சருமப் பாதுகாப்பு முறைகள்:

Spread the love

சருமப் பாதுகாப்பு முறைகள்:

சருமத்தில் ஈரப்பசை மாறாதிருக்க மாய்ஸ்சரைசிங் லோஷன்களையும், க்ரீம்களையும் மட்டும் தடவி வந்தால் போதும் என ஒரு சிலர் நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். சரியான உணவுப் பழக்க வழக்கங்களிலும், வாழ்க்கை முறைகளையும் கவனமுடன் நாம் கையாண்டு உடலைப் பாதுகாக்காமல், வெளிப்புற பூச்சு ஒன்றின் மூலம் உங்கள் சருமத்தைக் காப்பாற்ற முடியாது.

உணவில் கொழுப்பைக் குறைத்து புரதச் சத்தினை அதிகப்படுத்த வேண்டும். பால், மோர், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளைப் பயன்படுத்துவதுடன் வைட்டமின் மாத்திரைகளையும் உட்கொள்வது நல்லது. ஏதாவது ஒரு மாய்ஸ்சரைசிங் கீரிமை நீங்கள் வீட்டில் தயாரித்துக் கொண்டு தொடர்ந்து உபயோகித்து வரலாம். இதன் மூலம் தோலின் மிருதுத் தன்மை மற்றும் பளபளப்பினை தொடரச் செய்யலாம். கிரிம் எதையும் தடவுவதற்கு முன்பு, பழைய ( மேக்அப் ) ஒப்பனையை முற்றிலுமாக அகற்றப்படுவது அவசியம். பொதுவாக சாதாரணமாக பவுண்டேஷன் கிரிமை நீக்க சோப் மட்டும் போதாது. எனவே க்ளென்சிங் கிரிம் ஒன்று அவசியம் தேவை. க்ளென்சிங் கிரிமை சருமத்தின் மீது மேலோட்டமாகத் தடவினால் மட்டும் போதாது. நன்றாக அழுத்தித் தேய்த்தால் தான் அதிலுள்ள எண்ணெய்ச் சத்துகள் சருமத் துவாரத்தினுள் சென்று சுரப்பிகளை அடையும். நடு விரலால் க்ளென்சிங் கிரிமை தொட்டு எடுத்துக் கொண்டு கண்களின் கீழும், கண்களைச் சுற்றியும் தடவி விட்டு அரைமணி நேரம் வரை காத்திருந்து பின்னர் டிஷ்யூ பேப்பர் ஒன்றினால் அழுத்தித் துடைத்து விட வேண்டும்.

வீட்டிலேயே க்ளென்சிங் கிரிம் செய்து கொள்ளலாம்:

மிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய சமையலறைப் பொருட்களை வைத்து நமக்கு நாமே சுத்தமான க்ளென்சிங் க்ரிமை தயாரித்துக் கொள்ள இயலும் பொழுது வெளியில் சென்று அழகுச் சாதன பொருட்களை பெற பணத்தினையும் நேரத்தினையும் தேவையின்றி செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – ஒரு தேக்கரண்டி.

பாலாடை – இரண்டு மேஜை கரண்டி.

எலுமிச்சைச் சாறு – அரைத்தேக்கரண்டி

மஞ்சள் பொடி – அரைத்தேக்கரண்டி

செய்முறை:

கடலை மாவையும், பாலாடையையும் சேர்த்து நன்கு குழைத்துப் பிசைந்து பசை போன்று  செய்து கொள்ளவும். அதில் எலுமிச்சைச் சாறையும் மஞ்சளையும் சேர்த்து  ஒன்று சேரக் கலந்து கொள்ளவும். மேற்கூறிய கலவையினை விரல் நுனியினால் எடுத்துக் கொண்டு முகத்திலும், கழுத்திலும் தடவிச் சுமார் 10 நிமிடம் காய விடவும். பிறகு கையினால் முகத்தை நன்றாக தேய்த்து விட, காய்ந்த பேஸ்ட் முழுவதும் உதிர்ந்து விடும். ஒன்றிரண்டு இடங்களில் ஒட்டிக் கொண்டிருந்தால் வெந்நீரால் கழுவி அகற்றி விடவும். பின்னர் குளிர்ந்த நீரை இரு கைகளாலும் அள்ளி எடுத்து முகத்தில் அடித்து முகத்தை நன்கு கழுவவும். இந்த க்ரிமானது உங்கள் முகத்திற்கு பொலிவையும், பளபளப்பையும் இளமைத் தோற்றத்தையும் தரும்;.

