உணவுகளால் காதல் உணர்வை தூண்ட முடியுமா?

Spread the love

உணவு, உடை இவற்றுக்கு அடுத்த படியாக மனிதனுக்கு தேவையானது உடலுறவு. நமது முன்னோர்களுக்கு உடலுறவின் முக்கியத்துவம் நன்கு தெரிந்திருந்தது. சரகசம்ஹிதையின் எட்டு மருத்துவ சிகிச்சை பிரிவுகளில் பாலியலுக்கு தனிப்பிரிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. வாஜீகர்ணம் எனும் வீரியத்தை பெருக்கும் சிகிச்சை முறை ஆயுர்வேதத்திற்கே உரிய பிரத்யேக சிகிச்சை.

ஆயுர்வேத ஆசனான சரகர் “சிறந்த பாலுணர்வு ஊக்கி, ஆசை நிறைந்த பெண் தான்” என்கிறார். ஆணின் ஐம்புலன்களையும் பெண்ணால் தூண்டி விட முடியும். எனவே ஒரு அழகான, அன்பான சரியான வயதுடைய, ஆயகலைகள் 64ல் தேர்ந்த பெண் தான் சிறந்த ஆண்மை பெருக்கி. ஆயுர்வேதத்தில் ஆண்மையை பெருக்க பல தயாரிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில இந்த கால நடைமுறைக்கு ஏற்றவை அல்ல. ஆனால் பல தயாரிப்புகள், மூலிகைகள் இப்போதும் பயன்படும். தற்போது பாலியல் குறைபாடுகளை நீக்கவல்ல பல ஆயுர்வேத மருந்துகள் தாராளமாக கிடைக்கின்றன.

வீரியமின்மை, விந்து முந்துதல், நரம்புத்தளர்ச்சி முதலியவற்றுக்கு

பால் – முதலிரவில் பால் சொம்புடன் படுக்கை அறைக்குள் புது மனைவி நுழைவதை எவ்வளவு தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கிறோம்! உடலுறவுக்கு முன்னும் பின்னும் பாலருந்துவதை ஆயுர்வேத ஆசான் சரகர் ஆமோதிக்கிறார். ஆயுர்வேதத்தில் பால் என்றாலே பசும் பால் தான்! எட்டு வகை பால்களை பசு, எருமை, ஒட்டகம், பெண் குதிரை, கழுதை, வெள்ளாடு, செம்மறியாடு, பெண் யானை – இவைகளின் பால்கள் விவரிக்கப்படுகின்றன. தாய்ப்பாலைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பால்களில் சிறந்தது பசும் பால் தான் என்கிறது ஆயுர்வேதம். அதுவும் சரியான ‘சுழிகளுடன்’, பிரத்யேக உணவால் வளர்க்கப்பட்ட பசுவின் பால் உன்னதமானது. தினந்தோறும் சிறு துண்டுகளாக வெட்டிய 2 (அ) 4 பேரிச்சம்பழங்களை போட்டு காய்ச்சிய 1 கப் பசும்பாலுடன் குங்குமப்பூ, தேன் சேர்த்துப் பருகினால் வீரியம் கூடும். பிரத்யேக “சாஸ்தீகா” அரிசியை பசும் நெய்யில் சமைத்து, கூடவே உளுந்து கஞ்சியை சாப்பிட்டு, பிறகு பால் பருகுபவர்கள். இரவு முழுதும் கலவியில் ஈடுபடும் சக்தியை பெறுவார்கள் என்கிறார் சரகர்! பாலின் மற்றொரு சிறப்பு வேறு பல மூலிகைகள். உணவுகளில் கலந்து குடிக்கலாம்.

உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பூனைக்காளி விதைகள், உளுந்து இவற்றுடன் அரிசி மாவு, பல கட்டங்களில் சமைத்து, பாலுடன் சேர்ந்து உண்ண ஆண்மை பெருகும்.

அக்கர காரம் (Anacyclus pyrethrum) – நரம்புத்தளர்ச்சியை போக்கும் மூலிகை. விந்து முந்துதலை நிறுத்தும். மருந்தாக பயன்படுகிறது. ஆனால் அதிகமாக உண்டால் ஆபத்து. ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.

