கொலஸ்ட்ராலின் மறுபக்கம்

Spread the love

கொலஸ்ட்ரால் பற்றிய மருத்துவர்களின் தீவிரமான எச்சரிக்கைகளைக் கண்ட மக்கள் கொலாஸ்ட்ராலை ஒரு எதிரியாகவும், விரோதியாகவும் கருதக் தொடங்கியுள்ளனர். எல்லாப் பொருள்களும் இருப்பதுபோல் கொலஸ்ட்ராலுக்கும் இரண்டு பக்கங்கள் (two sides) உள்ளன.

மனித உடலில் உள்ள செல்களின் சீரான செயல்பாட்டிற்கு கொலஸ்ட்ரால் மிகவும் அவசியம். செல்கள் சிதைவுறாமல் இருக்கவும், உடலுறுப்புகள் நன்கு செயல்படவும் கொலஸ்ட்ரால் உதவுகிறது. மேலும் டெஸ்டோஸ்டீரான், எஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் சுரப்பதற்கும் இது அவசியமாகிறது. சாதாரணமாக மனித உடலின் சிறப்பான செயல்பாட்டிற்குத் தேவையான கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரலே (Liver) தந்து விடுகிறது. எனவே உணவு மூலம் நாம் உட்கொள்ளும் கொலஸ்ட்ரால் தேவைக்கு அதிகமாதாகிறது. முட்டை, பால், இறைச்சி போன்றவைகளில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் உள்ளது.

பொதுவாக இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு உயர்வதற்கு ஒழுங்கற்ற உணவு முறையும், தேவைக்கு அதிகமாக உண்பதுவுமே முதற் காரணமாகும். இதற்கு மதுப் பழக்கமும் முக்கிய காரணம். இது தவிர சிறுநீரக கோளாறு, தைராய்டு குறைபாடு போன்றவைகளும் காரணமாகலாம். இது தவிர உழைப்பில்லாத வாழ்க்கை முறை, உடல் எடை மிகுதி, புகை பிடித்தல் போன்றவையும் காரணமாகலாம்.

இரத்தத்தில் அளவிற்கதிகமாக கொலஸ்ட்ரால் சேரும் போது அது இரத்தக் குழாய்களைக் குறுகச் செய்வதுடன் இதயத் தமனிகளில் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

இரத்த கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் மசாஜ், மூலிகை எண்ணெய்க் குளியல் மற்றும் மூலிகை கஷாயங்கள் நல்ல பயனளிக்கின்றன. கொலஸ்ட்ராலை அளவோடு வைத்து அதை நம்முடைய நண்பனாக்கிக் கொள்வோம்.

ஓட்ஸ் கொலஸ்ட்ராலைக் குறைக்குமா?

பல ஆண்டுகளாக ஓட்ஸ் உட்கொள்வது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது என்று கூறப்பட்டு வந்ததால் மக்களில் பலரும் இன்று ஓட்ஸைத் தங்கள் உணவின் ஒரு பகுதியாக உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.  இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் மருத்துவமனை மற்றும் போஸ்டன் மகளிர் மருத்துவமனை ஆகிய இரண்டிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து ஓட்ஸ் இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

50 வயதுக்கு கீழ்பட்ட 20 ஆரோக்கியமான மனிதர்களை 12 வாரங்கள் உணவின் ஒரு பகுதியாக ஓட்ஸை உட்கொள்ளச் செய்தனர். தினமும் 85&100 கிராம் ஓட்ஸ் தரப்பட்டது. 12 வாரங்களுக்குப் பிறகு ஓட்ஸ் தருவது நிறுத்தப்பட்டு ஆட்டா எனப்படும் முழுக் கோதுமை மாவினால் தயாரிக்ப்பட்ட உணவு வகைகள் தரப்பட்டன. இவ்வாறு சில வாரங்கள் இம்முறை அனுசரிக்கப்பட்டது. பின்னர் இவர்களது கொலஸ்ட்ரால் அளவைக் கணக்கிட்டபோது இரண்டு வகை உணவின் போதும் மிகக் குறைவான அளவே, அதாவது சராசரி 7.5% தான் கொலஸ்ட்ரால் குறைந்திருந்தது. அதுவும் இந்த பரிசோதனைக் காலத்தில் இவர்கள் பிற கொழுப்புப் பொருள்களைச் சேர்க்காமல் இருந்ததனால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து சிரக்யுஸ் (syracuse) பல்கலையில் (நியூயார்க்) நடத்தப்பட்ட ஆய்விலும் கொழுப்புப் பொருள்களை விலக்கி, கொலஸ்ட்ரால் குறைவான உணவுகளை உண்பதால் குறைகின்ற அளவே ஓட்ஸ் உண்ணும்போதும் குறைகிறது என்று தெரிய வந்துள்ளது.

