உடலில் கழிவுகளை அகற்ற தண்ணீர் தேவை!

Spread the love

மனித வாழ்விற்குக் காற்றுக்கு அடுத்தபடியாக தண்ணீர் அவசியம் என்பதை பல நேரங்களில் நாம் உணர்வதில்லை. நாக்கு வறண்டு நீர் வேட்கை ஏற்படும்போதுதான் குடிநீரைப் பற்றி நினைக்கிறோம். உணவின்றிப் பல நாட்கள் வாழ முடியும் என்றாலும் குடிநீரின்றி ஆறு, ஏழு நாட்களுக்கு மேல் வாழ்வது கடினம். ஒரு குழாயின் கைப்பிடியைத் திருகியதும் அருவியெனக் கொட்டும் நீரைக் கண்டு அலட்சியமாக நடந்து கொள்ளும் நமக்கு அது எத்துணை பெரிய செயல்களைச் செய்கிறது என்பதை எண்ணிப் பார்க்கத் தோன்றுவதில்லை.

நாவறட்சியை போக்கி, தாகம் தணிப்பதைக் காட்டிலும் மிகப்பெரிய சேவைகளை குடிநீர் நமது உடலுக்குச் செய்கிறது. நமது உடல் இயக்கச் செயல்பாடுகள் அனைத்திலும் பங்கு கொண்டு உள்ளுறுப்புகளுக்குத் துணை செய்கிறது. உடல் செல்களிலுள்ள புரோட்டோ பிளாஸத்தில் பெரும்பகுதி தண்ணீரால் ஆனாது. உடல் வெப்பத்தைக் தக்க அளவில் நிலைநிறுத்துவதிலும், நரம்பிலிருந்து புறப்படும் செய்திகளை மற்ற உறுப்புகளுக்கு அறிவிப்பதிலும், மின் பகுப்பினை முறைப்படுத்துவதிலும் தண்ணீர் பெரும்பங்கு வகிக்கிறது. இரத்தம், நிணநீர் ஆகியவற்றை நிலைப்படுத்துவதிலும் சுரப்பிகளின் சுரப்பிற்கு உதவுவதிலும் தண்ணீர் உதவுகிறது. உள்ளுறுப்புக்களில் உண்டாகும் கழிவுகளை வெளியேற்றும் பெரும் செயலையும் செய்கிறது.

உடல் எடையில் 60 ல் இருந்து 70 விழுக்காடு வரை தண்ணீரால் ஆனது என்றாலும் உடலுக்குத் தேவைக்கு மேல் நீரைச் சேமித்து வைத்துக் கொள்ளும் திறன் கிடையாது. உடலின் மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றித் திரிந்து உடற்கழிவுகளைச் சேகரித்து வெளியேற்ற உதவுகின்ற பணியினால் தினமும் உடல் தண்ணீர் அளவில் 5 சதவிகிதம் குறைகிறது. உடல் தண்ணீர் அளவில் 15 சதவிகிதம் குறையுமானால் அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். ஒவ்வொரு நாளும் ஒன்றிலிருந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் சிறுநீராக வெளியேறுகிறது. ஏறத்தாழ அரை லிட்டர் நீர் வியர்வையுடனும் மூச்சுக்காற்றுடனும் கலந்து வெளியேறுகிறது. இதை ஈடு செய்ய நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 குவளை தண்ணீர் பருக வேண்டியது கட்டாயமாகிறது.

தேவைக்கேற்ற அளவு தண்ணீர் பருகாவிட்டால் தலைவலியும், மலச்சிக்கலும், சிடுசிடுப்பும் ஏற்பட வாய்ப்புண்டு. உடலின் நீர் அளவு குலையாமல் இருக்க தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இரண்டு அல்லது மூன்று குவளை தண்ணீர் குடிக்க வேண்டும்.

கருவுற்றிருக்கும் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் நிறையத் தண்ணீர் குடிப்பது அவசியம். பலர் தண்ணீரைப் போன்று பிற நீர்மங்களை அருந்துகின்றனர். தண்ணீருக்குப் பதிலாகப் பிற பானங்கள் பருகுவது தவிர்க்கப்பட வேண்டும். உடலியக்கம் பொருத்தவரை தண்ணீருக்கு இணையான வேறொரு நீர்மம் எதுவுமில்லை. தண்ணீரைப் போன்று பிற நீர்மங்கள் எதுவும் உடல் உறுப்புகளில் நீரேற்றம் (Hydration) ஏற்படச் செய்வதில்லை. காபி மற்றும் குளிர்பானங்களில் கபீன் உள்ளது. கபீன் ஒரு சிறுநீர் பெருக்கியாதலால் உறுப்புகளில் நீரேற்றம் ஏற்படச் செய்வதற்கு மாறாக உடலில் நீர்வற்றல் (Dehydration) உண்டாகச் செய்கிறது. உடல் செல்களிலிருந்து நீரை வெளியேற்றுகிறது.

