வாயைக் கட்டுவோம்; கொழுப்பைக் குறைப்போம்

Spread the love

நாம் எல்லோரும் கொழுப்பு பிடித்தவர்களாக இருப்பதில் தப்பில்லை. ஆனால், அதிக கொழுப்பு பிடித்தவர்களாக இருக்க கூடாது. கொழுப்பு மனிதனுக்கு மிக இன்றியமையாத ஊட்டச் சத்துக்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது அளவுக்கு அதிகமாகும்போது உடலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கிறது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்களின் வாழ்நாள், சராசரி உடல் பருமன் உள்ளவர்களின் வாழ்நாளை விட குறைவாக உள்ளது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதிகமாக சாப்பிடுபவர்களுக்குத்தான் உடல் பருமன் ஏற்படுகிறது. சாப்பாட்டை கண்டு விட்டால் நம்மில் சிலர் ஒரு கட்டு கட்டாமல் விடமாட்டார்கள். சாப்பிடும் அளவுக்கு உடல் உழைப்பும் இருப்பதில்லை. அதிகம் சாப்பிடுபவர்கள் மட்டுமல்ல.. எப்போது பார்த்தாலும், ‘நொறுக், மொறுக்’ என்று நொறுக்கு தீனி உண்பவர்களுக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது. ‘ஸ்நாக்ஸ்’ தானே கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் என்ன என்று கேட்கிறீர்களா..? கொஞ்சம் அதிகமாக கொழுப்பு சேரும் அவ்வளவுதான். இவ்வகை உணவுகளில் அதிக அளவில் கொழுப்பும், உப்பும் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.

உருளைக் கிழங்கு சிப்ஸ் ஆகட்டும், முந்திரி பருப்பு வறுவலாகட்டும், சாக்லெட் மற்றும் ஐஸ் கிரீம் ஆகட்டும். இவைகளில் இருக்கும் கொழுப்பின் அளவை கணக்கிட்டால் நம் கலோரி தேவைக்கு அதிகமாகவே உண்பது தெரியவரும். ஒவ்வொரு கிராம் கொழுப்பும், ஒவ்வொரு கிராம் மாவுப் பொருள் அல்லது புரதத்தை விட இரண்டே கால் மடங்கு அதிக கலோரி சக்தி கொண்டது. ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி அளிக்கிறது. ஆனால், ஒரு கிராம் புரதம் அல்லது மாவுப் பொருள் தருவதோ 4 கிராம் கலோரிதான்.

கொழுப்பானது கிளிசரின் மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றால் ஆன ஒரு கூட்டுப் பொருளாகும். தாவரக் கொழுப்பானாலும் விலங்கு கொழுப்பானாலும் கிளிசரின் என்பது மாறாமல்  இருக்க கூடிய ஒன்று. மாறுதல்கள் ஏற்படுவதெல்லாம் கொழுப்பு அமிலங்களின் தகவில் தான். மாட்டுக் கொழுப்பில் உள்ள கொழுப்பு அமிலத் தகவு, நல்லெண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலத் தகவில் இருந்து மாறுபட்டது. இவை இரண்டுமே வெண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலத் தகவில் இருந்து மாறுபட்டவை.

அடிப்படையில் கொழுப்பு அமிலக் கூறுகள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற மூன்று வகை அணுக்களால் ஆனவை. ஒரு கார்பன் அணு நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் (அதிகபட்ச அளவு) இணைந்திருக்கின்றபோது அதற்கு மேல் தண்ணீரை அதனால் ஈர்த்துக் கொள்ள முடியாது. அதாவது அதற்கு மேல் எந்த ஹைட்ரஜன் அணுவையும் இணைத்துக் கொள்ள முடியாது. இதையே நிறை செறிவுற்றது என அழைக்கின்றனர்.

பெரும்பாலும் நிறைசெறிவுற்ற கொழுப்புகள் திட வடிவிலேயே உள்ளன. அநேகமாக இவை விலங்குகளிடம் இருந்தே பெறப்படுகின்றன. தாவர எண்ணெய்களில் இருக்கின்ற நிறை செறிவுறாத கொழுப்பு செயற்கை முறையில் ஹைட்ரஜனேற்றம் செய்யப்படும் போது நிறைசெறிவுற்ற கொழுப்பாக மாறி திட வடிவை அடைகிறது. இந்த நிறைசெறிவுற்ற கொழுப்புகள் ரத்த நாளங்களில் எளிதாக படிந்து விடுகின்றன. இதனால் உயர் ரத்த அழுத்தமும் இதய தாக்கும் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகரிக்கிறது.

பசும்பாலிலும் இவ்வகை நிறைசெறிவுற்ற கொழுப்பு 7 சதவீதம் இருக்கிறது. பசும்பால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. விரைந்து வளரும் மழலைப் பருவத்தில் இருக்கும் இவர்களுக்கு தினமும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கலோரிகள் வரை தேவைப்படலாம். ஆனால், அதே நேரத்தில் உடல் உழைப்பு அதிகமில்லாத 40 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஒரு குவளை பால் அருந்துவது தேவையற்றது. குழந்தையின் எரிசக்தி தேவையும் பெரியவர்களின் எரிசக்தி தேவையும் மாறுபடுவதே இதற்கு காரணம்.