உணவு உண்ட உடனே செய்யக் கூடாத 9 காரியங்கள்

கடினமான வேலையில் ஈடுபட வேண்டாம்.

உணவு உண்டவுடனே இதயம் வயிற்றிற்கும் குடலுக்கும் இரத்தத்தை அதிகம் செலுத்துகிறது. கடினமான வேலைகளை உடனே மேற்கொண்டால் இரத்தம் அங்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் இதயம் அதிகமாகச் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதயம் திணற வாய்ப்புண்டு.

மல்லாந்து படுக்க வேண்டாம்.

உணவு உண்டவுடன் மல்லாந்து படுக்க வேண்டாம். அவ்வாறு படுத்தால் எதுக்களிப்பு, புளிச்ச ஏப்பம் உண்டாகலாம். சில வேளைகளில் நெஞ்செரிச்சலும் ஏற்படலாம். உணவு உண்டு அரை மணி நேரம் உட்கார்ந்துவிட்டுப் பின்னர் படுப்பது நல்லது. படுக்கும்போது வலது பக்கம் சாய்ந்து படுப்பது நல்லது.

புகைபிடிப்பதைத் தவிர்க்கலாம்.

உணவுக்கு பின்னர் நமது அவயவங்களில் கிரகிப்புத் தன்மை உயர்ந்து இருக்கும். அந்த வேளையில் புகை பிடித்தால் சிகரெட்டில் உள்ள நச்சுப் பொருள்கள் அதிக அளவில் இரத்தத்தில் கலக்க வாய்ப்பு உண்டாகும்.

உணவு உண்டவுடன் காப்பி அருந்தக் கூடாது.

உணவு உண்ட உடனே காப்பி குடிப்பது என்பது (Gastro Oesophagus Reflex Disease) என்று GERD உண்டாகக் காரணமாகலாம். காபியில் உள்ள கபீன் என்னும் ஆல்கலாய்ட் உணவு செரிமானம் ஆவதைத் தாமதப்படுத்துகிறது.

உணவுக்குப் பின் உடனே ஸ்கூட்டர், மோட்டர் சைக்கிள்களில் பயணிக்க வேண்டாம்.

குலுங்கி குலுங்கி இரு சக்கர வாகனங்கள் ஓடுவதால் உணவு செரிமானமாவது தடைப்படுகிறது. வயிறு உப்பியது போன்ற ஒரு உணர்வும் உண்டாகக் கூடும்.

மருந்துகளை உணவு உண்டவுடனே உட்கொள்ள வேண்டாம்.

ஆன்ட்டிபயாடிக் போன்ற மருந்துகளை உணவு உண்டவுடன் உட்கொள்ள வேண்டாம். உணவு உண்டு ஒரு மணி நேரம் ஆன பின்னர் உட்கொள்வது நல்லது.

உணவு உண்டவுடன் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டாம்.

உடலில் தண்ணீர் பட்டதும் இரத்தம் உடலின் பல பாகங்களுக்கும் விரைந்து செல்லத் தொடங்கும். அதனால் வயிற்றுக்குச் செல்கின்ற இரத்தத்தின் அளவு குறையும். இது செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும்.

உணவுக்குப் பின் இனிப்பும் பழங்களும்

பொதுவாகப் பகல் உணவிற்குப் பிறகு பழங்களும், ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு சாப்பிடுகின்ற பழக்கம் இன்று காணப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதில் கவனமாக இருந்து இனிப்பைத் தவிர்க்கவும்.

உணவு உண்ட உடனே உடலுறவு வேண்டாம்.

உடலின் இரத்த ஓட்டம் உணவு உண்டவுடன் வயிற்றுப் பகுதிக்கு விரைகிறது. செரிமானத்திற்கு இது அவசியமாகிறது. எனவே, உணவு உண்ட உடனே உடலுறவு கொள்வது இதயத்தை பாதிக்கக் கூடும். ஆதலால் ஓரளவு உணவு செரிக்கும் வரை காத்திருப்பது நல்லது.


Spread the love