மூலிகைத் தாவரங்களில் முற்றிலும் வேறுபட்டது இசப்கல். இதன் பிரதானப் பயனே நார்ச்சத்து தான். ஆரோக்கியமான உடலுக்கு நார்ச்சத்து இன்றியமையாததாகும். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 32 கிராம் நார்ச்சத்து தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் உணவு ஜீரணிக்க உடல் பருமன் குறைய, முக்கியமாக ஆரோக்கியமான இருதயத்திற்கும் இது மிகவும் உதவுகின்றது. என்றாலும் தற்போது தினசரி ஒரு நபருக்கு தேவைப்படும் நார்ச்சத்தில் பாதி அளவு கூடக் கிடைப்பதில்லை.
நார்ச்சத்தில் கரையக் கூடியது மற்றும் கரையக் கூடாத இரு வகைகள் உள்ளன. கரையக் கூடிய நார்ச்சத்து நீரை உறிஞ்சி ஜவ்வரிசி (ஜெல்) போன்ற பொருளாகி வயிற்றில் உள்ள உணவுப்பொருள், இனிப்புச் சத்து, கொலஸ்ட்ரால் ஆகியவற்றை சுற்றி குடல்வழியாக எடுத்துச் சென்று வெளியேற்றுகிறது. இசப்கல் விதைகளில் அதிக அளவு கரையக் கூடிய நார்ச்சத்து உள்ளது.
கரையாத நார்ச்சத்து நீரில் கரையாது. அது முழுமையாக குடல் வழியாக அசுத்தங்களை வெளியேற்ற உதவுகிறது. இசப்கல் விதைகளில் தேவையான அளவு கரையாத நார்ச்சத்தும் உள்ளது. நார்ச்சத்துக்கு கலோரியும் கிடையாது. செரிமானமாகாததால் உடலுக்குள் உறிஞ்சப்படுவதும் இல்லை. மிருகங்களிலிருந்து கிடைக்கும் மாமிசம், முட்டை, பால், பாலாடை போன்றவற்றில் நார்ச்சத்து கிடையாது.
நார்ச்சத்தில் உடல் ஆரோக்கியத்துக்கான பல அனுகூலங்கள் உள்ளது. முக்கியமாக இசப்கல் விதையிலுள்ள கரையாத நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கி, மலமிளக்கியாக செயல்படுகிறது. இதிலுள்ள கரையக் கூடிய நார்ச்சத்தானது கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடை செய்வதன் மூலம் இருதயத்தைப் பலப்படுத்துகின்றது. மேலும் இது வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்ச்சியைத் தருவதால், தேவையற்ற அதிகப்படியான உணவு உட்கொள்வதைத் தடை செய்கின்றது.
இசப்கல் விதைகள் மெல்லியதாகவும் இளஞ்சிகப்பு நிறத்திலும் இருக்கும். விதைகளைச் சுற்றியுள்ள உமி போன்ற மேல் தோல் பகுதியே மருத்துவத்தில் பயன்படுகிறது. இது முக்கியமாக சிறுநீரகம் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், மூல நோய், மலச்சிக்கல், குடல்புண் ஆகியவற்றை குணப்படுத்த உபயோகிக்கப்படுகிறது. மேலும் உடல் பருமனைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது. இதிலுள்ள பஞ்சு போன்ற நார்ச்சத்தானது பசியைக் குறைத்து, செரிமானத்தை அதிகரித்து, குறைவான கார்போஹைட்ரேட் உணவில் நார்ச்சத்தின் குறைபாட்டை நீக்குகின்றது.
ஒவ்வொரு 100 கிராம் உமி போன்ற மேல் தோலிலும் 71 கிராம் கரையக் கூடிய நார்ச்சத்து உள்ளது. இதே அளவு ஓட்ஸ் தானியத்தில் கரையக் கூடிய நார்ச்சத்து 5 கிராம் மட்டுமே உள்ளது.
இசப்கல் மலச்சிக்கல், ஆசனவாயில் உள்ள வெடிப்புகள் (Fissures), குடல் அல்சர், இரத்தப் போக்கு, மகப்பேறு நேரம் ஆகிய பிரச்சனைகளில் வலி குறைத்து, சுகம் கிடைக்க உதவுகிறது. மேலும் அதிக கொலஸ்ட்ரால், ஆசனவாய் புற்றுநோய், அதிக இரத்த அழுத்தம், இதயநோய்கள், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கும் ஒரு அரிய மருந்தாக உதவுகின்றது.
ஆர்கானிக் இந்தியா இதனை சிறிய கேப்சூல் வடிவில் விற்பனை செய்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு கேப்சூல் மட்டுமே போதுமானது. இசப்கல் பவுடர் வடிவத்திலும் கிடைக்கின்றது. இதனை தண்ணீரில் கலந்தவுடன் இது ஜவ்வரிசி போன்று பெரிதாகி விடும். எனவே, தண்ணீரில் கரைத்தவுடன் குடித்து விட வேண்டும்.
இதற்கு எந்தவித எதிர் விளைவுகளும் கிடையாது. ஆகவே, இதனை தினசரி யாவரும் பயன்படுத்தலாம். இரவில் படுக்கப் போகுமுன் 1/2 டம்ளர் நீரில் 1 ஸ்பூன் இசப்கல் கலந்து குடிக்கலாம். மேலும், தண்ணீர் குடிப்பது நல்லது.
இரத்தத்தில் சர்க்கரை சத்தின் அளவை குறைப்பதில் பிரச்சனை உள்ளவர்களும், குடலில் அடைப்போ அல்லது குடல் ஒடுங்கியோ உள்ளவர்களும் அதனை உபயோகிக்கக் கூடாது.