அஜினமோட்டோவை மொழி பெயர்த்தால் சுவையின் சாரம் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட அஜீனமோட்டோ உலகெங்கும் 100 தேசங்களில் பரவலாக உபயோகிக்கப்படுகிறது. குறிப்பாக உலக பிரசித்தி பெற்ற சைனா சமையலில் பயன்படுத்தப்படுகிறது. உணவின் சுவையை கூட்டும் பொருளாக பயன்படுகிறது.
அஜினமோடோவின் உபயோகம் பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. முதலில் அஜினமோட்டோ என்றால் என்னவென்று பார்ப்போம்.
1908, முனைவர் கிகுனே இகேடா என்ற ஜப்பானிய விஞ்ஞானி, யோடோஃபூ என்ற கடல் பாசி சேர்ந்த பீன்ஸ் – தயிர் போன்ற பொருளின் சுவையின் ரகசியத்தை கண்டுபிடித்தார். இந்த பொருளுடன் சேர்த்து கொதிக்க வைக்கப்பட்ட கடல் பாசியில் உள்ள க்ளூடாமிக் அமிலம் தான் இதன் தனிச்சுவைக்கு காரணம். 1909 ல் இவரின் கண்டுபிடிப்பை பயன்படுத்தி, உணவுக்கு சுவை கூட்டும் பொருளாக தயாரிக்க தொடங்கியது “அஜினமோட்டோ” என்ற கம்பெனி. மூலப்பொருள் “மானோ சோடியம் குளூடமேட் தான். இதன் வர்த்தகப் பெயர் “அஜினமோட்டோ.” டோக்கியோவின் தலைமை அலுவலகம் உள்ள இந்த கம்பெனி, தற்போது பெரிதாக வளர்ந்து ஒரு பில்லியன் டாலர் கம்பெனியாக மாறிவிட்டது. அஜினமோடோவை தவிர நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் செயற்கை சர்க்கரையான ஆஸ்பர்டாமியையும் இந்த கம்பெனி தயாரிக்கிறது. அஜினமோடோ இந்தியாவில் 1961 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
தயாரிக்கும் முறை
சில பொருள்களை புளிக்க வைத்து வினிகர் மற்றும் பாலை புளிக்க வைத்து தயிர் தயாரிப்பது போல் மானோ சோடியம் குளூடமேட் சில பொருட்களை புளிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. வெல்லம், சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவுப் பொருள், மரவள்ளிக்கிழங்கின் மாவு போன்றவை தயாரிக்க பயன்படுகின்றன.
உபயோகம்
அறுசுவைகளையும் தூண்டி விடுவது அஜினமோடோவின் முக்கிய உபயோகம். எந்த வித சமையலிலும் பயன்படுத்தலாம். சமைக்கும் போது எந்த நிலையில் வேண்டுமானாலும் அஜினமோடோவை சேர்க்கலாம்.
அஜினமோடோவை பற்றிய சர்ச்சைகள்
அஜினமோடோ ஒரு வேதிப்பொருள், மாமிசங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அஜினமோடோ இயற்கை பொருட்களாக கரும்பு, மரவள்ளிக்கிழங்கு முதலியவற்றிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.
அஜினமோடோவை உபயோகிப்பதால் மூளை பாதிப்பு, தலைவலி, வாந்தி, பிரட்டல், நரம்பு பாதிப்பு முதலியன ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதற்கு எந்த விதமான விஞ்ஞான ஆதாரங்கள் இல்லை. இதில் உள்ள வேதிப்பொருள் மற்ற பல வகை இயற்கை பொருள்களில் உள்ள புரதம் தான். தக்காளி, பருப்பு, சீஸ், காய்கறிகள் இவற்றில் உள்ள குளூடமேட்டை விட அஜினமோடோவில் உள்ள குளூடோமேட் அதிகம் இல்லை.
சீனச் சபையில் மட்டும் தான் அஜினமோடோ தேவைப்படும் என்பது மற்றொரு கருத்து. இதை எந்த சமையலில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நமது சாம்பார், ரசம், புலாவு போன்றவற்றிலும் பயன்படுத்தலாம். சுவை கூடும்.
அமெரிக்க மருத்து கவுன்சில், உலக சுகாதார குழுமம் முதலியவை பாதுகாப்பானது என்று தெரிவிக்கின்றன. நமது இந்திய “மத்திய உணவு மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி ஸ்தாபனமும் 1997 ல் க்ளூடாமேட் பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது.
அஜினமோடோவ அளவோடு உபயோகிக்கலாம். இந்தியா வருடந்தோறும் 5000 டன் இறக்குமதி செய்கிறது.
