உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமானதாகும். உடற்பயிற்சியை முறைப்படி தொடங்க வேண்டும், முறையாக பின்பற்ற வேண்டும். உடற்பயிற்சியை பொறுத்தவரை ஒழுக்கம் மிகவும் முக்கியமாகும். ஒரு சிலர் ஜிம்மிற்கு சென்று ஒரு மாதம் வரையில், சரியாக உடற்பயிற்சி செய்வார்கள் பின்பு,ஒரு மாதம் கழித்து, உடற்பயிற்சி செய்யாமல் அலட்சியமாக இருந்து விடுவார்கள். ஒரு சிலர் அதிகப்படியான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். மேலே சொன்ன இரண்டு நடைமுறைகளும் தவறானதாகும்.
உடற்பயிற்சியை நீங்கள் சரியாக தொடங்கி சந்தோஷமாக முடிப்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ…
உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறீர்கள் என்றால், எந்த நோக்கத்திற்காக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்று தெளிவாக இருக்க வேண்டும். 5 கிலோ அல்லது 7 கிலோ உடலைக் குறைக்க வேண்டும், தொப்பையை கரைக்க வேண்டும் என்கிற ஏதாவதொரு நோக்கம் இருக்க வேண்டும்.
மிதமாக செய்யவும்…
எந்த ஒரு விஷயத்தையும் முதன் முறையாக அல்லது நெடுநாட்கள் போன பிறகு, நாம் செய்கின்ற ஒரு தவறு என்ன தெரியுமா, ஆரம்பித்தில் எடுத்தவுடனேயே தீவிரமாக செயல்படுவது. இது உடற்பயிற்சி விஷயத்திலும் சிலர் கடைபிடிப்பதுண்டு. உடற்பயிற்சி செய்யும் போது, ஆரம்பத்தில் அதி தீவிரமாக செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். தொடக்கத்தில் மிதமாக உடற்பயிற்சியை தொடங்க வேண்டும். உடலை நன்கு பழக்கிய பிறகு தீவிரமான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
ஒரு பழக்கமாக வேண்டும்…
காலையில் எழுந்திருக்கிறீர்கள் பல் துலக்குகிறீர்கள். பிற பணிகளை செய்கிறீர்கள் என்பதைப் போல, அன்றாடமும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய பணியாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி முக்கியம்…
எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது, மிகவும் மகிழ்ச்சியோடு தொடங்க வேண்டும். அவ்வாறு, மகிழ்ச்சியில்லாமல் தொடங்கினால், அதில் நீங்கள் வெற்றியடைவது கடினம்.
உடலைப் பற்றிய புரிதல்…
உங்களது உடல் குறித்த புரிதல், உங்களுக்கு நன்றாக இருக்க வேண்டும். உடலைப் பற்றிய புரிதல் இல்லாமல் உடற்பயிற்சி மேற்கொள்வது சரியான காரியமல்ல. உங்களது உடலின் தன்மையை புரிந்து அதற்கேற்ப உடற்பயிற்சியை மேற்கொள்வது தான் சாமர்த்தியமானது. சரியானது.
உடலைப் பற்றியும், உடற்பயிற்சி குறித்து உங்களுக்கு தெளிவு பிறந்து விட்டதா, உடனே உடற்பயிற்சியை தொடங்குங்கள், ஆரோக்கியமான வாழ்கையை வாழத்தயாராகுங்கள்.