சுகாதாரமான வாழ்விற்கு தண்ணீர் மிக, மிக இன்றியமையாதது. அது பாதுகாக்கப்பட்ட குடிநீராக இருப்பது மிகவும் அவசியம். இன்றைய நிலையில் நகரங்களில் வாழ்கின்றவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு மட்டுமே பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. ஆனால், கிராமங்களின் நிலையோ இன்னும் பரிதாபம். அங்கு வாழ்கின்றவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு குடிநீர் வசதியே இல்லை.

காலரா, வயிற்றுக் கடுப்பு, டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற பல நோய்கள் தூய்மையற்ற நீரினால் உண்டாகின்றன. ஆண்டுதோறும் உலகெங்கும் சுமார் 50 கோடிப்பேர் சுத்தமற்ற குடிநீர் காரணமாக நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர் என்றும் இதில் 25,000 பேர் இறக்கின்றனர் என்றும் உலக சுகாதார நிறுவன அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

தூய நன்னீரைத் தேவைப்படுகின்ற அளவு பருகுவது உடல்நலம் காக்கச் சிறந்த வழியாகும். மேலும் தாகம் எடுக்கின்றபோது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். நீரை மடக்… மடக்கென்று குடிப்பதாலும் தாகம் தீராது. தண்ணீரை டம்ளரில் இருந்து மெல்ல மெல்ல உறிஞ்சிச் சுவைத்துக் குடித்தால் வாயின் உட்புறத்திலேயே, தண்ணீர் உடலால் சுவரப்பட்டு ஒரு டம்ளர் நீரிலேயே தாகம் தீர்ந்து விடும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமில்லை. அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது அது வயிற்றிலுள்ள செரிமான நீர்களையெல்லாம், அதிகமாக்கி விடும். இதனால் செரிமானம் தடைப்படும். உணவு எவ்வளவுக்கெவ்வளவு இயற்கையாக இயற்கையோடு இணைந்ததாக இருக்கிறதோ அந்த அளவுக்குத் தண்ணீர் குறைவாக அருந்தினால் போதுமானது. நாளொன்றிற்கு 8 முதல் 10 குவளை போதும்.

குளிரூட்டப்பட்ட நீர் செரிமானத்திற்கு தடையாக இருக்கக் கூடும். நீரிலுள்ள குளுமையைச் சமப்படுத்துவதற்காக ஓரளவு உடல் வெப்பமும் விரயமாகக் கூடும். எனவே குடிக்கப் பயன்படுத்தப்படுவது குளிர்ந்த நீராக இருக்க வேண்டுமேயன்றிக் குளிரூட்டப்பட்ட நீராக இருக்கக் கூடாது. மருந்து எதுவும் கலக்கப்படாத, குளோரினேற்றம் செய்யப்படாத நீரே குடிப்பதற்கு மிகவும் ஏற்றது.

ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லை. நகர்ப்புறங்களில் குழாய்கள் மூலம் அனுப்பப்படுகின்ற குடிதண்ணீரில் பிளீச்சிங் பவுடர் கலக்கப்படுகிறது. இதனால் நீரில் குளோரின் கரைந்து சேர்கிறது. இதை முற்றிலுமாக நீக்க முடியாது என்றாலும் மண்பானைகளில் நீரைப் பிடித்து வைக்கின்ற போது மண்பானை ஓரளவு குளோரினை உட்கிரகித்துக் கொள்கிறது. மேலும், சிறிது குளோரின் ஆவியாகி வெளியேற வாய்ப்பு உள்ளது.

தண்ணீருக்கென்றே ஒரு தனிச்சுவை உண்டு. நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜன்தான் இச்சுவைக்குக் காரணம். நீரைக் கொதிக்க வைக்கும்போது இந்த ஆக்ஸிஜன் வெளியேறி விடுவதால் நீரின் சுவைகுன்றி விடுகிறது. ஆனால் தண்ணீர் சுத்தமாக இல்லாமல் இருந்தால் காய்ச்சிக் குடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. தண்ணீரைச் சூரியவெளிச்சம் படும்படி வைத்திருந்து பின்னர் வடிகட்டிக் குடிப்பதும் நல்லது.


Spread the love