தாய்மைப் பேறு காலமான அந்த பத்து மாதங்கள் உங்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியைத் தந்து இருக்கும். குழந்தை பிறந்த பின் ஏராளமான விஷயங்களை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைக்கு நேரத்திற்கு பாலூட்டுவது, குளிப்பாட்டுவது, உடல் சுத்தம் செய்வதுடன் உங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். முதல் ஆறு மாதங்கள் குழந்தை மற்றும் உங்களுடைய உடல் ஆரோக்கியத்திலும்கவனம் செலுத்துவதுடன், குழந்தை பெறுவதற்கு முன்பு காணப்பட்ட (அதிகரித்த) உடல் எடையைக் குறைப்பதும் அவசியமாகிறது. பிரசவத்திற்குப் பின்பு உடல் எடையைக் குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகும். ஒரே நாளில், ஒரே வாரத்தில் அல்லது ஒரே மாதத்தில் எடையை குறைப்பது என்பதெல்லாம் நடக்காத ஒன்று. உங்கள் ஆரோக்கியம், உங்கள் குழந்தையுடன் சம்பந்தப்பட்டது என்பதால் நீங்கள் எடுத்துக் கொள்ளப் போகும் உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் சரியான மற்றும் சமமான நிலையில் இருப்பது மிகவும் அவசியம்.
பிரசவத்திற்கு முன்பு உங்கள் வழக்கமான உடல் எடையில் இருந்து கர்ப்பக் காலத்தில் சுமார் 10 முதல் 12 கிலோ வரை கூடுதலாக இருந்திருப்பின் மேற்கூறிய கூடுதல் கொழுப்பினை சில மாதங்களுக்குள் குறைத்து விட முடியும். ஆனால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கூடுதல் உடல் எடை இருந்து, கர்ப்பக் காலத்தில் அதற்கு மேலும் கூடுதலான உடல் எடையில் நீங்கள் இருந்திருந்தால், பழைய ஆரோக்கிய உடல் எடைக்கு நீங்கள் மீண்டும் வருவதற்கு மிக நீண்ட நாட்கள் அல்லது மாதங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
கர்ப்பக் காலத்தில் நீங்கள் அதிகம் பெற்றிருந்த கூடுதல் உடல் எடையை மிக விரைவில் குறைத்து விட முயற்சிக்க வேண்டும். இல்லயெனில், பிற்கால வாழ்க்கையில் அந்த கூடுதல் எடையை குறைப்பதற்கு அதிக சிரமப்பட வேண்டியிருக்கும். இந்த எடைக் குறைப்பானது சிறிது சிறிதாக (மெதுவாகவும்) மேம்படுத்தும் நிலையிலும் இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் இந்த கூடுதல் கொழுப்பு சேர்வதற்கு ஒன்பது மாதங்கள் எடுத்துக் கொண்ட காரணத்தினால், அந்த கூடுதல் கொழுப்பைக் கரைக்க நீங்கள் சுமார் 10 முதல் 12 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆயுர்வேத முறைப்படி பிரசவத்திற்குப் பின் உடல் எடையைக் குறைப்பது எப்படி?
பிரசவம் முடிந்து, குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் உங்கள் உடல் எடையைக் குறைக்க ஆயுர்வேத மருத்துவரின் பரிந்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன.
தினசரி 10 முதல் 12 தம்ளர் சூடான சீரகத் தண்ணீர் அருந்துங்கள். இதன் மூலம் உடல் வளர்சிதை மாற்ற இயக்கத்தினை ஊக்கப்படுத்துவதுடன் உடலின் அனைத்து இயக்கங்களும் சீராக செயல்பட வைக்க உதவும்.
சீரகத் தண்ணீர் எவ்வாறு தயாரிப்பது?
ஒரு லிட்டர் நீரில் இரண்டு தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின் அடிக்கடி பருகவேண்டும். எப்பொழுதும் உங்கள் உடலை வெதுவெதுப்பாக வைத்திருங்கள். உடல்வெப்ப நிலை அதிகரிக்கும் பொழுது, இரத்த ஓட்டத்தை சிறப்பாக இயங்கத் தூண்டுவதுடன் கொழுப்பு குறைந்து வளர்சிதை மாற்றச் செயலும் விரைவுபடும். உயர்கின்ற உடல் வெப்ப நிலை கலோரிகளை எரிப்பதும்துரிதமாக்கப்படும்.
