ஊறு விளைவிக்காத உணவு

Spread the love

நம்மில் பெரும்பாலானோர் அளவிற்கதிமாக உண்பதுடன் தவறான உணவுகளையும் உண்டு வருகிறோம். உடலின் செயல்பாட்டிற்கு உணவு தேவை என்பதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லையென்றாலும் எவ்வகையான உணவுகளை உண்ண வேண்டும்? எந்த அளவில் உண்ண வேண்டும் என்பது பற்றிப் பெரிய பட்டி மண்டபமே நடத்தலாம். உணவுத் தொழில் வணிகத்தில் ஈடுபட்டிருக்கின்ற உணவுச் சாலைகளும் பெரும் நிறுவனங்களும் நமக்கு இயற்கையான உணவுகளைத் தராதது மட்டுமன்றித் தவறான உணவுகளைத் தருகின்றன.

அறிவியல் முறையில் நமக்குத் தெரிந்ததெல்லாம் உணவில் புரதம், கொழுப்பு, மாவுப் பொருட்கள், விட்டமின்கள் மற்றும் மணிச் சத்துக்கள் ஆகியவை அடங்கியுள்ளன என்பது தான். வேதியியல் பகுப்பாய்வுகளின் மூலம் நாம் அறிந்து கொண்ட இக்கருத்துக்களையே ஒட்டு மொத்தமாக நம்பி வாழ்கின்றோம். இயற்கைச் சூழலில் கிடைக்கின்ற இனிய, எளிய உணவு வகைகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், கொட்டைகள் இவைகளைப் பற்றி நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. மேலே சொல்லப்பட்ட ஊட்டச் சத்துக்கள் தவிர வேறு பல சத்துக்களும் இயற்கை உணவில் உள்ளன என்பதும், அவைகள் உடலில் சேர்கின்ற போது எண்ணரிய பல நன்மைகள் கிடைக்க கூடும் என்பது பற்றியும் நாம் சிந்திப்பதே இல்லை.

நமது உடலை ஒரு மாவு அரைக்கும் எந்திரம் போலவும் அதற்குள் எதைப் போட்டாலும் அதை அரைத்துச் செரிக்கச் செய்ய வேண்டியது அதன் கடமை என்றும் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவரது உடலும் ஒரு தனித்தன்மை வாய்ந்தது. நம் உடலுக்கேற்ற உணவுகளை உண்டு உடல் நலம் பேண வேண்டும். எனவே இயன்ற வரை இயற்கையான உணவுகளை உண்ண முயல வேண்டும். இயற்கை உணவிற்கு சரியான மாற்று வேறு எதுவுமில்லை.

மாறு பாடில்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறு பாடில்லை உயிர்க்கு

என்கிறது வள்ளுவம்.

வணிக முறையில் பெருமளவில் தயார் செய்யப்படுகின்ற உணவுகளில் உடலுக்குக் கேடு விளைவிக்கத் தக்க வேதிகளும், வண்ணங்களும், வாசனைப் பொருட்களும் இன்னும் பிற சேர்மானங்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் ஏற்படும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகம். நமது இன்றைய வாழ்க்கை முறை உண்பதற்காகவே உயிர் வாழ்கிறோம் என்ற வகையில் அமைந்திருக்கிறது. பல சமுதாய நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் உண்பதற்கே முதலிடம் தரப்படுவதை நாம் காண்கிறோம். தவறான உணவுகளாலும் அளவில் மிகுந்து உண்பதாலும் உடல் நலம் கெடுகிறது.

உண்பது என்பது மனநிலை தொடர்புடைய ஒரு செயல். இது நான்கு வழிகளில் செயல்படுகிறது.

பசி

உண்ண வேண்டும் என்ற உணர்வு கிளர்ந்தெழுகின்ற நிலையே பசி எனப்படுகிறது. உண்மையான பசி உணர்வை நம்மில் பலர் அறிந்திருக்கவே மாட்டோம். உணவை அதிகமாக உண்ண உண்ண இரைப்பையின் அளவு விரிகிறது. இதனால் அடிக்கடி நாம் உண்ண வேண்டிய தேவை ஏற்படுகிறது. பல நேரத்தில் நமக்குப் பசி தோன்றுகிறது. இது பட்டினியால் ஏற்படுகின்ற பசியில்லை. பழக்கத்தால் ஏற்படும் பசி பெரும் பகுதி மக்கள் நம் உடலில் பொதிந்திருக்கும் கொழுப்பின் துணை கொண்டு பல நாட்கள் உணவின்றி இருக்கலாம்.

