வயதானவர்களை வாட்டும் மறதி நோய்

Spread the love

மறைந்த பாலுமகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை படத்தை நிறைய பேர் பார்த்திருப்பீர்கள். கமலஹாசனுக்கு சிறந்த நடிகர் விருது வாங்கி கொடுத்த படம். விருது பெறவில்லை என்றாலும் மிகச் சிறப்பாக நடித்த நடிகை ஸ்ரீதேவியை யாரும் மறந்திருக்க முடியாது. குட்டி நாயை, மழலைக் குரலில் ‘சுப்பிரமணி.. சுப்பிரமணி..’ என்று அவர் கொஞ்சுவது இன்னும் படத்தை பார்த்தவர் மனதில் வியாபித்துக் கொண்டே இருக்கும். சரி அதற்கு என்ன இப்போது என்கிறீர்களா..? அதில் ஸ்ரீதேவிக்கு வரும் நோய்தான் அம்னிஷியா. விபத்தில் அடிபட்டதால் பழைய விஷயங்கள் மறந்து போயிருக்கும். அந்த நோயைப் பற்றிச் சொல்லத்தான் இத்தனை சுற்றி வளைப்பு. நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கும் இந்த ஞாபக மறதி நோய் உண்டு. அதற்கு பெயர் ‘செலக்டிவ் அம்னிஷியா.’ தேர்தல் நேரத்தில் அளிக்கும் வாக்குறுதிகளை அவர்கள் மறந்து போய் விடுவதால், அரசியல்வாதிகளுக்கு செலக்டிவ் அம்னிஷியா இருப்பதாக நகைச்சுவையாக கூறுவார்கள். 

அம்னிஷியாவின் ஒரு வடிவம்தான் டிமென்ஷியா. (ஞாபக மறதி நோய்.) இதை   மூளையின் செயல்திறன் குறையும் நிலை எனலாம். பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும். நினைவாற்றல் பாதிக்கப்படுவதுடன் எண்ணம், சிந்தனை, மொழி, தீர்மானம் செய்யும் ஆற்றல் ஆகியவையும் இதில் பாதிக்கப்படலாம்.

வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே அபூர்வமாகவே இந்தப் பாதிப்பு ஏற்படும். இதில் ‘அல்சைமர்’ என்பது ஒரு வகை ஆழ்ந்த மறதி நோய். சிறுமூளைப் பாதிப்பு, மூளைக் காயம், மூளை அழற்சி, மூளைக் கட்டிகள், அதிக மது அருந்துதல், ரத்தத்தில் சர்க்கரை, உப்பு, கால்சியம் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள், மிகக் குறைந்த வைட்டமின் பி12 அளவு, மூளையில் நீர்த்தேக்கம் ஏற்படுதல், ஒரு சில மருந்துகள் குறிப்பாகக் கொழுப்பைக் குறைக்கிற மருந்துகள் ஆகியவற்றாலும் மறதி ஏற்படலாம்.

இப்படிப்பட்ட மறதி உள்ளவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள். இவர்களுடைய மொழித் திறன் பாதிக்கப்படும், சிந்திக்கும் ஆற்றலில் தவறு ஏற்படும். இரண்டு வேலைகளைச் சேர்த்துச் செய்ய முடியாது. முடிவு எடுக்க முடியாது, பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, சற்று முன் நடந்தது, பேசியது மறந்துவிடும்.

பொருட்களை எங்கே வைத்தோம் என்று தெரியாது. பேனாவை எங்கே வைத்தோம் என்று தேடிக் கொண்டிருப்பார்கள். இதுவாவது பரவாயில்லை.. சிலர் மூக்கு கண்ணாடியை எங்கே வைத்தோம் என்று தடவிக் கொண்டிருப்பார்கள். செல்போனை தேடுவதில்தான் இவர்களுக்கு சிரமம் இருக்காது. வேறொரு போனில் இருந்து ‘மிஸ்டு கால்’ கொடுத்து, எங்கிருந்து சத்தம் வருகிறது என்று கண்டுபிடித்து, செல்போனை எடுத்துக் கொள்ளலாம். எழுதுவது, படிப்பது, ஆபத்தை உணர்வது ஆகியவற்றில் தவறு ஏற்படும். சமூக விஷயங்களில் இருந்து நமக்கே ஏன் வம்பு என்று பின்வாங்குவார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், மூளை பரிசோதனை, ரத்தக் குறைவு உள்ளதா, தைராய்டு அளவு, வைட்டமின் சத்து எவ்வாறு உள்ளது போன்றவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.

