கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியத்திலும் தமிழக கல்வெட்டுக்களிலும் இந்த இலுப்பை ‘இருப்பை’ என்றழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த இலுப்பை பழங்கால மூலிகை என்பதற்கான சான்றுகள் பல உள்ளன. இது மதூகம், மது, மதுகம், குலிகம், அட்டி சந்தானகரணி, போன்ற பல் வேறு பெயர்களாலும் பல தமிழ் நிகண்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் சமஸ்கிருதப் பெயர்களும், மருத்துவப் பெயர்களும் கூட உண்டு.
இலுப்பையின் தாவரவியல் பெயர் மதூகா லாங்கிஃபோலியா – Madhuca longifolia. இப்பெயர் இதன் சம்ஸ்கிருத பெயரான மதுகாவிளிருந்து தான் வந்துள்ளது. இதன் தாவரக் குடும்பம் சப்போட்டா குடும்பமான சப்போட்டேஸி ஆகும்.
இலுப்பையில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன, அவை இலைகளின் வடிவத்தைக் கொண்டு தமிழில் நெட்டிலை இலுப்பை மற்றும் அகன்ற இலை இலுப்பை எனப்படுகின்றன.
நெட்டிலை இலுப்பை தென்னிந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் மட்டும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டுமே காணப்படுகிறது. இரண்டாவது வகையான அகன்ற இலை இலுப்பை இந்தியாவின் பல பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் நெட்டிலை இலுப்பை 22 பாடல்களில் பாடப்பட்டுள்ளது. ஆனால் கிழக்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டும் இரண்டு வகைகளுமே பரவலாகக் காணப்படுகின்றன.
நெட்டிலை இலுப்பை சுமார் 200 முதல் 400 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியது. 30 மீட்டர் உயரம் வரை உயர்ந்து வளரக்கூடியது. இதன் கடுமையான தடிமனான அடிமரப் பகுதி வயதிற்கேற்ப சுமார் மூன்று மீட்டர் கணம் வரை இருக்கும். இந்த மர வகை மலையடிவாரம் முதல் 1,200 மீட்டர் உயரம் வரை மட்டுமே காணப்படுகிறது. ஆனால் இது பொதுவாக பாலைத் திணையுடன் தொடர்பு கொண்டது. நல்ல கடுமையான வறட்சியான பாலைவனம் போன்ற பகுதிகளிலும், மணற்பாங்கான பகுதிகளிலும், கற்கள் நிறைத்த பகுதிகளும் நன்கு வளரக்கூடியது.
எனினும், இது கடந்த 2,000 ஆண்டுகளாக சாலையோரங்கள், தோப்புகள், கோவில்கள் அருகிலும் அதன் நிழலுக்காக வளர்க்கப்பட்டு வந்துள்ளது.
இலுப்பை மரங்கள் நிறைந்த தமிழர்கள் வாழுகின்ற பகுதிகள் அதன் காரணப் பெயரால் அழைக்கப்பட்ட்டுள்ளன. இலுப்பூர், இலுப்பைக்குடிக்காடு. இலுப்பைக்காடு போன்ற ஊர் பெயர்கள் இதற்கு உதாரணம்.
தமிழரால் புனிதமாகக் கருதப்பட்ட இந்த இலுப்பை திருச்செங்கோடு, மற்றும் திருவனந்தபுரம் போன்ற ஊர் கோவில்களின் தல மரமாகவும் உள்ளது.
மிக மெதுவாக வளரும் இந்த மரம் கோடையில் இலைகள் உதிர்ந்து, புதிய செம்புத்தகடு போன்ற கொழுந்து இலைகள் வளரத் துவங்கும்.
நெட்டிலை இலுப்பை கோடை காலத்தில் பூக்கும். பூ அரும்பு பூனையின் காலடிபோல் விரிந்து இருக்கும். பூக்கள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறமாக இருக்கும், நல்ல வித்தியாசமான மணம் கொண்டவையாக, கொத்துக் கொத்தாகக் காணப்படும். பூவிதழ்கள் தடிமனாக, ஒன்று சேர்ந்து வட்ட வடிவில் அகன்று இருக்கும். பூக்கள் துளையுடையனவாக இருக்கும்.