உணவு நாட்டம்

நீங்கள் பசியின்றி இருக்கின்ற போதிலும் உங்கள் முன் சுவைமிகுந்த உணவுகள் படைக்கப்படுகின்ற போது உண்ண வேண்டும் என்று எழுகின்ற நாட்டம் அல்லது அவா இது. இந்த நாட்டத்தை நிர்வகிக்கின்ற மையம் (கிஜீஜீமீstணீt) மூளையில் இருக்கின்றது. உணவின் சுவையும், மணமும், தோற்றமும், தொடு உணர்வும், இந்த மையத்தை அடைகின்ற போது அவை உணவு நாட்டத்தை தூண்டி விடுகின்றன. உணவு நாட்டத்தை தூண்டி விடுவதில் உணவின் மணமும் நிறமும் முதலிடம் வகிக்கின்றன. இதனால் பசியில்லாத போதும் நாம் உண்பதற்கு அவாவுகிறோம்.

பழக்கம்

மனிதர்களது உணவு முறைகள் அவர்களது சிறிய பிராயம் தொட்டுப் பழகி வந்த பழக்கத்தின் அடிப்படையில் அமைகிறது. ஒரு நாளைக்கு மூன்று முறை உண்ண வேண்டும். வயிறு நிறைய உண்ண வேண்டும். வெண்ணெயும், பாலும், இறைச்சியும், முட்டையும், கேக்கும், ஐஸ்கிரீமும் நாவிற்குச் சுவையும் உடலுக்கு வலுவும் தரக்கூடிய உணவுகள் என்று நம் ஆழ் மனத்தில் வேரூன்றிய தவறான எண்ணங்களும் அதனால் ஏற்பட்ட பழக்கங்களுமே இதற்குக் காரணம்.

வாழ்க்கை / மரபு

நமது பழக்கங்களுக்கு மட்டும் நாம் அடிமையல்ல. நாம் வாழ்கின்ற சமுதாயத்தில் பழமையாக வாடிக்கையாக இருந்து வருகின்ற பழக்கங்களுக்கும் நாம் அடிமையாக இருக்கிறோம். அதனால் நாமும் அதையே பின்பற்ற வேண்டுமென்று நினைக்கிறோம். அவர்களது உணவு முறைகளிலிருந்து நாம் வேறுபட்டால் நம்மை நையாண்டி செய்வார்களோ என்று அஞ்சி அவர்களைப் போல் நாமும் உண்கிறோம்.

அடிப்படை உணவு முறை

புரதம் உடலுக்கு இன்றியமையாத ஒரு உணவுப் பொருளென்றும் அதை அதிக அளவில் உண்ண வேண்டும் என்று இது காறும் நாம் எண்ணி வந்திருக்கிறோம். இது தவறு என்று அண்மைக் கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் உணவில் 30 சதவிகிதம் புரதம் இருந்தால் போதுமென்றும் அதைப் பால், வெண்ணெய், முட்டை, இறைச்சி போன்றவற்றிலிருந்து பெறாமல் கொட்டைகள், விதைகள், தானியங்கள் போன்றவற்றிலிருந்து பெற வேண்டுமென்றும் உணவியலார் கூறுகின்றனர். அதே போன்று புலால் உணவுகளிலிருந்து பெறப்படும் சத்துக்களால் பல உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பதுவும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. நல்ல உணவு என்பது மூன்று வகையான அடிப்படை உணவுகளால் அமையக் கூடும். தானியங்கள், கொட்டைகள், விதைகள், காய்கறிகள் மற்றும் பழங்கள். இவை தவிர மிகக் குறைந்த அளவினதாக பால், தயிர், மோர், எண்ணெய், தேன் போன்றவை.

நாம் உண்டு வரும் உணவிற்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்று நீங்கள் எண்ணக் கூடும். எடுத்த உடனேயே இயற்கை உணவு முறைக்கு மாறுவதென்பது இயலாது. சிறுகச் சிறுகச் சமைத்த உணவுகளைக் குறைத்து சமைக்கப்படாத உணவுகளை அதிகரிக்க முயலுங்கள். முதலில் 25 சதவிகிதத்தில் தொடங்கிப் பின்னர் 50 சதவிகிதத்திற்கு வாருங்கள். அதன் பின்னர் முயன்று இவ்வளவினை அதிகரிக்கலாம். ஏறக்குறைய 80 சதவிகித உணவு சமைக்கப்படாத பச்சைக் காய்கறிகள், பழங்கள், விதைப் பருப்புகள், கொட்டைகளாக இருக்க வேண்டுமென இயற்கை மருத்துவ நூல்கள் கூறுகின்றன.


Spread the love
error: Content is protected !!