“நோய்களால் பாதிக்கப்படாத தன்மை என்னவென்றால், வந்துவிட்ட வியாதியின் தீவிரத்தை குறைப்பது மற்றும் வராத நோய்களை வராமல் தவிர்ப்பது” என்கிறார் சரகசம்ஹிதை டாக்டர் எஸ்.எஸ்.கே.
இதைப்பற்றி அவர் விளக்கமாக கூறியதாவது:
என்னிடம் வரும் பலர் கேட்கும் கேள்வி, “டாக்டர், எனக்கு மட்டும் ஏன் அடிக்கடி ஜலதோஷம், இருமல் வருகிறது? குளிர்காலம் வந்தாலே போதும், மூக்கில் சளியாக கொட்டுகிறது. நான் நன்றாகத் தான் சாப்பிடுகிறேன்” என்பார்கள்.
சில தாய்மார்கள் “என் 6 வயது குழந்தைக்கு அடிக்கடி அலர்ஜி தாக்குகிறது. அடிக்கடி ஜலதோஷம், மூச்சிரைப்பு வருகிறது. இம்யூனிடி குறைவா? இம்யூனிடி அதிகரிக்க அதிமதுரம் கொடுக்கலாமா? இல்லை ‘சீந்தில் கொடி’ கொடுக்கலாமா? இவை எங்கு கிடைக்கும்? எப்படி தருவது? இல்லை, தேன், மீன் எண்ணை கொடுத்தால் போதுமா? நல்ல சத்துள்ள ஆகாரமாக பார்த்து பார்த்து கொடுக்கிறேன், அப்படி இருந்தும் என் குழந்தைக்கு ஏன் இப்படி அடிக்கடி ஏற்படுகிறது?’’ என்று பதட்டமாக கேட்கிறார்கள்.
இந்த கேள்விக்கு பதிலாகத்தான் ஆயுர்வேதம் உருவாகின்றது எனலாம். நல்ல உணவு உண்டாலும், பூமியில் மக்கள் நோய்களுக்கு ஏன் ஆளாகுகிறார்கள்? அதற்கு தீர்வு என்ன? என்று இந்திரனிடம் பரத்வாஜ முனிவர் கேட்க, அவருக்கு இந்திரன் ஆயுர்வேதத்தை உபதேசித்தார் என்கிறது ஆயுர்வேத வரலாறு.
சரகசம்ஹிதையில் “விவித அசித பீதியம்” (ஸு. ஸ்தானம் 28) அத்தியாயத்தில் ஆத்ரேயர் நல்ல உணவு மட்டும் போதாது வேறு பல காரணங்களும் உண்டு என்று விவரிக்கிறார். நல்ல தின சரியை அதாவது தினசரி கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், அந்தந்த சீசனுக்கேற்ற உணவு, வாழ்க்கை முறை, வாரம் ஒரு முறையாவது நல்ல எண்ணெய் குளியல், பிராணாயாமம், யோகா முதலியவற்றை செய்தல் நோய் தடுக்கும் சக்திக்கு அஸ்தி வாரமாகும்.
நமது உடலில் நோய் தடுக்கும் ஆற்றல் அற்புதமானது. அதே சமயம் சிக்கலானது. ஏனென்றால் அது மனிதருக்கு மனிதர் மாறுபடும். நமக்கு நோய்களை உண்டாக்கும். கிருமிகள் நாளுக்கு நாள் வீரியம் பெருகி வருவதால், நாமும் நமது நோய் தடுக்கும் திறனை மேம்படுத்தும் அவசியத்தில் இருக்கிறோம்.
இம்யூனிடி (Immunity) என்று இந்த யுகத்தில் நாம் சொல்வதை ஆயுர்வேதம் “வியாதிக்ஸமத்வா” என்கிறது. இதன் பொருள் “வியாதிக்கு எதிர்ப்பு”, த்ரிதோஷங்களுக்கும், தாதுக்களுக்கும் (திசுக்கள்) உள்ள தொடர்பை நோயால் இழக்காமல் சீராக வைத்தல் “தாது சாம்யா” எனப்படுகிறது. நோயை தாங்கும், தவிர்க்கும் திறன், போஷாக்கான உணவுச்சத்து, ஜீரண அக்னி மற்றும் திசுக்களின் அமைப்பு என்ற மூன்று விஷயங்களை சார்ந்திருக்கிறது. குறிப்பாக உடல் திசுக்களின் ஆரோக்கியமே உடலின் பலம். ஆயுர்வேதத்தின் படி திசுக்களின் சாராம்சம் “ஒஜஸ்” எனும் சக்தி. உடலின் வீரியம்.
ஓஜஸ்ஸை இரு விதமாக சொல்லாம்
பார ஓஜஸ் இதயத்தில் உள்ளது. இதன் இழப்பு மரணத்தை உண்டாக்கும்.
அபர ஓஜஸ் உடலெங்கும் ஊடுருவிப்பது.
ஓஜஸ்ஸை நவீன மருத்துவ முறையில் விளக்குவது கடினம். பெரிய வியாதிகளான எய்ட்ஸ், நீரிழிவு போன்றவற்றில் ஓஜஸின் இழப்பால் மேலும் பல தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். இது சரி தான், ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் கூட அதிகமாக நோயினால் பாதிக்கப்படாமலிருப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இதற்கு காரணம் நல்ல ஆகாரம் உண்பவர்கள், அவர்களின் உடல் அமைப்பு, மனக்கோளாறு, பிரகிருதி அவர்களுக்கு இருக்கும் தீய பழக்கங்கள் (அதீத பாலியல் ஈடுபாடு போன்றவை) வியாதி வர காரணமாகலாம்.