பவுண்டேஷன் க்ரீமைத் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவை:

மாய்ஸ்சர் நிறைந்த பவுண்டேசன் க்ரிமைத் தேர்ந்தெடுங்கள். வறண்ட சருமத்தை இது நைப்புள்ளதாக்குவதுடன் காற்று, சூரிய ஒளி, தூசி, குளிர் ஆகியவற்றிடலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக உதடுகளுக்கு மாய்ஸ்சரைசிங் போமோடு ஸ்டிக் (Moisturising Pomade Stick) தடவிய பிறகு அதன் மேல் லிப்ஸ்டிக் இடுங்கள். நீங்கள் விரும்புகின்ற பட்சத்தில் லிப்ஸ்டிக்கின் மேல் லிப் கிளாஸ் (Lip Gloss) இட்டுக் கொள்ளலாம். இது உங்களது உதட்டின் அழகை மேலும் உயர்த்திக் காட்டும்.

நடுத்தர வயதுப் பெண்கள்:

30 வயது முதல் 40 வயதிற்குள் அடங்கியுள்ள பெண்கள் பெரும்பாலும் ஒன்று அலுவலகங்களில் பணி செய்பவர்களாக அல்லது இல்லத்துத் தலைவியாகவோ இருப்பார்கள். எப்பொழுதும் வேலையாக, வேலைப்பளு உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்ள நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கும். இருப்பினும் தங்களது அழகிய தோற்றத்தினைப் பராமரித்து பாதுகாக்க வேண்டிய தேவையும், பொறுப்பும் இவர்களுக்கு உள்ளது. இதற்காக வாரத்திற்கு ஒரு நாளினை தங்கள் ஒப்பனைக்கென்று ( அது சனிக் கிழமையாகவோ அல்லது ஞாயிற்றுக் கிழமையாகவோ இருக்கலாம் ) ஒதுக்கிக் கொள்ள வேண்டும். இந்த ஒரு நாள் ஒப்பனைத் திட்டத்தின் மூலம் அன்றைக்கு ஒருநாள் மட்டும் அழகான தோற்றம் பெறலாம் எனினும் அவர்களது அழகையும், இளமையினையும் தொடரச் செய்வதற்கு வேண்டிய வழிமுறைகளையும் செய்து கொள்ள வேண்டிய நாளாகவும் இருக்க வேண்டும்.

இவர்களுக்கு மிகவும் தேவையானது ஓய்வும், நல்ல தூக்கமும், தூய காற்றும், வியர்த்துக் களைத்துப் போகும் இவர்களது சருமம் மிக எளிதில் அழுக்கடைந்தும், நெகிழ்வு குன்றியும், நிறம் மங்கியும் போகக் கூடும். சருமம் மற்றும் முடி விஷயங்களில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

சருமப் பாதுகாப்பு முறைகள்:

தினசரி குளிக்கும் பொழுது நல்ல சோப் ஒன்றைப் பயன்படுத்துவது நல்லது. பாலாடை 2 மேஜைக் கரண்டி எடுத்துக் கொண்டு எலுமிச்சைச் சாறு ஒரிரு தேக்கரண்டி அளவும், சிறிது மஞ்சள் பொடியும் சேர்த்து நன்றாக கலந்து கலவையாக்கிக் கொள்ளவும். மேற்கூறிய கலவையினை குளிப்பதற்கு முன்பு கை,கால், முகம் ஆகியவற்றில் தடவிப் பின்னர்  குளிக்கலாம். அல்லது 2 மேஜைக்கரண்டி தயிருடன் அரைத் தேக்கரண்டி பாதாம் எண்ணெயைக் கலந்து கொண்டு சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்துப் பஞ்சினால் நன்றாக அழுத்தித் துடைத்துப் பின்னர் குளித்துக் கொள்ளலாம்.

