தசைகளை வலிமையாக்கும். விந்து, சிறுநீர் இவற்றை பெருக்கும். கண்பார்வையை சீராக்கும். ஆனால் அதிகம் உண்டால் ஜீரணமாவது கஷ்டம். உடல் பளபளப்பாகும்.
விதை- கொட்டைகளை சாம்பாருடன் சேர்த்து அல்லது வேகவைத்து அல்லது சுட்டு உண்ணலாம். ஆனால் உடலுக்கு ஏற்றதல்ல என்கிறது சித்த வைத்தியம்.
பால்- பலாமரத்திலிருந்து எடுக்கப்படும் பால் பசை உள்ளது. வீக்கங்களில் தடவலாம். கட்டிகளை விரைவில் பழுத்து, உடையவும் உபயோகிக்கலாம்.
வேர்- வேரை அரைத்து சொறி சிரங்குகளுக்கு பூச அவை மறையும்.
இதரபயன்கள்
பலாமரம்-இசைக் கருவிகள் செய்ய பயன்படுகிறது. மிருதங்கம், கஞ்சிராவின் ‘உடல்‘ பாகங்கள் பலாமரத்தால் செய்யப்படுகின்றன. இதர ஃபர்னிச்சர், கதவு – ஜன்னல் சட்டங்கள் செய்யவும் பயனாகிறது.
பழம்- பாயசம், ஜாம், அல்வா ‘சிப்ஸ்‘ செய்ய பயனாகிறது. நூற்றுக்கணக்கான உணவு பதார்த்தங்களை செய்யலாம். சில – பிரசித்தி பெற்ற கேரள “சக்கப் பிரதமன்”, பல “உடுப்பி” ஆகாரங்கள் (கரியோ அல்வா, சாத்), ஃபனாஸ் போளி (கொங்கன்), ஸ்டார்ச் நிறைந்த பலாப்பழம் அரிசிக்கு பதிலாக ஸ்ரீலங்காவின் உபயோகமாகிறது. இதனால் “அரிசிமரம்” என்று பலாமரம் குறிப்பிடப்படுகிறது. பலாப்பழத்தை பாலுடன் சேர்த்து உண்ண வேண்டாம் என்கிறது ஆயுர்வேதம்.
காய்- பலாப்பிஞ்சு (இதை பலா மூசு என்பார்கள்) சமையலில் “கறி” செய்ய ஏற்றது. சமைத்தால் இதன் சுவை அபாரம். உத்திரபிரதேசத்தில் கதல்சப்ஜீ, கர்நாடகத்தில் கிட்டே, கேரளத்தில் சக்க அவியல், சக்க ஏரிசேறி, போன்ற பல சுவையான உணவுகள் பழுக்காத பலாக்காயிலிருந்து செய்யப்படுகின்றன.
இலை- இலையிலிருந்து மஞ்சள் நிற சாயம் எடுக்கலாம். கால்நடை தீவனமாகவும் பயனாகிறது.
பால்- ஓட்டும் பிசினாக பயன்படுகிறது.
குறிப்பு- பலாப்பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டால் சீக்கிரமாக ஜீரணமாகும். அதிக பலன் கிடைக்கும்.
பலாப்பழ சமையல்
இந்த சுவையான பலாப்பழ இனிப்பை செய்யு முன், பலாப்பழ ‘ஜாம்‘ தயார் செய்து கொள்ள வேண்டும்.
பலாப்பழ ஜாம்
தேவையான பொருட்கள்
பலாப்பழ துண்டுகள் –10
தேங்காய் துருவல் –1-2டே.ஸ்பூன்
ஏலக்காய் பொடி –1டீஸ்பூன்
நெய் –2டீஸ்பூன்
வெல்லம் -தேவையான அளவு
செய்முறையான பொருட்கள்
பலாச்சுளைகளை தண்ணீர் சேர்க்காமல், மிக்ஸியில் விழுதாக்கி கொள்ளவும்.
இதற்கு சமமான அளவு வெல்லப்பொடியை எடுத்து, ஒரு பாத்திரத்தில் 2-3 மே.கரண்டி தண்ணீர் விட்டு வெல்லத்தை போட்டு காய்ச்சவும்.
வெல்லம் கரையும் போது மேலேறும் அழுக்கை கரண்டியால் எடுக்கவும. இல்லை வடிகட்டவும்.
இந்த வெல்லத்துடன் பலாப்பழ விழுதை சேர்த்து கலக்கவும்.
நெய் தடவிய மைக்ரோவேவ் பாத்திரத்திலிட்டு மைக்ரோவேவ் அடுப்பில் 10 நிமிடம் “ஹை” யில் வைக்கவும். நடு நடுவே கிளறவும்.
பதம் கோதுமை அல்வா போல் வந்ததும், தேங்காய், நெய் சேர்க்கவும்.நன்றாக வெந்தவுடன் ஏலப்பொடி சேர்க்கவும்.
இதை எடுத்து ஃபிரிட்ஜ்ஜில் வைத்துக் கொள்ளவும். 2 வாரங்கள் வரை வைக்கலாம். இதை ஜாம் போல் உபயோகிக்கலாம். சக்கப் பாயசம் செய்யவும் பயன்படுத்தலாம் சக்கப்பாயசம்.
சக்கப் பாயாசம்
தேவையான பொருட்கள்
பலாப்பழ ஜாம் (ஏற்கனவே செய்து வைத்தது)-1/2கப்
வெல்லம் –2டே.ஸ்பூன்
தண்ணீர் –1/4கப்
தேங்காய்ப் பால் –2கப்
ஏலக்காய்ப் பொடி –1டீஸ்பூன்
முந்திரி நெய்யில் வறுத்தது-2டே.ஸ்பூன்
செய்முறை
வெல்லத்தை தண்ணீரில் விட்டு சுட வைத்து கரைக்கவும். அழுக்கை நீக்கவும். இத்துடன் பலாப்பழ ஜாமை சேர்த்து கலக்கவும். இந்த கலவை கொதித்தவுடன் தீயை குறைத்து தேங்காய்ப்பாலில் சேர்க்கவும்.
குறைந்த தீயில் இந்த கலவையை வேக வைக்கவும். அடிக்கடி கிளறவும். இல்லாவிட்டால் தேங்காய்ப்பால் திரிந்து விடும். தீயை அணைத்து ஏலக்காய்ப் பொடி முந்திரி அல்லது தேங்காய்த் துண்டுகளை சேர்க்கவும்.
சக்க அவியல்
தேவையான பொருட்கள்
பலாக்காய் பிஞ்சு –1கப்
மஞ்சள் பொடி –1சிட்டிகை
மிளகாய்ப்பொடி –1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் –1/2கப்
சீரகம் –1/2டீஸ்பூன்
பூண்டு –1பல்
புளி (களிம்பு) –1/2 டீஸ்பூன்
எண்ணெய் –1டீஸ்பூன்
கருவேப்பிலை, உப்பு -தேவைக்கேற்ப
செய்முறை
பலாக்காய் சுளைகளை மெல்லிய நீண்ட துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதை தண்ணீரில் மஞ்சள் பொடி, உப்பு போட்டு வேக வைக்கவும்.
தேங்காய் துருவல், மிளகாய் பொடி, சீரகம், பூண்டு, கொஞ்சம் கருவேப்பிலை இவற்றை குறைந்த தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
பலா சுளைகள் வெந்தவுடன் இந்த கலவையையும், புளியையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
ஐந்து நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும். அடிக்கடி கிளறவும். தேங்காய் எண்ணெய் சேர்த்து மீதியுள்ள கருவேப்பிலையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும்.