ஆயுர்வேதம் தொன்மையானது என்றாலும் தற்கால நடைமுறைக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ற ஒரு எளிமையான இந்திய வைத்திய முறையாகும். வாழ்க்கையின் விஞ்ஞானம் ஆயுர்வேதம். இது காலங்களை வென்றது. காரணம் ஆயுர்வேதம் இயற்கையோடு இணைந்து வாழ்வதையே வலியுறுத்துவதால், நோய்களை குணமாக்க, ஆயுர்வேதம் எளிமையான, இயற்கையான, நோய் வருமுன் காக்கும் யுக்திகளையும், வந்த பின் காக்கும் வழிகளையும் எடுத்து சொல்கிறது.
• நல்லொழுக்கம்
• புலனடக்கம்
• கட்டுப்பாடு
• வாழ்க்கையின் நெறிமுறைகள்
• உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
ஆயுர்வேதம் புனிதமானது இந்த தூய்மையான மருத்துவ முறை இயற்கை நலனை பாதுகாக்கிறது. இயற்கையின் இயல்பான விதிமுறைகளை பாதிக்காமல், நோய் நொடிகளை குணப்படுத்தும். குழந்தையை பாதுகாக்கும் தாய் போல ஆயுர்வேதம், மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
மேலை நாட்டு மருத்துவம் நோய்களை பகுத்து ஆராய்கிற வழிகளை கடைபிடிக்கிறது. ஆயுர்வேதம் நோயை, முழுமையான, பல நிலைகளில் அணுகும் முறையை கடைப்பிடிக்கிறது. உதாரணமாக ஆயுர்வேதம் உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்திற்கும் உகந்த உணவு, மருந்து வகைகளையும் சொல்கிறது. மனதுக்கும் வைத்தியம் செய்கிறது.
சரகரின் கோட்பாடுகள்
ஆயுர்வேதத்தின் தூண் சரகர். இவர் மருத்துவ முறை, இறைநெறியுடன் சேர்ந்த ஒரு அம்சவென்று கருதியவர். ஆன்மீக, வேதாந்த முறைகளை அறிந்தவர். ஆயுர்வேதம் என்ற மாபெரும் மாளிகையை உருவாக்க, பல ஆன்மீக, வேதாந்த சுரங்கங்களிலிருந்து எடுத்த “கற்களை” அஸ்திவாரமாக பயன்படுத்தினார். வாழ்க்கை என்பது உடல், புலன்கள், ஆத்மா, மனம் ஆகியவை இணைந்து மனித உடல் இந்த பிரபஞ்சத்தின் ஒரு நகல் – ஒரு பிரதி, அதே போலவே, அதன் ஒவ்வொரு அற்புத செயல்பாடுகளும், ஆரோக்கியமும் உடல் நோய்களும் இயற்கை மற்றும் பிரபஞ்சத்தில் நடக்கும் கோளாறுகளிலிருந்து மாறுபட்டவை அல்ல.
‘சாங்கிய’ வேதாந்தத்தை தழுவியவை ஆயுர்வேத கோட்பாடுகள். வியக்தி (வெளிக்காட்டு) வெளிப்பாடில்லாத ‘அவியக்தி’யிலிருந்து உருவானது. மனிதனும் பிரபஞ்சமும், பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்ற கால சக்கரத்திற்கு உட்பட்டவை. ஆரோக்கியம் என்பது உடல், புலனேந்திரியங்கள், மனம், ஆத்மா, இவை ஒரே ஒழுங்கில் சீராக அமைவது.
உள்ளும், புறமும், உடலும் வெளி எண்ணங்களும் ஒன்றுபட்டு, ஒன்றை ஒன்று சீராக சார்ந்திருப்பது ஆரோக்கியம்.
ஆயுர்வேத சிகிச்சையின் கொள்கைகள்
உடல் சிகிச்சை – உணவு பத்தியம், மூலிகை மருந்துகள், உடற்பயிற்சி போன்றவை தேவை.
மன சிகிச்சை – மனத்தை சமநிலையில் நிறுத்த, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தேவையான வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
உடளுள் உறையும் “ஆத்மா”விற்கு – ஆன்மிக பயிற்சி பரிந்துரைக்கப்படுகின்றன.
ஆயுர்வேதம் இயற்கையின் நடப்புகளை சூரிய உதயம், சூரியன் மறைதல், பருவகாலங்கள், சீதோஷ்ண நிலை, பிறப்பு, இறப்பு- இவற்றோடு இணைந்ததாக மருந்துகள், உணவு மாற்றங்கள், வழிமுறைகள் இவற்றை எல்லாமே சிகிச்சை முறையில் கையாளுகின்றன.
நோயாளியின் குறிப்பிட்ட வியாதிக்கு குறிப்பிட்ட மூலிகை கலவை மருந்துகள் மற்றும் பஞ்சகர்மா சிகிச்சைகள் மட்டுமில்லாது, நோயாளியின் நோய் தடுப்பு சக்தி மற்றும் பொதுவான ஆரோக்கியம் மேம்பட சிகிச்சைகள் தரப்படுகின்றன.
ஆயுர்வேத தத்துவங்கள்
ஆயுர்வேதம் சார்ந்திருக்கும் அடிப்படை வேதாந்தம் – எல்லா உயிர்களும், பொருட்களும் “பிரக்ருதி” (உடல் அமைப்பு) நுட்பமான “புருஷ” (ஆத்மா) கலப்பினால் உருவானவை. அதாவது உடலும், உள் உறையும் ஆத்மாவும் நுட்பமாக இணைந்தவை.
மனிதனும் பிரபஞ்சமும் ஒரே மாதிரியான பஞ்ச மூலங்களால் உருவானவை – பூமி அல்லது திடப்பொருள், நீர் அல்லது திரவப்பொருள், நெருப்பு (உடல், அக்னி, ஜாடராக்கினி), வாயு (காற்று) மற்றும் ஆகாயம் (உடல் ரீதியாக சொன்னால் உடலின் துவாரங்கள், வெற்றிடங்கள்)
எந்த வித வைத்திய முறைகளாலும் சரி அலோபதி, ஆயுர்வேதம் போன்ற வைத்தியர்களுக்கு அன்றும் இன்றும் சமூகத்தில் பெரும் மதிப்பு இருந்து வருகிறது. சரகர் ஒரு தலைசிறந்த வைத்திய நிபுணர் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே அவர் எழுதி வைத்த வைத்திய முறைகள் கொண்டாடப்படுகின்றன. நடைமுறையில் பயனளிக்கின்றன.
இந்தியாவின் நாகரிகம், கலாச்சாரம், இலக்கியம், இயல், இசை, நாடகம் எல்லாமே ஆன்மீக அடிப்படையில் அமைந்தவை. ஆயுர்வேதமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ஆயுர்வேதத்தின் சிறப்பு, வெறும் வறட்டு வேதாந்தம் மட்டுமின்றி, நடைமுறையில் செயல்படுத்தும் எளிய வைத்திய முறைகளை உருவாக்கியது தான். ஆயுர்வேதத்தின் புனிதம் மாசுபடாத ஒன்று.