பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்த சித்தர்கள் தங்களின் தெய்வீகச் சக்தியுடன் இணைந்த சித்த வைத்திய முறையின் மூலம் மனிதனுக்குப் பாதிப்பைத் தந்த சுமார் 4448 விதமான நோய்களுக்கு குணம் தரக்கூடிய சிகிச்சை முறைகளை வழங்கிச் சென்றுள்ளனர். இத்தகைய பாரம்பரிய வைத்திய முறையில், மூலிகை மற்றும் தாதுக்களின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்கும், கல்லீரல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்தும் பல வகையான டானிக், மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கல்லீரலின் முக்கியமான பணிகள், செயல்பட முடியாமல் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீர்வு காண உதவும் பலவித மூலிகைகளைப் பற்றி இக்கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்,. தற்போதைய ஆங்கில மருத்துவத்தின் ஒரு சில புதுவகைக் கண்டுபிடிப்புகள், மருந்துகள் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கினாலும், சித்த வைத்திய முறையின் தனித் தன்மையானது பல ஆண்டுகளாக அதன் செயல்பாடுகள், திறன்களினால் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து வருகிறது என்பதை நாம் உறுதிபடக் கூறலாம். நமது உடல் உறுப்புகளில் முக்கியமனது கல்லீரல், இதயம் மற்றும் சுவாசப்பை ஆகும்.
இவற்றுள் மிக முக்கியமானது கல்லீரல் தான். சுத்தமான இரத்தத்தை உடல் முழுவதும் கொண்டு செல்வது, கெட்ட இரத்தத்தை சுத்தம் செய்வதற்காக நுரையீரலுக்கு அனுப்புவது என்ற ஒரு வேளை மட்டும் தான் இதயம் செய்கிறது. அது போல நுரையீரலானது, கெட்ட இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியேற்றி விட்டு, ஆக்ஸிஜன் வாயுவை அளித்து இரத்தத்தை சுத்தம் செய்வது என்ற ஒரு வேலையை மட்டும் தான் செய்கிறது.
ஆனால், கல்லீரலானது சுமார் 500 வகையான வேலைகளைச் செய்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். அவற்றுள் ஒரு சில முக்கிய வேலைகளை மட்டும் தெரிந்து கொள்வோம். நாம் சாப்பிடும் உணவிலிருக்கும் குளுக்கோஸை, கிளைக் கோஜனாக மாற்றி சேமித்து வைத்துக் கொள்ளூம் கல்லீரல், உடலின் சக்திக்காக தேவையான நேரங்களில் இரத்தத்தில் சேர்க்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமமாக இருக்கும் படி கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வடிகட்டும் வடிகட்டியாக செயல்படுகிறது. உடலில் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, வைட்டமின் சத்துக்களை உற்பத்தி செய்து சேமித்து வைத்துக் கொள்கிறது. பித்த நீரை சுரக்கிறது. பித்த நீரானது, உணவில் இருக்கும் கொழுப்புச் சத்தை செரிமானம் செய்ய உதவுகிறது. அத்துடன் உடலில் ஏற்படும் இரத்தக் கசிவை உறைய வைக்கும் ஃபைப்ரின் பொருளையும் உற்பத்தி செய்கிறது. மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்ற வேதிப் பொருளை தடுத்துச் சமாளிக்கிறது.
உடலின் எந்த உறுப்புக்கு, எவ்வித ஊறும் ஏற்படாமல் தடுக்க ஈஸ்டமின் என்ற வேதிப் பொருளை உருவாக்கி வழங்குகிறது. இரத்த ஓட்டம் அதிகமாகி இதயம் திணறம் போது, அந்த இரத்தத்தை உறிஞ்சி வைத்துக் கொண்டு, இரத்த ஓட்ட வேகத்தைக் குறைத்து, இதயத் துடிப்பை ஒழுங்கு செய்து சேப்டி வால்வு ஆக இயங்குகிறது. கல்லீரல் கெட்டு, ஒரு கோளாறு ஏற்படும் எனில், அதன் வேலைகள் பாதிக்கப்படும். அதனால் ஏதாவது ஒரு நோய் வந்து உடலைத் தாக்கும். அவற்றினால் வரும் நோய்கள் பல.
அவை,
அஜீரணம்
வயிற்றுவலி குடல்புண் காய்ச்சல்
இரத்தச்சோகை மஞ்சள்காமாலை
பாண்டுரோகம்
மலச்சிக்கல் மற்றும் இதனால் தோன்றும் பிற நோய்கள் கொழுப்பு அதிகமாக உடலில் சேர்வதால் உண்டாகும் இரத்தக் கொதிப்பு இதயம் சார்ந்த நோய்கள் இரத்த வாந்தி
ஆக இவ்வளவு நோய்களையும் வராமல் தவிர்ப்பது எந்த அளவு முக்கியம் என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். கல்லீரலைப் பாதுகாத்தால் அதற்குரிய வருமுன் காத்தல் என்று சில ஆயுர்வேத மருந்துகளையும், மூலிகைச் சூரணங்களையும் உட்கொள்வது நலம்.
