வாயுத்தொல்லை எப்படி வருகிறது?
நாற்பதுவயதைக் கடந்தவர்கள் பெரும்பாலும் சந்திக்கும் பெரும் பிரச்சனை இதுதான். ஆனால், இந்த நவீன காலத்தில் பத்துவயது சிறுவர்களையும் இது விடவில்லை.
செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது உடலில் அமிலங்களின் சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி அளவு கடந்த தொல்லையைத் தருகிறது. வேலைப்பளு, மன அழுத்தம், நேரம்தவறி உணவு உட்கொள்ளுவது போன்றவைக்ளும் இதற்கு ஒரு காரணியாகிறது.
நாம் அவசர அவசரமாக சாப்பிடும்போதும், பேசிக்கொண்டே சாப்பிடும்போதும், காஃபி, தேனீர் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களை அருந்தும்போதும் நம்மையறியாமலேயே காற்றும் உள்ளே செல்லவிடுகிறோம்.
இதில் என்பது சதவிகிதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறுகிறது. மீதியுள்ள காற்று குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.
அடுத்து, குடலால் உணவு சீரணிக்க வைக்கப்படும்போது உணவு நொதித்தல், மற்றும் வேதிமாற்றங்கள் காரணமாக கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், முதலிய பல வாயுக்கள் உற்பத்தியாகின்றன.
இவற்றில் ஒரு பகுதி சுவாசப்பாதை வழியாக வெளியேறுகிறது. ஆனால், சில சமயங்களில் வெளியேறும் காற்று துர்வாடையுடன் இருந்தால் உடலில் ஏதோ கோளாறு இருப்பதாகப் பொருள் கொள்ளவேண்டும்.
வாயு அதிகமாகப் பிரிவதேன்?
சராசரியாக நாளொன்றுக்கு பதினைந்து முறை வாயு வெளியேறினால் கவலைப்பட வேண்டியதில்லை. இதற்கு மேல் அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்கவேண்டும். பொதுவாக புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவுகள், ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவது தான் இதற்கு முதன்மையான காரணிகளாக அறியப்படுகிறது.
அடுத்து மலச்சிக்கல், குடல் புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பையில் உள்ள கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (irritatble bowel syndrome) போன்றவற்றால் குடலியக்கம் தடைபடும் போது வாயு அதிகமாகலாம்.
பேதி மாத்திரைகள், ஆஸ்த்மா மாத்திரைகள், ஆண்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கதிகமாக உண்டாலும் வாயுத்தொல்லை அதிகரிப்பது வழக்கம்.
உடல் பருமன் உள்ளவர்களுக்கு அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வேலை செய்பவர்கள், வயதானவர்களயும் இது விட்டுவைப்பதில்லை. உடற்பயிற்சி இன்மை, உடலியக்கம் இல்லாமல் முடங்கிக்கிடப்பது, தேவையான தண்ணீர் பருகாதது போன்ற காரணங்களாலும் வாயுத்தொல்லை அதிகரிக்கிறது.
சாதாரணமாக மனிதனால் வெளிவிடப்படும் வாயுவில் துர்நாற்றம் எதுவுமிருக்காது. ஆனால், உடலிலுள்ள சில என்சைம் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை, அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபடு, பெர்க்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியெறும். அப்போது தான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகும்.
வாய்விற்க்கு எதிரிகள்
மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ், போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்த வரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
என்ன சிகிச்சை?
வாயுப்பிரச்சனைக்குக் காரணம் உணவா? நோயா? என்று மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு சிகிச்சை பெறுவது வாயுத்தொல்லையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும். வாயுப் பிரச்சனைக்கு இப்போது நிறைய மாத்திரை, மருந்துகள் உள்ளன. விரைவிலேயே இதைக் குணப்படுத்தலாம் என்றாலும் இதை வரவிடாமல் தடுக்கச் சரியான உணவுக் கட்டுப்பாடும், உணவு முறைகளும் அவசியம்.
வாய்வை கட்டுப்படுத்த சில டிப்ஸ்
இத்தொல்லை உருவாகும் சமயங்களில் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுக்கொள்ளவேண்டும். இது வாயுவை சமன் செய்து ஜீரண அமிலங்களை முறையாக தூண்டும். இதனால் வாயுத் தொல்லை தடுக்கப்படும்.
மசாலா பொருட்கள்
சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்ப்பட்டவுடன் இதனை வெறும் வாயில் மென்றால் உடனே நல்ல பலன் காணலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழம் மிகச் சிறந்த பலனைத் தரும், வாயுத்தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப்பழம் சாப்பிட்டால் அது வாயுவை கட்டுப்படுத்திவிடும்.
தேங்காய்
தேங்காய்த்துருவல் சாப்பிடலாம், தேங்காய் நீர் அல்லது தேங்காப்பாலைக் குடிப்பதால் வாயுத் தொல்லை குணமாகிறது இவை ஜீரண உறுப்புகளை ஆசுவாசப் படுத்தி அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறாது.
பேரிக்காய்
ஆப்பிளைப் போன்ற சத்துக்களுடன் இருக்கும் பேரிக்காயும் வாயுத் தொல்லையிலிருந்து விடுவிக்கிறது. ஜீரண சக்தியையும் தூண்டும். தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டால் இதிலிருந்து நிவரணம் கிடைக்கும்.
புதினா இலைகள்
புதினா அமிலத் உற்பத்தியை தடுக்கிறது. வாயுவினால் அவதிப்படும் போது புதினா இலைகளை சிறிது மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணையை வெந்நீரில் ஒரு துளி கலந்து பருக உடனடி பலன் கிடைக்கும்.
மிளகுச் சூரணம்
மிளகை பொடி செய்து ஐம்பது கிராம் எடுத்து இரண்டு குவளை நீரில் சேர்த்து முப்பது நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி அந்நீரை வடிகட்டி கால் கோப்பை அளவு என மூன்று வேளைகளூம் அருந்தினால் வாயுத்தொல்லை குணமாகும்.
சுக்குக் காப்பி
சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல் மற்றும் சுக்கு இவற்றை நெய்யுடன் வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத்தொல்லை குணமாகும்.
ராஜேஸ்வரி ஸ்ரீதர்.
மேலும் தெரிந்து கொள்ள…