காய்கறியை கழுவி சாப்பிடுங்க..

Spread the love

நாள்தோறும் அதிகமாக பச்சைக் காய்கறிகளை உண்ண வேண்டும் என்று வளர்ந்து வரும் சிந்தனை ஒரு புறம். அதிகரித்து வரும் பூச்சி இனங்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெற்று லாபம் ஈட்ட வேண்டும் என்ற விவசாயின் சிந்தனை மறுபுறம். இவை இரண்டிற்கும் நடுவில் பெருகி வரும் விஞ்ஞான உலகின் கண்டுபிடிப்புகளாக புதுப்புது பூச்சிக்கொல்லிகள் வந்த வண்ணம் உள்ளன.

இப்பூச்சி மருந்துகள் காய்கறிகளின் உட்புகுந்து நம் உடலிலும் கலந்து பல வகையான கொடிய வியாதிகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதா? அப்படியெனில் என்ன செய்ய வேண்டும்? பூச்சிகொல்லிகளில் பல வகை உண்டு. நம் நாடு பூமத்திய ரேகையின் அருகில் அமைந்துள்ளதாலும் அதிக உஷ்ண நிலை இருப்பதாலும் இங்கு வளரும் பூச்சிகள் அதிக தற்காப்புத் திறன் கொண்டவை சீக்கிரமாக வளர்ந்து பரவக்கூடியவை.

எனவே, இங்கு பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகள் ஏனைய நாடுகளில் உபயோகிப்பதை விட சக்தி வாய்ந்தவையாகவும் அதிக நாட்கள் செடிகளில் தங்கி பயிர்களை காக்கக் கூடிய தன்மை கொண்டவையாக உள்ளன.

நம் நாட்டில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகள் ‘ஆர்கனோ குளோரின்’ வகையைச் சார்ந்தது. உலக நாடுகளில் பலவிதமான பூச்சிக் கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நம் இந்திய நாட்டில் விவசாயிகள் பல தரப்பட்ட பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துகின்றனர். அவை டிடீடி, பீஎச்சி, ஈன்டிரின் ஆஸ்டிரின் போன்றவை.

வளர்ந்து வரும் அனைத்து உலக நாடுகளிலும் ரசாயன பூச்சிக் கொல்லி மற்றும் உரங்கள் உபயோகப்படுத்தப்படாத காய்கறிகள், பழங்கள் ஆர்கானிக் என வழங்கப்படுகின்றது. அவற்றிற்கு மூன்று பங்கு விலையும் தரப்படுகின்றது. ஆனால், இது நம் நாட்டில் சாத்தியமில்லை.

ஏனெனில் நம் நாட்டில் பூச்சிகளும் பலவிதம். அவற்றின் சக்தியும் அதிகம். எனவே, விரைவாக அவை பல்கி பெருகி விடுகின்றன. அப்படியே வந்தாலும் பயிர்களின் மகசூல் மிக குறைவாக இருக்கும் அதனால் விலை மிக அதிகமாக பத்து மடங்குகள் வரை இருக்கும். எனவே நம் நாட்டில் பூச்சிக்கொல்லி உபயோகத்தை குறைக்க முடியாது. ஆகவே நாம் உபயோகிக்கும் காய்கறிகளில், பூச்சிக் கொல்லியின் திறனை எவ்வாறு போக்குவது அல்லது எஞ்சிய பூச்சிக் கொல்லியின் நஞ்சை எவ்வாறு நீக்குவது என்பது தான் மிக, மிக முக்கியம்.

இதனை கண்டறிய ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைத்து காய்கறிகளையும் வெவ்வேறு முறைகளில் சுத்தம் செய்து பின்னர் அவற்றில் உள்ள எஞ்சிய நச்சுத் தன்மையை கணக்கிட்டுப் பார்த்ததில் கீழ்க்கண்டவாறு கண்டறியப்பட்டது.

அதாவது 5% உப்புக் கரைசலில் (சோடியம் குளோரைடு) காய்கறிகளை 5 நிமிடங்கள் வரை கழுவியதில் தான் அதிக பட்சமாக எஞ்சிய நச்சுத் தன்மை குறைவாக காணப்பட்டது. நமது குடி தண்ணீரிலும் கிணற்று நீரிலும் சாதாரணமாகவே அதிக சோடியம் குளோரைடு காணப்படுவதால் அந்த நீரைக் கொண்டு 5 நிமிடங்கள் வரை நன்றாகக் கழுவினால் அதுவே போதுமானதாக கண்டறியப்பட்டது. தேவையெனில் தண்ணீரில் சிறிது சமையல் உப்பை சேர்த்தும் கழுவலாம். இந்த ஆராய்ச்சியின் முடிவில் எவ்வளவு தான் அதிகமாக கழுவினாலும் காய்கறிகளில் காலி பிளவரிலும், முட்டைக் கோசிலும் பழங்களில் திராட்சையிலும் அதிகபட்ச நச்சுத்தன்மை தங்கி இருந்ததும் கண்டறியப்பட்டது. இனி வரும் நாட்களில் அதிகமாக பச்சைக் காய்கறிகள், பழங்கள் உண்பவர்கள் அவற்றை நன்றாக நீரில் கழுவி பின் அவற்றை உண்ண பூச்சிக் கொல்லிகளிலிருந்து வரும் நச்சுத் தன்மையை தவிர்த்து பச்சைக் காய்கறிகளில் பொதிந்துள்ள நன்மைகளைப் பெறலாம்.


Spread the love