இன்ஸ்டன்ட் உலகத்தில் இன்றியமையாத தாக மாறிவிட்ட நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு என்கிறது சமீபத்தில் வந்த ஒரு ஆய்வு. இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார் அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. இவர் இன்சைட் என்கிற நுகர்வோர் விழிப்புணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.
ஏகப்பட்ட விளம்பரங்களால் இந்தியச் சந்தையை எண்ணற்ற வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாகி விட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவு தானா என்கிற கேள்விக்கு விடை காண விரும்பினார் ப்ரீத்தி ஷா.
இந்திய அளவில் முன்னணியில் உள்ள நூடுல்ஸ் நிறுவனங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நூடுல்ஸ் இவ்வளவு சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டும் என்கிற எந்த ஒரு வரையறையும் இந்தியாவில் வரையறுக்கப் படாததால், இங்கிலாந்தின் உணவு தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ப்ரீத்தி ஷா.
ஆய்வு சொல்லும் உண்மைகள்
சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்சும் அதில் இருக்க வேண்டிய குறிப்பிட்ட சத்துக்களோ அல்லது குழந்தைகள் உண்பதற்கு ஏற்றதாகவோ இல்லை என்று தெரிய வந்துள்ளது.
அனைத்து நூடுல்ஸ்களும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக மடங்கு உப்பு மற்றும் கொழுப்பு கலந்து உள்ளன.
நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மிலி கிராம் வரை சோடியம் அனுமதிக்கப்பட்ட அளவாகும்.
ஆனால் இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட நூடுல்ஸ் நிறுவனங்களில் 821 முதல் 1943 மிகி வரை சோடியம் இருந்திருக்கிறது.
கொழுப்பும் மிகுதி ஆனால், மற்ற சத்துக்களோ சொல்வதை விட குறைந்த அளவில் உள்ளன.
இதனால் இரத்த நாளங்களில் கொழுப்பு படிதல் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும் எனவும் ஆய்வு சொல்கிறது.
அ. பாரதி