போக சக்தி

Spread the love


பாலுறவில் இனிமை என்பது இள வயதினருக்கு மட்டும் தானா? நடுவயது தாண்டிய பலரின் மனதை அரித்துக்கொண்டிருக்கும் மிகப் பெரிய கேள்வி இது. இதற்கு ஒரே சொல்லில் விடை கூற வேண்டுமானால் இல்லை என்பது தான்.

அதிகமான கற்பனைகளை விலக்கிவிட்டு, களைப்பை நீக்கிவிட்டுக் கவலைகளை மறந்துவிட்டுச் செயல்பட்டால் எல்லோராலும் பாலுறவில் இனிமைகாண முடியும். இவற்றை நடைமுறை வாழ்வில் பின்பற்றினால் இனிக்கும் பாலுறவுக்குத் தேவையான போக சக்தி என்றென்றும் உங்கள் உடைமை தான்.

பாலுறவில் ஆர்வம் பண்பற்ற செயல் எனக் கருதுவது மனித இயல்புக்கு மாறானது. நாற்பது வயதுக்கு மேல் கணவனும் மனைவியும் உடன் பிறந்தவர்கள் போல் வாழ வேண்டுமென்று காந்தியடிகள் கூறினார். மனைவியை உடன் பிறந்தவளாக எண்ணிக் கொண்டு மற்ற பெண்களைத் தாரமாகக் கருதுகின்ற மன வக்கிரங்களுக்கும் செயல்களுக்கும் ஆட்படாமல் மனைவியை மனைவியாகவே கருதி அவளுடன் மகிழ்வோடு இருக்க வழி என்ன என்று அறிந்து கொள்வது தான் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தீர்வாகும்.

போக சக்தி தரும் உணவுகள்

சத்துணவு என்றும் சமச்சீர் உணவென்றும் பொருந்துணவு என்றும பொருந்தா உணவு என்றும கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போய்விட்டதென்கிறீர்களா? இருக்கலாம், ஆனால் பாலுறவைப் பரவசமாக்கும் உணவு என்றும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நாகரீகம் கருதியும் நாக்கின் சுவை கருதியும் கண்டபடி உண்பவர்களைக் காட்டிலும் இளமை முறுக்குக்க உதவுகின்ற உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பவர்கள் உடற்கட்டு விடாமலும் வாழ்க்கையில் உற்சாகம் குன்றாமலும் இருக்கிறார்கள் என்கிறார் நியூயார்க் ஊட்ட உணவு ஆய்வு மைய இயக்குநரான டாக்டர் ஸ்டான்லி டைடில் எம்.டி
இயன்ற வரை உங்கள் சமையலறை அலமாரியையும் குளிர்பதனப் பெட்டியையும் வைட்டமின் பி சத்துக்கள் மிகுந்த காய்கறிகள், கோதுமை ரொட்டிகள் (பிரெட்) இனிக்கும் தயிர் போன்றவற்றாலும், வைட்டமின் ஈ சத்து நிறைந்த விதைகள், கொட்டைகள், முட்டை மற்றும் முளைவிட்ட தானியங்கள் போன்றவற்றாலும் துத்தநாகம் (Zinc) பிற மணிச்சத்துக்களும் செரிந்த மீன், இரால் மற்றும் காளான்கள் போன்றவற்றாலும் நிரப்புங்கள். ஐயத்திற்கு இடமின்றி இவை அனைத்தும் உங்கள் நரம்புகளை வலுப்படுத்திச் செயல் திறனை அதிகரிக்கும். ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள். எந்த உணவையும் காலந்தவறியோ, அளவில் மிகுந்தோ உண்ணாதீர்கள். அளவில் மிகுந்த உணவு, அதிலும் குறிப்பாக அளவில் மிகுந்த இரவு உணவு உங்கள் ஆர்வத்திற்குப் பெரியதொரு தடைக்கல்லாகும்.

உணர்வுத் துடிப்பை இழக்காதீர்கள்

மதுவும், புகையும், அதிக சர்க்கரைப் பண்டங்களும், காபீ, டீ கோலா போன்ற பானங்களும் உங்கள் பாலியல் உணர்வைத் துடிப்பை மழுங்கச் செய்துவிடக் கூடியவை. பாலுறவில் இனிமை காண விழைகின்றவர்கள் மதுவை மறுத்தல் அறிவான செயலாகும். ஆல்கஹால் உங்கள் நரம்புகளைத் தொய்வுறச் செய்து மூளையைத் திறன் குன்றிப்போகச் செய்துவிடும்.

பிராந்தியோ, விஸ்கியோ, ரம்மோ எதுவானாலும் குடிக்காதிருப்பது மேல், இயலாதென்றால் ஒன்று இரண்டு லார்ஜ்க்கு மேல் ஒரு போதும் கூடாது. இதற்கு மேல் போகப் போக எந்த அளவிற்குக் குடிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் போக சக்தித் திறன் உங்களை விட்டு விலகிப் போய்விடும். நிகோடின் போக சக்திவீணீப் பாதிக்கிறது என்பதற்கான திட்டவட்டமான சான்றுகள் இன்னும் வெளிவரவில்லை என்றாலும், அது இரத்தக் குழாய்களில் குறுக்கத்தை (Vaso Constriction) ஏற்படுத்துகிறது என்பது முடிவான ஒரு கருத்து. இது ஆண்குறியிலுள்ள இரத்தக் குழாய்களையும் குறுக்கத்தானெ செய்யும்.