வாரம் இருமுறை வெதுவெதுப்பான நல்லெண்ணை எடுத்துஉங்கள் உடல் முழுவதும் தடவியபின் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின் வென்னீரில் குளிக்க வேண்டும். சருமத்தை நன்கு தேய்த்துக் குளிப்பதற்காகசோப் அல்லது உடலை சுத்தப்படுத்தும் ரசாயனப் பொருட்களை உபயோகப்படுத்தாமல் , சீகக்காய் அல்லது பயத்தமாவு பொடியைப் பயன்படுத்தவும். ஆயுர்வேதத்தில் இவ்வாறு பொடியை உபயோகித்து சருமத்தை சுத்தம் செய்வதை “ உத்வர்த்தான “ என்பர். இம்முறை குறிப்பாக உடல் பருமனுக்குரிய சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் நீங்கள் மசாஜ் செய்வதை கீழிருந்து மேலாக அதாவது, முதலில் காலின் மேல்பாதம், முழங்கால், தொடை, வயிறு, மார்பு, கழுத்து, முகம் இறுதியாக தலைப் பகுதி என்று செய்ய வேண்டும். பழைய முறைப்படி பிரசவத்திற்கு பின்பு உள்ள சிகிச்சையில், பெண்கள் ‘தசமூல அரிஷ்டம்’ என்ற மருந்தை தினமும் இரண்டு வேளையும் 10 மி.லி. அளவு உணவு உட்கொண்ட பின் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய மருந்தைசாப்பிடுவதால், வாத தோஷத்தை இயல்பான நிலைக்கு கொண்டு வரும். மேலும், வாதம் மற்றும் கொழுப்பைக் குறைக்கும், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்.
அதிக அளவு எண்ணை அல்லது அதிக அளவு எண்ணைஉணவில் தங்குவது போல பொரிப்பதை தவிர்க்கவும்.
ஆயுர்வேத மருத்துவத்தைப் பொறுத்தவரை, பிரசவத்திற்குப் பின்னர் பெண்களின் உணவுப் பட்டியலில் சுத்தமான பசுவின் நெய் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வளர்சிதை மாற்ற இயக்கத்தில் வைட்டமின்களை கரைப்பதற்கு போதுமான எண்ணையின் அவசியத்தை பசு நெய் கொடுக்கிறது. தினசரி இரண்டு தேக்கரண்டி அளவு பசு நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, பரம்பரியமாக நாம் குறிப்பிட்ட இனிப்பு பண்டங்களை குழந்தை பிறந்த பின் முதல் மூன்று மாதங்களுக்கு இளந்தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தஉணவுப்பண்டங்கள் அதிக அளவு பசு நெய் மற்றும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கபட்டிருப்பதால், அதிக அளவு கலோரிகளைக் கொண்டுள்ளது.
இளந்தாய்மார்கள் குழந்தைக்கு அதிக அளவு பாலூட்ட வேண்டும் என்பதற்காக அதிக கலோரி அளவு உள்ள உணவுகளை சாப்பிடும் பொழுது அதிக அளவு உடல் பருமன் ஆகி விடாமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான உணவுகளையும் உட்கொள்வது என்பது முக்கியமானது.. குழந்தை பெற்றுள்ள இளம் தாய்மார்களுக்கு லசுனக்ஷீரா என்ற மருந்து உட்கொள்ள பரிந்துரைக்கிறது. லசுன என்றால் வெள்ளைப் பூண்டு மற்றும் க்ஷீரா என்றால் பால் என்றும் பொருளாகும். வெள்ளைப் பூண்டுப் பால் அருந்துவதால், வளர்சிதை இயக்கம் சீராக உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
வெள்ளைப் பூண்டுப் பால் தயாரிப்பது எப்படி?
வெள்ளைப் பூண்டு நான்கு அல்லது ஐந்து பற்களை எடுத்துக் கொண்டு, சுத்தம் செய்த பின், ஒரு தம்ளர் பால் எடுத்துசர்க்கரை சேர்க்காமல் காய்ச்சிக் கொள்ளவும். இந்தப் பாலை காலை மற்றும் இரவு உணவிற்குப் பின்னர் தினசரி இருவேளைகளுக்கு அருந்தலாம்.
மிளகு, சீரகம், ஓமம் போன்ற பொருட்கள் உடலில் உள்ள பிரச்சினைகளை சமப்படுத்துகின்றன என்று ஆயுர்வேத மருத்துவ நூல்கள் கூறுகின்றன. மேற்கூறிய பொருட்களைப் பயன்படுத்தி எளிதாக தயாரிக்கக் கூடிய ஒரு சில சமையல் செய்முறைகளை செய்து பார்க்கலாம்.