குங்குமப் பூ – பாலியல் உணர்வுகளை தூண்டும் நறுமணமான, விலையுயர்ந்த மூலிகை.

திப்பிலி (Piper Longum) – வீரியத்தை வளர்க்கவும், மீண்டும் இளமை பெறவும் ஆயுர்வேதத்தில் சிறப்பிக்கப்படும் மூலிகை. இது ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை பலப்படுத்தும். சரகர், நீடித்த விறைப்புத் தன்மைக்கு சொல்லும் திப்பிலி மருந்து – 30 திப்பிலியின் உலர்ந்த பழங்களை பொடித்துக் கொள்ளவும். இதை 45 மி.லி. பசு நெய், 45 மி.லி. எள் எண்ணை கலவையில் வறுத்துக் கொள்ளவும். இதை பாத்திரத்திலிருந்து எடுக்க வேண்டாம். அதே பாத்திரத்தில் 45 கிராம் சர்க்கரை, 45 கிராம் தேனும் சேர்க்கவும். இதே பாத்திரத்தில், நேரடியாக, ஒரு ஆரோக்கியமான பசுவிலிருந்து பாலை கறந்து கொள்ளவும். இதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கவும். பிறகு பசிக்கும் போது பிரத்யேக அரிசி, நெய் கலந்த சோறை உட்கொள்ளலாம்.

ஜாதிக்காய், ஜாதிபத்திரி (Myriastica fragrans) – விந்து முந்துவதை தடுக்கும் மருந்தாக ஜாதிக்காய் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. விழுதாக்கி பாலுடன் சேர்த்து குடிக்கப்படுகிறது. ஆனால் ஆயுர்வேத வைத்தியரின் கண்காணிப்பில் ஜாதிக்காயை பயன்படுத்த வேண்டும். அதிக அளவு மயக்கம், வாந்தி, திக்பிரம்மை, முதலியவற்றை உண்டாக்கும்.

அஸ்வகந்தா (அமுக்கிராக்கிழங்கு – Withania Somnifera)- பழங்காலத்திலிருந்தே அஸ்வகந்தா (Withania Somnifera) செக்ஸ் குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வத்ஸ்யானரின் “காம சூத்திரத்தில்” குறிப்பிட்ட மூலிகை. அஸ்வகந்தா இருவழியில் செயல்படுகிறது. மனதை அமைதியாக, சாந்தமாக வைக்க உதவுகிறது. பாலுணர்வு ஆரோக்கியமாக இருக்க உடலுக்கு வலிமை ஊட்டுகிறது. இதில் உள்ள நைட்ரிக் ஆக்சைட், ரத்த நாளங்களை விரியச் செய்து அதிக ரத்தம் பாய உதவுகிறது. ஆயுர்வேத சிறப்பு சிகிச்சைகளான “ரசாயனம்”, “வாஜீகர்ணம்” இவற்றில், அஸ்வகந்தா உடல், மன ஆரோக்கியத்தை அதிகரிக்க உபயோகமாகிறது. தவிர உடலின் நோய் தடுப்பு சக்தியையும் விருத்தி செய்கிறது. செக்ஸ் குறைபாடுகளுக்கு தரப்படும் ஆயுர்வேத மருந்துகளில் அஸ்வகந்தா ஒரு முக்கிய மூலிகை. ஆண் ஹார்மோனான “டெஸ்டோஸ்டிரோன்” போன்ற செயல்பாடுகளுடையது. சுற்றுப்புற சூழலின் மாசுகளிலிருந்து பாதுகாத்து இளமை தொடர உதவுகிறது. அஸ்வகந்தா, இந்திய “கின்ஸெங்” (நிவீஸீsமீஸீரீ) எனப்படுகிறது. ஒரு சித்தர்பாடலில் அமுக்கிராக் கிழங்குப் பொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்புத் தளர்ச்சி நீங்கும்; உடல் வன்மை பெறும்; அழகு தரும் என குறிப்பிடபட்டுள்ளது.

ஆயுர்வேத மூலிகைகள் / உணவுகள்

விந்துவின் உற்பத்தியையும், அளவையும் உயர்த்த – பால், பசு நெய், வெங்காயம், (வெள்ளை வெங்காயம் சிறந்தது), முசலி, நெருஞ்சில், சதவாரி, அதிதுரம்.