உலகம் முழுவதும் அதிக அளவு மனிதர்களைப் பாதிக்கும் நோயாகவும், அதனால் அதிக அளவு இறப்பு விகிதம் ஏற்படக் காரணமாகவும் உள்ளது கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் தான். இதனை சிரோசிஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
கல்லீரலைப் பாதுகாக்கும் மூலிகைகள்
கல்லீரலுக்கு சித்த வைத்தியத்தில் பல மூலிகைகள் முன்னோர்களால் கண்டறிப்பட்டு பயன்படுகின்றன. அவை,
கீழாநெல்லி கரிசலாங்கண்ணி
மஞ்சள்
அதிமதுரம்
கடுகுரோகிணி சீந்தில்
கடுக்காய் நெருஞ்சில் தான்றிக்காய்
கற்றாழை
ஆமணக்கு
சீரகம்
சுக்கு
போன்ற முக்கியமான மருத்துவத் தாவரங்களை அடிக்கடி பயன்படுத்த கல்லீரலை வலுப்படுத்தும். கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தும்.
கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்
நாக்கு கசந்து காணப்படுதல், செரிமானமின்மை, வாந்தி மற்றும் குமட்டல், திடீரென உடல் எடை குறைதல் போன்றவை, அனைத்து வகையான கல்லீரல் குறைப்பாட்டிற்குரிய ஆரம்ப கால அறிகுறிகள் ஆகும். மேற்கூறிய பிரச்சனைகளுக்கு முன்பு கூறப்பட்ட மூலிகைகள் சிறந்த மருத்துவ குணமளிக்கும்.
கீழா நெல்லி
சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட மூலிகை இது. வைரஸ் கிருமிகளுக்கு எதிராக முதன்மையான வினைபுரியும் மூலிகை இது. மஞ்சள் காமாலையை குணப்படுத்துவதில் மிகச் சிறந்தது. மஞ்சள் காமாலை மட்டும் அன்றி ஹெச்.பி.வி., ஹெச்.சி.வி. என்ற வைரஸ் தொற்றுக்களையும் குறிப்பிட்ட அளவில் குணப்படுத்துகின்றன. கீழாநெல்லியை மோர் கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வரும் பொழுது இதன் பலன் உறுதியாகிறது.
கடுகு ரோகிணி, அதிமதுரம் போன்ற மூலிகைகளும் மேற்கூறிய வைரஸ் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கின்றன. கல்லீரல் பிரச்சனை காரணமாக ஏற்படும் இரத்தச் சோகைக்கு கரிசாலை கற்கம், அயஜம்பீர கற்பம், அன்னபேதி செந்தூரம், அயகாந்த செந்தூரம், அப்ரிஸ்க ராஜ கற்பம் போன்றவை மருந்தாக பயன்படுகின்றன.
அடிவயிறு மற்றும் கல்லீரல் கீழ்பகுதியில் நீர் வீக்கத்தை நெருஞ்சில் குடிநீர் குறைக்க உதவுகிறது. நெருஞ்சில் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாகும். மண்டூரதி அடை குடிநீர் கல்லீரல் வீக்கத்தை மற்றும் மிக அதிக இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அடிக்கடி மது அருந்தி, மதுவினால் பாதிப்படைந்த கல்லீரல் நோயாளிகளைக் குணப்படுத்த கரிசாலை கர்க்கம், கீழாநெல்லி கர்க்கம், பூவரசிலை கர்க்கம், ஆமணக்கிலை கர்க்கம், பீசாங்கு நாரி குடிநீர், சீகக்காய் குடிநீர் போன்ற எளிய சித்த மருந்துகள் பயனளிக்கின்றது.
பூனைக்காலி சூரணம், அமுக்கரா சூரணம், நெருஞ்சில் சூரணம், நிலப்பனை நெய் போன்ற மருந்துகள் ஈஸ்ட்ரோஜன் காரணமாக தோன்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக வழங்கப்படுகிறது.
கல்லீரலைப் பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்கள்
எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவுகளையே உட்கொள்ளுங்கள். எளிதில் ஜீரணமாகும் வண்ணம் அதிக அளவு காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெயில் தயாரிக்கும் மற்றும் கொழுப்புள்ள உணவுகளை தவிருங்கள். தேவையான அளவு பாதுகாக்கப்பட்ட சூடான நீர் அருந்துங்கள்.