மூன்று பங்கு சீரகம், ஒரு பங்கு மிளகு மற்றும் அரை பங்கு ஓமம் எடுத்துக் கொண்டு அனைத்தையும், தனித் தனியாக சிறிது பசு நெய் விட்டு வறுத்து பின் மூன்றையும் ஒன்றாகக் கலந்து, பொடியாகச் செய்து ஒரு காற்று புகாத கண்னாடி அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். இதை அரை தேக்கரண்டி அளவு சூடான சாதத்தில் இட்டு, அரை தேக்கரண்டி பசு நெய் மற்றும் சிறிதளவு உப்பு கலந்து மதிய உணவிலும், இரவு உணவிலும் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு : நீங்கள் மூல நோய் அல்லது மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர் எனில் மிளகு மற்றும் ஓமம் சேர்ப்பதை தவிர்க்கவும்.
பசுமையான கீரை உணவுகளை உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும். சமைக்காமல், பச்சையாக சாப்பிடுவது கூடாது. எப்பொழுதும் சமவிகிதமான உணவுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து சாப்பிடவும். ஓட்ஸ், பிஸ்கெட், கோதுமை ரஸ்க் வீட்டில் முழுத் தானிய கோதுமையில் தயாரிக்கப்பட்ட கோதுமை பிஸ்கெட்டுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. பசியாக இருக்கும் வேளைகளில் இவற்றைஎடுத்துக் கொள்ளலாம். ஆப்பிள் துண்டுகள், காய்கறி சாலட்டுகள், உலர்பழங்களையும் சாப்பிடலாம்.
முதல் மூன்று மாதங்கள் உடற்பயிற்சி எதுவும் செய்ய முயற்சிக்காதீர்கள். குழந்தை பிறந்த மூன்று மாதங்கள் கழிந்த பிறகும் உடலுக்கு கடினமில்லாத எளிய உடற்பயிற்சிகளான நடைபயிற்சி, யோகாசனம் போன்ற பயிற்சிகளை தினம் தோறும் சுமார் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். இதை தவிர்த்து உங்கள் அன்றாட வீட்டு வேலைகளை அல்லது அலுவலக வேலைகளைச் செய்யலாம். தினசரி காலையில் முதல் வேலையாக நீங்கள் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து ஒரு கோப்பை அருந்த வேண்டும். இது உடலில் கலந்துள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறுவதற்கும், உடலில் தங்கியுள்ள கொழுப்பை எரிப்பதற்கும் மிகச் சிறந்த ஒன்றாக அமைகிறது. சீரகம், மிளகு மற்றும் ஓமம் கலந்த பொடியை உங்கள் சாலட் மற்றும் உணவுகளில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டு வாருங்கள். நீங்கள் சாப்பிடும் சத்தான உணவுகளையும் அதன் கலோரி அளவுகளையும் கண்காணித்து கொண்டே வாருங்கள். தினசரி பகல் வேலையில், சுமார் காலை 11 மணியளவில் சாப்பிடுவது போல கைப்பிடியளவு உலர் பழங்களான பாதாம், அத்தி, திராட்சை மற்றும் வால்நட் போன்றவைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
இதன் மூலம் உங்கள் உடலுக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் அடங்கிய சத்துக்களை எளிதாகப் பெற இயலும். தர்ப்பூசணி, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்வீட் லைம் போன்ற குறைவான கலோரி உள்ள பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள். சமைக்கப்பட்ட பருப்பு வகைகள், முட்டையின் வெண்கரு, மெல்லிய இறைச்சி மற்றும் மீன் உணவுகளில் அதிக அளவு புரதம் இருப்பதால் அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் இரவு உணவினை இரவு எட்டு மணிக்குள் சாப்பிட்டு முடித்து விடுங்கள்.
மிகச் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகளும், உடற்பயிற்சிகளும் பிரசவத்திற்குப் பின்னரும் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும். ஆனால், அதற்கு உடனடியான பலனை எதிர்பார்க்க முடியாது என்பதால் பொறுமையும், சகிப்புத் தன்மையும் உங்களுக்கு இருப்பதும் அவசியமானது. உங்களுடைய முயற்சி உங்களுக்கு உறுதியாக நல்ல முடிவைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.