சர்க்கரையும், கஃபீனும் இதயத் துடிப்பை அதிகரிக்க வல்லவை. இவற்றை உட்கொண்டதும் உடனடி சக்தி கிடைக்கிறதென்றாலும் இரத்தத்தில் இவற்றின் அளவு குறைகின்றபோது உடல் செயல்பாட்டில் தாழ்ச்சி ஏற்படுகிறது. எனவே இவற்றை முற்றிலுமாக நீக்க முடியாவிட்டாலும் கட்டுக்குள் வைப்பது நல்லது.

மனதைத் துணைக்கழையுங்கள்

பாலுறவு என்பது உடல்கள் மட்டுமே தொடர்புடையது என நீங்கள் கருதினால் அங்கே தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். மனங்கள் இணையாத உடலுறவு ஒருபோதும் நிறைவைத் தராது. கணவன் மனைவியாக இருந்தாலும் அவர்கள் உடலாலும் மனத்தாலும் இணைய வேண்டும். இருள்போல மனதில் நிற்கின்ற சிந்தனைகள், கவலைகள், அச்சங்கள் போன்றவைகளை, அவை உங்கள் தொழில் தொடர்பானவைகள் ஆனாலும் குடும்பம் தொடர்புடையவை ஆனாலும் அனைத்தையும் வெளியே துரத்தி அகக் கதவை மூடுங்கள். குப்பை கூளங்கள் அகற்றப்பட்டுச் சுத்தத் செய்யப்பட்ட மனம் உங்களது செயலார்வத்தை அதிகரிக்கிறது, பாலுறவின் போது மாற்றுச் சிந்தனைகள் எதிலும் மனதைச் செலுத்தாதவர்கள்தான் மனநிறைவு அடைகிறார்கள் என உளவியலார் கூறுகின்றனர். இனிய சிற்தனைகள், கற்பனைக் கனவுகளைக் கொண்டு மனதை நிரப்புங்கள். உங்கள் உடற்தோற்றத்திலுள்ள குறைபாடுகள், உடலுறுப்புக்கள் பற்றிய குற்றங்கள் ஆகியவற்றால் உண்டான தாழ்வு உணர்ச்சியை முற்றிலுமாக மறந்துவிடுங்கள். உங்களைக் கட்டியணைத்திருக்கும் உங்கள் மனதிற்கு இனியவர்கள் உங்கள் முதுகின் மேலுள்ள மச்சத்தையோ, உங்கள் மூக்கின் இடப்புற நாசி விரிந்திருப்பதையோ பற்றிக் கவலைப்படப்போவதில்லை. அவற்றை விட அதிமுக்கியமான வேலையில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

காலமறிந்து செயல்படுக

ஆண்கள் ஆனாலும், பெண்கள் ஆனாலும் காலமறிந்து செயல்படுவது சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களின் மாதவிலக்குச் சுழற்சியில் (Menstrual Cycle) விலக்கு ஏற்பட்ட நாளிலிருந்து 11 ஆம் நாள் முதல் 14 ஆம் நாள் வரை சினையகத்திலிருந்து முட்டை (சினை) விடுபடும் (OvUlation) காலமாகும். இந்த நாட்களிலும் மாதவிலக்கிற்கு முந்தய இரண்டு மூன்று நாட்களிலும் பெண்களின் உடலில் ஹார்மோன் சுரப்புகள் மிகுதியாக இருக்கும். இந்த வேளையில் அவர்களது போக சக்தி உச்சத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பாலுறவில் ஈடுபடும் தம்பதியர் இவ்வுணர்வலைகளின் உதவியோடு இன்ப நிலையின் விளிம்புக்குச் செல்லவும் இயலும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பருவத்தில் செய்யும் பயிர் கட்டாயம் பலனளிக்கக் கூடும். இதனை மனதில் கொண்டு கருத்தடைச் சாதனங்களை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.

உடற்பயிற்சி தேவை

எந்தத் தொழிலாயினும் அதைத் திறம்படச் செய்யச் சில பயிற்சிகள் இன்றியமையாதவை. பாலியல் பணிகளுக்குச் சில உடற்பயிற்சிகள் கட்டாயம் உதவக்கூடும். நம்மில் பலர் உடற்பயிற்சி என்றதும் ஒரு கிலோ மீட்டர் தொலைவு ஓடுகின்றனர். இருந்தாலும் என்ன செய்வது, தவிர்க்க முடியாதென்றால் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். உடற்பயிற்சி உங்களது போக சக்தியை மூன்று வழிகளில் மேம்படுத்தக்கூடும். 1. தொடர்ந்து செய்கின்ற உடற்பயிற்சி உங்களது தன்னம்பிக்கையின் அளவை உயர்த்தும். 2. பயிற்சி செய்து பண்படுத்தப்பட்ட தசைகளும் நரம்புகளும் உங்களது தாங்கு திறத்தை அதிகரிக்கினறன. 3. முதுகைப் பிடித்துக் கொண்டுவிடும் என்ற அச்சம் எதுவுமின்றிச் செயல்படுவதுடன் மூச்சுத் திணறலும் ஏற்படாது.


முயற்சித்துப் பாருங்கள், கண் கூடாக உங்கள் போக சக்தி உயர்வதை நீங்கள் உணரலாம்!

ஆயுர்வேதம்.காம்


Spread the love