விந்துவின் தரத்தை உயர்த்த – கரும்பு, கோஷ்டம்

கர்ப்பத்தை உண்டாக்க விந்துவின் சக்தியை பெருக்க – பிரம்மி, தண்ணீர்விட்டான் கிழங்கு (சதவாரி), கடுகரோகினி, நெல்லி, சீந்தில் (குடூச்சி), நிலதுத்தி (Sida Cordifolia)

விந்து முந்துதலை தவிர்க்க – முன்பு கூறிய ஜாதிக்காய், அஸ்வகந்தா தவிர சந்தனம், ஜடமான்சி, பூனைக்காளி முதலியன.

காதல் உணவுகள்

பால், பசுநெய், வெள்ளை வெங்காயம், பூண்டு, பேரிச்சம்பழம், உலர்ந்த கருப்பு திராட்சை முதலியவை ஆண்மையை பெருக்குபவை. பூண்டை அப்படியே தோலுடன் சமையலில் சேர்க்கக் கூடாது. தோலை உரித்து இரண்டு மணி நேரத்துக்குள் சமையலில் சேர்க்கவும். தவிர பூண்டை தோலுரித்த பின், நசுக்கிப் போட வேண்டும். அப்போது தான் பூண்டின் முழுப் பலன் கிடைக்கும். அதே போல, வெங்காயத்தில் வெள்ளை வெங்காயம் ஆண்மை குறைகளை போக்க சிறந்தது. அதை நெய்யில் வதக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘வெங்காய சூப்’பும் நல்லது. தவிர குடமிளகாய், இஞ்சி, வெள்ளரி, தனியா, தக்காளி, முருங்கை, முள்ளங்கி, கேரட் போன்றவை பாலுணர்வை ஊக்குவிப்பவை. பப்பாளி, மாம்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம் இவைகளும் இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும். நவீன கால உணவுகளான பாதாம், பிஸ்தா, முந்திரி, வேர்க்கடலை, சாக்லேட் இவைகளும் பாலுணர்வை மேம்படுத்தும்.

மாமிசங்கள், மீன்: மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.

வெற்றிலை: உணவுக்கு பின் தாம்பூலம் தரிப்பது உடலுறவு ஆசையை தூண்டும். ஆனால் பாக்கு, புகையிலை, ஆல்கஹால் இவை எதிர்மாறான விளைவுகளை உண்டாக்கும்.

விந்து முந்துதல் (Pre – mature Ejaculation)

விந்து முந்துதல் வாதக்கோளாறு என்பது ஆயுர்வேதத்தின் கருத்து. தாந்திரீக யோகத்தின் படி, ஆண்கள் ‘அக்னி’யை சார்ந்தவர்கள். எரிந்து சீக்கிரமே அணையும் நெருப்பு போன்றவர்கள். பெண்கள் “நீர்” மூலகத்தை சார்ந்தவர்கள். இவர்களின் உணர்ச்சிகளை எழுப்ப (உடலை சூடாக்க) அதிக நேரமானாலும், சூடு அதிக நேரம் நிலைக்கும். இதை புரிந்து கொண்டு இருவருக்கும் இதமான உஷ்ண நிலையை உருவாக்கினால், உடலுறவின் போது சூடு ஆவியாக உடலின் துவாரங்களான “சக்ரங்களின்” வழியே வெளியேறும்.

மனித உடல் உண்டாக்கும் பொருட்களில் சிறந்தது “விந்து” என்கிறது ஆயுர்வேதம். எல்லா தாதுக்களை விட சிறந்தது சுக்ல தாது. பரிசுத்தமான, ஆரோக்கியமான விந்து சிறந்த வாரிசுகளை உருவாக்கும். விந்து முந்துதல் வாதத்தின் உட்பிரிவுகளான பிராணவாயும், அபான வாயுவும் ஏறுமாறானால் ஏற்படும்.

