இன்பம் தரும் இம்பூறல் மூலிகை

Spread the love

இம்பூறல் ஒரு சிறு தாவரமாகும். இது ஈட்டி வடிவ இலைகளையும், அளவில் சிறிய மொட்டுக்களையும் கொண்டிருக்கும். இதன் மலர்கள் வெள்ளை நிறத்தில் சிறியதாக இருக்கும். அனைத்து காலங்களிலும் பயிரிடப்படும் இச்செடியானது பிற தாவரங்களுக்கிடையே ஊடுருவி வளரும் தன்மை உடையது.

இம்பூறல் மழைக்காலங்களில் அதிகளவில் வளரக் கூடிய தாவரமாகும். இது வீட்டை சுற்றிலும், தெரு ஓரங்களிலும் தாராளமாக வளர்ந்திருக்கும். இதன் வேர் இயற்கை சாயமாக பட்டுப் புடவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இம்பூறல் தாவரத்தின் வேரிலிருந்து சிவப்பு நிறச்சாயம் எடுக்கப்படுவதால் இது சாயவேர் எனப் பெயர் பெற்றது. இம்பூறல் இலை மற்றும் வேரானது சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

தாவர விவரம்

மூலிகையின் பெயர்இம்பூறல்
தாவரப்பெயர்ஓல்டன்லேண்டியா அம்பலேட்டா
தாவரக்குடும்பம்ரூபியேசியே
வேறுபெயர்கள்இன்புரா வேர், சாயவேர், சிறுவேர்
பயன் தரும் பாகங்கள்வேர், இலைகள், செடி

மருத்துவ பயன்கள்

இதன் இளம் இலைகளை அரைத்து கொப்புளங்கள் மேல் பூசி வர கொப்புளங்கள் நீங்கும்.

இதன் லேகியத்தை தினமும் இருவேளை உட்கொண்டு வர வாந்தி, இருமல், காச நோய் நீங்கும்.

இம்பூறல் அடை காசநோய், பித்த, கபநோய்க்கு மருந்தாகும்.

கை, கால் எரிச்சல் நீங்க

உடல் சூடு மற்றும் பிற பாதிப்பின் காரணமாக உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படும். இதனை சரிசெய்ய இம்பூறல் இலைகளை தண்ணீர் விடாமல் நன்கு இடித்து சாறுபிழிந்து அதனை உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் எரிச்சல் தோன்றும் இடங்களில் தடவி வர எரிச்சல் நீங்கும்.

மேலும் இம்பூறல் இலையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து கை, கால் கழுவி வர கை, கால் எரிச்சல் நீங்கும்.

மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க

மாதவிலக்கு காலங்களில் சிலர் அதிகளவு இரத்தப்போக்கினால் அவதியுறுவர். இதனை சரிசெய்ய இம்பூறல் இலைகளை பொடி செய்து தினமும் இருவேளை சிறிதளவு பாலில் கலந்து பருகி வர இரத்தப்போக்கு சீர்படும்.

சிலருக்கு மாதவிலக்கின் போது அதிக வலி, களைப்பு மற்றும் சோர்வு ஏற்படலாம். இதனை சரிசெய்ய இம்பூறல் இலைகளை எண்ணெயில் இட்டு வதக்கி அதில் வறுத்த உளுந்தம் பருப்பு, மிளகு, இந்துப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். பின் எலுமிச்சைச் சாறு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வர மாதவிலக்கின் போது ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம்.

இம்பூறல் வேர் பட்டை 10 கிராம், பெருங்காயம் ஒரு கிராம் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.

விஷக்கடி நீங்க

விஷக்கடிகளுக்கு மிகச் சிறந்த மூலிகையான இம்பூறல் இலைகளை அரைத்து தேள் கடித்த இடத்தில் பூசிவர வலி நீங்கி, விஷம் முழுவதும் பரவாமல் தடுக்கப்படும்.