நாற்பது வயதுக்கும் மேற்பட்டவர்கள்:

நாற்பது வயது மற்றும் அதற்கு மேல் அழகாக தோற்றமளிப்பவர்கள் கொஞ்சம் பேர்தான். இவர்களில் 90, 95 சதவீதத்திற்கும் மேல் தங்களது உடல், முகத் தோற்றத்தினைப் பற்றி கவலைப்படுவது இல்லை என்று கூறலாம். இவர்கள் சிறிதளவு முயற்சி எடுத்தால் கூட தங்கள் அழகையும், இளமைத் தோற்றத்தையும் மேலும் பல வருடங்களுக்கு நீடித்து வைத்துக் கொள்ள முடியும். பொதுவாக வயது அதிகரிக்க, அதிகரிக்க உடல் தசைகள் இளகி விரியத் தொடங்குகின்றன. பெரும்பாலான பெண்கள் தங்கள் உடல் வடிவை இழக்கத் தொடங்குவது இந்த நேரத்தில் தான். உணவு விஷயத்தில் சிறிதளவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மேலும் இயன்ற வரை உடற்பயிற்சியும் இவர்கள் செய்து வந்தால் தங்கள் உடற்கட்டை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு நரை முடியும் பெரிய பிரச்சனை என்பதில் சந்தேகமில்லை. நரை முடியை நீக்குகிறேன் என்று பறித்தெடுக்கக் கூடாது. ஏனெனில் ஒவ்வொரு முறை நரை முடியைப் பறிக்கும் போதும்,அம்முடியின் மயிர்க்காலில் ஒரு வித திரவம் சுரக்கிறது. நரை முடியைச் சுற்றியுள்ள கருத்த முடிகளில் இது படுகின்றபோது, அவைகளும் விரைவில் வெளுத்து விடுகின்றன. நரை முடிகள் குறைவாக இருக்குமானால் நல்ல கத்திரிக்கோல் ஒன்றினால் முடியை ஒட்ட வெட்டி நீக்கி விடுங்கள். இதுவும் பயனில்லை என்றால் முடிக்கு டை ( சாயம் ) அடித்துக் கொள்வது ஒன்றுதான் ஏற்ற வழியாகும்.

முடியை நன்கு தூய்மையாகவும், நல்ல முறையில் வாரி வைத்துக் கொள்ள வேண்டும். சருமத்தில் ஏற்படுகின்ற வறட்சியைப் போக்க, இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, மாய்ஸ்சரைசிங் கிரீம் தடவுவதுடன், காலையில் குளிக்க போகும் முன்பு கோல்டு கிரீம் ஒன்றை முகம், கழுத்து, கை ஆகிய இடங்களில் நன்றாக அழுத்தி தடவுங்கள். சருமச் சுருக்கங்கள், கழுத்து, கன்னத்துப் பகுதிகள், கடைவாய், கண்களின் கடைசிப்பகுதி போன்ற இடங்களில் தான் எளிதாகத் தோன்றும். இதைத் தவிர்க்க வாரம் இரண்டு முறை பேஷியல் செய்ய வேண்டியது அவசியம். உங்கள் வயதிற்கு ஏற்ப உடையும், மேக்அப்பும் செய்வது உங்கள் கௌரவத்தை சமூகத்தில் அதிகரித்துக் காண்பிக்கும். மிக மெலிதான மேக்அப்பும், எளிய ஆபரணங்களும் சிறந்த பொலிவைத் தரும். சிரித்த முகத்துடன் இருங்கள்.


Spread the love