மனிதனது பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் அவன் இயற்கையை விட்டு விலகிச் சென்றது தான். உலகத்தில் வாழுகின்ற அனைத்து உயிர்களும் இயற்கை தருகின்ற வடிவிலேயே தம் உணவை உட்கொள்கின்றன. மனிதன் ஒருவன் மட்டும் தான் உணவைப் பதப்படுத்தி, அதற்குச் சுவை சேர்த்து உண்ணத் தொடங்கினான். பசி நீங்குவதற்காக உண்பது என்ற நிலை மாறி ருசிக்காக உணவு என்ற கொள்கை எப்போது உருவாகியதோ அப்போதிருந்தே வியாதிகளும் உருவாகத் தொடங்கி விட்டன.
இன்றைக்கு மனிதர்கள் உண்ணுகின்ற எந்த உணவும் இயற்கையானதல்ல என்பது தான் உடல்நலவியலார் கருத்து. அப்படியானால் இயற்கை உணவு என்பது என்ன? இயற்கை தருகின்றவாறே மாற்றமில்லாது நம்மை வந்தடைகின்ற, பறித்ததும் உண்ணக்கூடிய காய்கள், கனிகள், கீரைகள், கிழங்குகள், முற்றாத பயறு வகைகள், முளைவிட்ட தானியங்கள் போன்றவை இயற்கை உணவுகளின் பட்டியலில் சேருகின்றன. அவிக்காத, வறுக்காத, அதிகம் உப்புச் சேராத, காரமில்லாத, இனிப்புச் சேராத எண்ணெய்களில் இட்டுப் பொரிக்காத உணவுகளும் இயற்கை உணவின் பாற்படும். இன்னும் ஒரு படி மேலே சென்றால், செயற்கை உரங்களோ, களை நீக்கிகளோ, பூச்சிக் கொல்லிகளோ, வேறு ரசாயனப் பொருட்களோ பயன்படுத்தப்படாமல் இயற்கை முறையில் சாணமும் தழையுரமும் இட்டு வளர்க்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பயறுகள் தான் உண்மையான இயற்கை உணவுகள். இவற்றை Macrobiotic foods என்று மேலை நாட்டினர் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய உணவு வகைகளை உட்கொண்டே ஒரு மனிதன் வாழ்ந்து விட முடியுமா என்ற ஐயப்பாடு பலருக்குத் தோன்றக் கூடும். நிச்சயமாக முடியும். இயற்கையில் கிடைக்கின்ற அரிசி, பருப்பு, தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு சரிவிகித இயற்கை உணவை ஒருவரால் பெற முடியும்.
அரிசியை அரைத்து, தீட்டி, வேக வைத்து நொய்மைப் படுத்திச் சாப்பிடுகின்ற போது அரைப்படி செலவாகும் ஒரு குடும்பத்திற்கு அதை முளைக்கட்டி வைத்து உண்ணும் போது அதில் பாதிதான் தேவைப்படும். 100 கிராம் பாசிப்பயிரை முளை கட்டினால் அது முளை விட்டு வெளிவரும் போது 350 கிராம் எடையாகிறது. 50 கிராம் பட்டாணியை முளை கட்டினால் அது 200 கிராம் முளையாகிறது. (தானியத்தைத் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துப் பின்னர் துணியில் முடிந்து வைத்து சிறிது தண்ணீர் தெளித்து வந்தால் இரண்டு நாளில் தானியங்கள் முளை விட்டு எழுந்து நிற்கும்) முளை விட்ட தானியங்களிலிருந்தும், பச்சைக் கீரை, காய்கள், பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் சக்தி அபரிமிதமானது.
இயற்கை மருத்துவத்தின் அடிப்டையே சமைக்கப்படாத இயற்கை உணவுகளை உண்பது தான். இவ்வகை உணவுகளை நோய்களின் தன்மைக்கேற்ப உண்டு வர நோய் நீங்கி நன்மை பெறலாம். நோயின்றி ஆரோக்கியத்தோடு இருப்பவர்களுக்கும் சமைக்காத இயற்கை உணவுகள் நல்ல உணவாகும். சான்றாக ஒரு பாகற்காயைப் பச்சையாக வெட்டி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுப் பாருங்கள். ஒரு அல்லி வெள்ளைப் பூண்டை, ஒரு துண்டு இஞ்சியை வாயிலிட்டுச் சுவைத்துப் பாருங்கள்.
அப்பொருள்களின் உண்மைக் குணம் என்னவென்பதை உங்களால் துல்லியமாக உணர முடிகிறது. இதே பொருள்களைச் சமைத்த பிறகு பாருங்கள். அந்தக் கசப்பும், காரமும், வேகமும் எங்கே போயின? குழம்பில், கூட்டில், அவியலில் நீரோடு நீராக நீர்த்துப் போய் விடுகின்றன.
எறும்பு முதல் யானை வரை எந்த விலங்கினமும் தங்களது உணவைச் சமைத்து உண்பதில்லை. அதனால் அவைகளுக்குத் தீங்கு எதுவும் நேர்வதில்லை. மாறாக அவை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றன. எனவே உணவுகளைச் சமைத்துத் தான் சாப்பிட வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. சமைக்காத உணவுகளில் மனிதர்களுக்குத் தேவையான எல்லா உயிர்ச்சத்துக்களும் விட்டமின்களும் இயற்கையாகவே அமைந்துள்ளன.
சமைக்காத உணவுகளான காய்கறிகளும், பழங்களும் மிக எளிதில் செரிக்கக் கூடியவை. அவற்றில் தேவைக்கதிகமான உப்போ, காரமோ, இனிப்போ கிடையாது. இயற்கை உணவினால் வயிற்றில் மிகுந்த அமிலமும், குடல் புண்ணும் தோன்றாது. உயர் இரத்த அழுத்தம் உண்டாகாது.
இதயம் எளிதாகச் செயல்படும். இரத்தம் தூய்மை பெறும். சிறுநீரகங்கள் தேவைக்கதிகமாகச் செயல்பட வேண்டாம். செரிவுறுப்புகள் தங்கள் சக்திக்கு மேற்பட்டுச் செயல்பட வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. இதற்கு மேலும் சில நன்மைகள் உடல் உறுப்புகள் அனைத்தும் அளவோடு செயல்பட்டுப் பின் ஓய்வு கொள்ளும் போது உடலின் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கிறது. தடுப்பாற்றல் உயர்கிறது.
இயற்கை உணவு நல்லது என்பதற்காக ஆடு மாடுகள் போல் இலையையும் தழைகளையும் தின்று வாழ முடியுமா? இன்றைய நடைமுறை வாழ்விற்கு இது ஒத்து வருமா என்று பலர் கேட்கக் கூடும். உண்மை தான் வேகமும் விரைவும் நிறைந்த இன்றைய வாழ்வில் இயற்கை உணவுகளை மட்டும் உண்டு வாழ்வதென்பது சற்று பிரயாசையான காரியம் தான் என்றாலும் நடைமுறை வசதி கருதி இயற்கை முறைகளை முற்றிலும் தவிர்த்தால் மனித இனம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அத்தகைய பெருந்தீமை நிகழாதிருக்க இயன்றவரை இயற்கை உணவுகளையும், இயலாத போது எளிய முறையில் சமைக்கப்பட்ட காய்கறி உணவுகளையும் உண்போம் என்ற கருத்து இன்று விரைந்து பரவி வருகிறது.