கொரோனாவிற்கு எதிராகும் இம்பூறல்

வைரஸ் தொற்று, நுரையீரல் பாதிப்பு போன்றவற்றிலிருந்து  நம்மை பாதுகாக்க இம்பூறல் மூலிகை பெரிதும் துணை புரிகிறது. இதனை கஷாயமாக காய்த்து குடித்து வர வைரஸ்கள் நம் உடலினுள் நுழைவதையும், தொற்றினால் உண்டாகும் பாதிப்புகளையும் தடுக்கலாம்.

இம்பூறல் கஷாயம்

தேவையான பொருட்கள்

வேருடன் பிடுங்கிய

இம்பூறல் மூலிகை    –     ஒரு பிடி

அதிமதுரம்                 –     10 கிராம்

இஞ்சி                –     2 துண்டு

ஆடாதொடை         –     5 இலை

மிளகு                –     10 கிராம்

கிராம்பு               –     5 கிராம்

செய்முறை

வேருடன் பிடுங்கிய இம்பூறல் மூலிகையை நீரில் நன்கு கழுவி ஒரு மணி நேரம் வெயிலில் நன்கு உலர்த்தவும். பின் அதை நன்கு அரைத்து ஒரு தம்ளர் நீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.

கொதிக்கும் சமயத்தில்  அதிமதுரம், இஞ்சி, ஆடாதொடை, மிளகு, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து 10 நிமிடம் கொதித்த பின் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேன் கலந்து பருகவும்.

இம்பூறல் மூலிகை கிடைக்காத பட்சத்தில், சென்னை அடையாரில் உள்ள இம்காப்ஸ் என்ற மத்திய நிறுவனத்தில் இம்பூறல் மாத்திரை வடிவில் கிடைக்கும். அவற்றை வாங்கி கஷாயம் தயாரிக்கலாம்.

இம்பூறல் லேகியம்

செய்முறை

இம்பூறல் வேர் பட்டையை பசுவின் பால் விட்டு நன்கு அரைக்கவும். பின் இதனை பசும்பாலில் கரைத்து வடிகட்டி அதனுடன் தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, கடாயில் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது  நன்கு கிளறவும். இவ்விதம் செய்து வர லேகியம் பதம் அடையும்.

இம்பூறல் வடகம்

தேவையான பொருட்கள்

இம்பூறல் செடி –     ஒரு பங்கு

மிளகு          –     ஒரு பங்கு

பனங்கற்கண்டு –     இரண்டு பங்கு

செய்முறை

மேற்கூறியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு இடித்து சுண்டைக்காயளவு வடகங்களாக செய்யவும். இம்பூறல் வடகம் தயார்.

ஒன்று அல்லது இரண்டு வடகங்களை உணவோடு கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர இருமல், சளி போன்ற கப நோய்கள் குறையும்.

இதனை தோசை அல்லது கஷாயமாக எடுத்துக்கொள்ளலாம். இது சளி, இருமலுக்கு நல்ல மருந்தாகிறது.

இம்பூறல் அடை

சத்தான இம்பூறல் அடையானது மழைக்காலங்களில் ஏற்ற உணவாகும். இது இனிப்பு சுவை உடையதால் குழந்தைகள் இதனை விரும்பி உண்பர்.

தேவையான பொருள்கள்

இம்பூறல் இலை                      –              அரை கப்

பச்சரிசி மாவு              –              ஒரு கப்

புழுங்கல் அரிசி மாவு   –              கால் கப்

தாளிப்பு பொருட்கள்

உப்பு, நெய் தேவையான அளவு.

செய்முறை

இம்பூறல் இலையானது பருவ காலங்களில் மட்டுமே கிடைப்பதால் இதனை மொத்தமாக பறித்து, அனைத்தையும் நிழலில் உலர்த்தி பொடி செய்து நன்கு சலிக்கவும்.

பின் இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இம்பூறல் இலை இல்லாதவர்கள் பொடியாக கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.

பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி மாவினை ஒன்றாக சேர்க்கவும். பின் இதனுடன் இம்பூறல் பொடி, உப்பு, தாளிப்பு பொருட்கள் தேவையான அளவு வெந்நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

பிசைந்து 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து அடையாக தட்டி பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சுடவும். சுவையான இம்பூறல் அடை தயார். இதனை அனைவரும் உண்ணலாம்.

View Our Products >>


Spread the love
error: Content is protected !!