மேற்கத்திய சிகிச்சையில் கெகல் உடற்பயிற்சி போல் Stop – Start, Sensate focussing போன்ற செயல்முறைகள் கையாளப்படுகின்றன. தற்போது பல மருந்துகளும் வந்துவிட்டன. பாலியல் குறைபாடுகளுக்கு ஆயுர்வேதம் “வாஜீகர்ணம்” மற்றும் ‘ரசாயனம்’ எனும் சிகிச்சைகளை மேற்கொள்கிறது. உடல், உள்ளம் இரண்டுக்கும் சிகிச்சை தரப்படும். ரசாயன சிகிச்சை வயதாகுவதால் ஏற்படும் கோளாறுகளை களைந்து புத்துணர்ச்சி ஊட்டும்.

மேற்கத்திய நாடுகளின் பாலுணர்வை தூண்ட, இஞ்சி, கின்செங், கொட்டைகள், கருப்பு எள், தேனி – மகரந்தம் மற்றும் இலவங்கப்பட்டை முதலியவை உணவில் சேர்க்கப்படுகின்றன.

பொதுவாக விந்து முந்துதல் ஒரு தற்காலிக பிரச்சனை தான். அதைப்பற்றி நினைக்காமல், வருந்தாமல் இருக்க முயற்சி செய்யவும். நீடித்திருந்தால் டாக்டரிடம் செல்லவும்.

உணவுகளால் காதல் உணர்வை தூண்ட முடியுமா?

‘முடியும்’ என்கின்றனர் நிபுணர்கள். சோம்பு, அஸ்பாரகஸ் (தோட்டக்கீரை), வாழைப்பழம், அத்திப்பழம், பாதாம் பருப்பு, கேரட், சாக்லேட், தனியா, பூண்டு, இஞ்சி, அதிமதுரம், கடுகு, ஜாதிக்காய், சிப்பிகள் முதலியவை காதல் உணவுகள். விஞ்ஞானத்தின்படி, துத்தநாகம் (Zinc) பாலியல் சக்தியை தரும். துத்தநாகம் ‘சிவப்பு’ மாமிசம், பரங்கி விதைகள், சிப்பி, அங்கக உணவுகள், முட்டைகளில் உள்ளது. அரிசி, சர்க்கரை, வெள்ளை மாவு இவற்றில் துத்தநாகம் குறைவு. வலிமையான பாலியல் சக்திக்கு துத்தநாகத்தை தவிர கீழ்க்கண்டவை தேவை.

பொட்டாசியம் – பழங்கள், காய்கறிகள்

செலீனியம் – வெண்ணெய், மீன், முழுகோதுமை, எள், கொட்டைகள்

பாஸ்பரஸ் – பரங்கிக்காய், சூரியகாந்தி விதைகள், முழுத்தானியங்கள்

மங்கனீஸ் – கொட்டைகள், வித்துக்கள், முழுத்தானியங்கள்

விட்டமின் ‘இ’ – முட்டை, முழுத்தானியங்கள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், கீரை

விட்டமின் ‘சி’ – ‘சிட்ரஸ்’ பழங்கள், தர்பூசணி, தக்காளி, அன்னாசி, முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, கீரைகள்

விட்டமின் ‘ஏ’ – பால், சீஸ், கீரைகள், கேரட், முட்டைக்கோஸ், லிவர், முட்டை, மீன் எண்ணெய், மாம்பழம், பப்பாளி.

குறிப்பாக சிப்பிகள் (Oysters), புரதமும், துத்தநாகமும் செறிந்த சத்து நிறைந்த உணவுகள் காதலை தூண்டுபவை. காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பல. காதல் உணர்வை குறைக்கும் உணவுகள் உண்டா? போதிய சத்துணவு கிடைக்காமல் போனால் புரதக்குறைவு இருந்தால் வீர்யம் குறையும். இனிப்பு, காப்பியிலுள்ள காஃபின் (Caffeine(Caffeine) (அதிகமாக உட்கொண்டால்) முதலியன. ஆசையை குறைக்கும். டோஃபு எனும் சோயா உணவு, குளிர்ச்சி தரும் வெள்ளரி, டர்னிப், முட்டைக் கோஸ் முதலியன செக்ஸ் ஆவலை குறைக்கும் உணவுகள். தைராய்டு சுரப்பியின் செயல்பாடுதான் பாலுணர்வுகளை கட்டுப்படுத்துகிறது. மேற்சொன்ன ஆசையை தைராயிட் சுரப்பிற்கு எதிர்மாறானவை.


Spread the love