இம்யூனிடி (அ) பலத்தை ஆயுர்வேதம் 3 வகையாக சொல்கிறது
சகஜா – உடன் பிறந்த, இயற்கை நோய் தடுப்பு சக்தி
காலஜா – காலம், சீசன் மற்றும் வயது
யுக்திக்ருதா – நாமே உடல் நலத்தை பேணி, அடைவது.
காலஜா பலம்
நாம் எப்போது, எந்த இடத்தில், நேரத்தில் பிறந்தோம் என்பதும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். சில பிரதேசங்கள் சுத்தமாக, ஏரிகள், குளங்கள் நிறைந்து ‘கூலாக’ இருக்கும். இந்த கப பிரதேசங்களில் பிறந்தால் இம்யூனிடி அதிகமாக இருக்கும். காலை நேரத்தில் நோய் தடுப்பு சக்தி அதிகமாக இருக்கும். வியாதிகளுக்கு சில இடங்கள் சரிப்பட்டு வராது. உதாரணமாக ஆஸ்த்மா நோய் உள்ள மும்பை வாசிகள், பெங்களூரில் “செட்டில்” ஆவதில்லை. காரணம் பெங்களூரில் இருக்கும் குளிர்ந்த காற்று ஆஸ்த்மா வியாதியை அதிகரிக்கும்.
யுக்தி க்ருதா
ஆயுர்வேதத்தின் சிறப்பு சிகிச்சைகளின் மூலம் இம்யூனிடியை பெருக்கிக் கொள்ளலாம்.
ஆயுர்வேத அணுகுமுறைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளு முன், நோய் தடுப்பு சக்தி குறைபாடுகளின் பொதுவான காரணங்கள் என்னவென்று பார்ப்போம். அதற்கும் முன்பு உடலின் ‘இம்யூனிடி சிஸ்டம்’ எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
நமது உடல் ஆரோக்கியத்தை காக்கும் காவலன், நோய் தடுப்பு சக்தி.
வெளியிலிருந்து உள் வர முயற்சி செய்யும் கிருமிகளுக்கு முதல் தடைகள் – நமது தோல், கண்களின் Cornea (விழி வெண்படலம்), சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், சிறுநீரக மண்டலம், ஜனன மண்டலம் இவற்றின் உறுப்புக்களில் உள்ள ஜவ்வு போன்ற “லைனிங்” (Lining). இந்த தடுப்பு உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்கும் வரை, நம்மை எந்த கிருமியும் அணுகாது. இந்த தடைகளில் ‘உடைப்பு’ விபத்துக்கள், நெருப்பு காரணமாகலாம். இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. தவிர சில சுரக்கும் பொருட்களில் உள்ள என்ஜைம்கள் (Enzyme) பாக்டீரியாவை கொல்லும் ஆற்றல் உள்ளவை. உதாரணமாக கண்ணீர், பெண்களின் பிறப்புறுக்களிலிருந்து சுரக்கும் திரவம், ஜீரண மண்டல உறுப்புகளில் சுரக்கும் திரவங்கள், இரண்டாவது வரிசையில் ரத்தத்தின் வெள்ளை அணுக்கள், இவை தன்னிச்சையாக கிருமிகளை அழிப்பவை. நிணநீர் சுரப்பிகள், தைமஸ் சுரப்பி, எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், டான்சில்ஸ், அப்பெண்டிக்ஸ், கல்லீரல் முதலியன நோய் தடுப்பு படையை சேர்ந்தவை.
நோய்க்கிருமிகளை அழிக்க, முதலில் அவற்றை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். உதிரத்தின் சில டைப் வெள்ளை அணுக்கள் (B. dymphocytes) உடனடியாக கிருமிகளை அடையாளம் கண்டு கொள்கின்றன. இதர வெள்ளை அணுக்களுக்கு (T. Lymphocytes) இதர செல்களின் உதவி தேவை. தைமஸ் சுரப்பி, எலும்பு மஜ்ஜைகளில் வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தைமஸ் சுரப்பியில் தயாரிக்கப்படும். T. Lymphocytes, உடலில் தாக்கும் கிருமிகளை கண்டுபிடிக்க சொல்லித்தரப்பட்டவை.
எலும்பு மஜ்ஜையில் பல தரப்பட்ட வெள்ளை அணுக்கள் – நியூட்ரோபில் (Neutrophils) மானோசைட்ஸ் (Monocytes) மற்றும் B லிம்போசைட்ஸ் (B – Lympocytes) வெளியிலிருந்து ‘எதிரிகள்’ (கிருமிகள்) தாக்கும் போது எலும்பு மஜ்ஜையிலிருந்து வெள்ளை அணுக்கள் சிப்பாயிகள் போல அணிவகுத்து, உதிரத்தின் வழியே சென்று எதிரிகளை அழிக்கின்றன! நிணநீர் கணுக்கள் (Noda) யுத்த தந்திரம் போல் உடலின் முக்கியமான இடங்களில் அமைக்கப்பட்டு நாளங்களால் நன்கு இணைக்கப்பட்டு போர் ஆயத்தமாக நிலை கொண்டுள்ளன! இன்னும் பல வித வெள்ளை அணுக்கள் மேக்ரோபேஜஸ் (Macrophages) உள்ளன.