மகரந்தச் சேர்க்கை நடைபெற்றவுடன் பூவின் அகவிதழ்கள் மரத்தின் உயர்ந்த கிளைகளிலிருந்து காற்றில் விழுந்துவிடும். வெண்மைப் பூக்கள் காற்றில் மிகுதியாக விழுவது வானிலிருந்து ஆலங்கட்டி மழை விழுவது போலத் தோன்றுமாம். பூக்கள் வாடாமல் இருக்கும் போது யானைத் தந்தம் போன்ற நிறமும், உறுதியும் கொண்டிருக்கும். அதுவே வாடிய பின் மீன் தூண்டில் போன்று வளைந்து காணப்படும்.
இலுப்பையின் காய்கள் மற்றும் பழங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை காணப்படுகின்றன. பழங்கள் நீள் முட்டை வடிவிலும், பழுத்தவுடன் மஞ்சள் நிறத்தில், சதைப்பற்றுடன் காணப்படும். அதன் உள்ளே நீள்முட்டை வடிவ, பழுப்பான, வழவழப்பான, பளபளப்பான விதைகள் காணப்படுகின்றன.
மருத்துவப் பயன்கள்
இலுப்பையின் அனைத்து பாகங்களும் பழங்குடி மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. மரக்கட்டை விறகாக, மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மரப்பட்டை ஒரு வித சாயம் நிறைந்தவையாதளால் பொருட்களுக்கு சாயமேற்றவும், மூட்டுப் பிடிப்பு காய்ச்சல், தோல் அரிப்பு, புண்கள், வீக்கம் போன்ற நோய்களை நீக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இலைகள் கால்நடைத் தீவனமாகவும், மேல் பூச்சகவும், வலிகள், எலும்பு பிடிப்பு நீக்கியாகவும் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளன.
பழங்குடி பெண்கள் தாய்பால் சுரப்பை அதிகரிக்க இவ்விலைகளைத் தம்முடைய மார்பகங்களில் கட்டிக்கொண்டதாக தெரிகிறது.
இலுப்பை மரத்தின் மிக முக்கிய பாகம் அதன் பூக்கள் தான். இந்த பூக்கள் தான் அநேக பயன்பாடுகளைக்கொண்டது.
பூக்களின் இதழ்கள் இனிப்புச்சுவை கொண்டிருப்பதால் இதனை பழங்காலத்தில் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தியுள்ளனர். அதனால் தான் இது “ஆலையில்லா ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரையாம்” என முது மொழியாகக்கூட திகழ்ந்துள்ளது.
பஞ்ச காலத்திலும், பாலை நிலத்திலும் இது ஒரு முக்கிய உணவாகத் திகழ்ந்ததாக தெரிகிறது. இதன் பூக்களை வெல்லத்துடன் அல்லது தேனுடன் அரிசியுடன் சமைத்து மக்கள் உணவாக உண்டுள்ளனர். பூக்களில் சர்க்கரையைத் தவிர புரதம், வைட்டமின், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
மருத்துவத்தில்
இலுப்பை எண்ணெய்யால் கரப்பான், பூச்சிக்கடி நஞ்சு, சிரங்கு, விரணம், கடும் இடுப்புவலி இவை நீங்கும்… நரம்புகளை வலுவாக்கும்…
இதை குழந்தைகளுக்கு வரும் மண்டைக்கரப்பான், கை கால்களில் வரும் சொறி, சிரங்கு இவைகளுக்குத் தடவிவர ஆறும்.
நெருப்பனலில் இந்த எண்ணெய்யைச் சற்றேத் தாளக்கூடியவாறுச் சூடாக்கி இடுப்புவலி, நரம்புகளின் பலவீனத்தால் உண்டான நடுக்கம், முதலிய உபத்திரவங்களுக்கு அவ்விடங்களில் நன்றாகத் தேய்த்து வெந்நீரில் குளித்துவரக் குணமாகும்…
இத்தனை சிறப்புகள் நிறைந்த இந்த இலுப்பையின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வவ்வாலின் உணவாக, ஏழைகளின் நோயை போக்கும் மருந்தாக விளங்கும் இந்த இலுப்பை மரங்கள் இன்று அழிந்து வருகின்றன. இன்று இருக்கும் சில மரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயுர்வேதம்.காம்