முட்டையும் நிறைசெறிவுற்ற கொழுப்பு மிகுதியும் கொண்ட ஒரு உணவு. குறிப்பாக சொல்லப் போனால் முட்டையை ஒரு சக்தி குவியல் என்று கூடச் சொல்லலாம். அத்தனையும் கொலஸ்ட்ரால். வளரும் குழந்தைகளுக்கு இது அவசியம் தேவை. நிறைசெறிவுறாக் கொழுப்பை, ஒற்றை நிறை செறிவுறாக் கொழுப்பு எனவும் பல்நிறை செறிவுறாக் கொழுப்பு  எனவும் இரு வகையாகப் பிரிக்கலாம். இவற்றில் எது நல்லது என்னும் சர்ச்சை உள்ளது.

ஒற்றை நிறைசெறிவுறாக் கொழுப்பு இதயத் தாக்கை தவிர்க்கும் என்று கூறப்படுகின்ற அதே நேரத்தில் இது பித்தப் பைக் கற்களை உண்டு பண்ணக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இருவகை கொழுப்பும் கலந்த உணவுகளை உண்பதே சிறந்தது. இருந்த போதிலும் பல்நிறை செறிவுறாக் கொழுப்பைக் காட்டிலும் ஒற்றை நிறைசெறிவுறாக் கொழுப்பு ஒருபடி உயர்ந்தது என்பதை மறுக்க முடியாது.

மீன் எண்ணெயில் மற்றொரு வகை கொழுப்பு உள்ளது. இது மற்ற எல்லாவிதக் கொழுப்புகளையும் விடச் சிறந்தது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல நாட்களுக்கு மீன் உண்ணுகின்ற பழக்கமுடைய சமூக மக்களிடையே ரத்த நாள நோய்களும் இதயத் தாக்கும் மிகக் குறைவாகவே ஏற்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சைவ உணவு சாப்பிடுபவர்கள் சில முக்கியமான ஊட்டச் சத்துக்களைப் பெற முடியாது என்ற வாதம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. நிறைசெறிவுற்ற கொழுப்பைக் காட்டிலும் நிறைசெறிவுறாக் கொழுப்புகள் அதிக அளவு கலோரி சக்தி கொண்டுள்ளன. சைவ உணவிலும் (காய்கறி) பிற ஊட்டச் சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. ஏறக்குறைய அசைவ (புலால்) உணவில் காணப்படுகின்ற எல்லா வகைப் புரதங்களையும் சைவ உணவில் இருந்து அதாவது காய்கறிகளில் இருந்து பெற முடியும்.

புரதங்கள் என்பவை அமினோ அமிலங்கள் எனும் வேதிப் பொருட்களால் ஆனவை. புரதப் பொருட்கள் அனைத்திலும் உள்ள 22 அமினோ அமிலங்களில் எட்டு அல்லது ஒன்பது அமினோ அமிலங்களே முக்கியமானவை என்றும் மனித உடலினால் தன்னிச்சையாக உற்பத்தி செய்ய முடியாதவை என்றும் கருதப்படுகிறது. ஆனால், பலவகை காய்கறிகளும், தானியங்களும் பயறுகளும் சேர்ந்த சமச்சீர் உணவை உண்ணுகின்றபோது அனைத்துப் புரதங்களும் கிடைக்கின்றன.

நாம் உண்ணுகிற உணவில் உள்ள கொழுப்புத்தான் நமது உடலில் கொழுப்பு கோளங்களை உண்டு பண்ணுகின்றன என்பதை உடல் பருமன் கொண்டவர்கள் உணர வேண்டும். உடல் பருமன் உள்ளவர்களை ரத்த நாள நோய்கள், இதய நோய்கள், நீரிழிவு, பித்தப்பை கற்கள் போன்ற நோய்கள் எளிதாக தாக்குகின்றன. மேலும், அதிக உடல் எடையை தாங்குகிற இடுப்பு மற்றும் கால் மூட்டுக்கள் விரைவில் தேய்ந்து வலுவிழந்து போகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக தங்களது பருத்த உடல் தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மை இவர்களை வாட்டி வதைக்கும். மேலும், வாழ்க்கையில் உற்சாகமின்மையை ஏற்படுத்தி விடும்.

உடல் கொழுப்பை குறைக்க ஒரே வழி உணவில் இருந்து இயன்ற வரை கொழுப்பை குறைக்க வேண்டும். தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஜிம்முக்கு செல்ல வேண்டும். அதிக செலவிலான உடற்பயிற்சி கருவிகளை வாங்க வேண்டும் என்பதில்லை. வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுதல், பூப்பந்து, இறகுப் பந்து ஆடுதல் உள்ளிட்ட எளிய பயிற்சிகளை செய்தால் போதும். இவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும்.

அசைவ சாப்பாட்டை அறவே புறக்கணித்து சைவ உணவுக்கு மாறி விட வேண்டும். காய்கறிகள் எல்லாமே சத்துள்ளவைதான். அவற்றையும் அளவோடு சாப்பிட வேண்டும். உடலில் நல்ல கொழுப்பு மட்டுமே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். வாயைக் கட்டினால் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளலாம். உடல் பருமனையும் தவிர்க்கலாம்.


Spread the love
error: Content is protected !!