அல்சைமர் நோய் தோன்றிய உடனே அதன் அறிகுறிகள் தென்படாது. அது கிளைமாக்சை நெருங்க பல ஆண்டுகள் ஆகும். மூளையில் உள்ள நியூரான்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்போதுதான் ஞாபக மறதி பிரச்னை அதிகரிக்கும். நோய் தீவிரமடையும்போது, சிறுவயது நினைவுகளையும் இழக்க வாய்ப்பு உண்டு

இந்த நோய் தோன்றிய சில ஆண்டுகளில் மனச்சோர்வும் சேர்ந்து கொள்ளும். எதிர்மறை எண்ணங்கள் தலை தூக்கும். தனிமையை விரும்புவார்கள். பசி உணர்வு குறையும். தூக்கமின்மை ஏற்படும். உடல் பலவீனம் உண்டாகும். நம்பிக்கையின்மை ஏற்படும். என்னடா வாழ்க்கை இது.. வாழ்வதே அர்த்தமற்றது என்பன போன்ற எண்ணங்கள் தலைதூக்கும்.

பொதுவாக வயதானவர்களுக்கே இந்த நோய் வருகிறது. நோயாளியின் குணநலன், பழக்கவழக்கங்கள், உடல்நிலை, சுற்றுச்சூழல், சமுதாயம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைப் பொருத்து இந்த நோயின் பாதிப்பு வேறுபடும். வயசாச்சுன்னா.. அப்படித்தான் என்று நம்மில் பலர் இந்நோயை உதாசீனப்படுத்தி விடுகிறோம். ஆனால், அது சரியல்ல.

மொழித் திறனில் தடுமாற்றம், ஞாபகக் குறைவு, நேரம், காலத்தைப் பாகுபடுத்த இயலாமை, வழக்கமாக செக்கு மாடு போல் செல்லும் பாதையையே மறப்பது, எந்த ஒரு சிறிய விஷயம் என்றாலும் முடிவு எடுப்பதில் சிரமம், இந்த வேலையை செய்யணுமா..? என்று ஒரு செயலைச் செய்ய ஆர்வம் இல்லாமை, சோகம் ஆனாலும், கோபம் ஆனாலும் அதிகமாக வெளிப்படுத்துதல், பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல் ஆகியவற்றை ஞாபக மறதி நோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் எனலாம்.

நோய் தீவிரமடையும்போது பிரச்சினைகளும் அதிகமாகும். மறதி அதிகமாகும்.  சமீபத்திய நிகழ்ச்சிகள், உறவினர்களின் பெயர்கள் கூட மறந்து போகும். எப்போதும் ஒருவர் கூடவே இருக்க வேண்டும். துணையில்லாமல் தனித்து வாழக் கஷ்டப்படுவார்கள். தன்னையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும். மார்க்கெட்டுக்கு சென்றால் வீடு திரும்ப வழி தெரியாது. வீடு இருக்கும் தெருவையே சுற்றிச் சுற்றிச் வருவர். தான் எங்கிருக்கிறோம் என்பதே தெரியாமல் இருப்பார்கள். தன்னுடைய அன்றாட நடவடிக்கைகள் அனைத்திற்கும் குடும்பத்தினரை முழுவதுமாக சார்ந்திருப்பார்கள்.

இவை ஞாபக மறதி நோயின் இடைநிலை அறிகுறிகள்.

இந்த நோயின் இறுதி நிலை அறிகுறிகள் மிகவும் மோசமாக இருக்கும். குடும்பத்தினர் உதவி இல்லாமல் நோயாளி எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது. உடல் பாகங்களை இயக்க முடியாது. மறதி மிக அதிகமாகவும், உடல்நலக் குறைவும் காணப்படும். தானாக உணவு உட்கொள்ள முடியாது. யாராவது உதவி செய்ய வேண்டும். உறவினர், நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படும். மிக நெருங்கிய உறவினர்கள் ஏன்.. தன் குழந்தைகளையேகூட மறக்க நேரிடலாம். எப்போதும் குழப்பமான மனநிலை இருக்கும். பலமுறை பயன்படுத்திய.. தெரிந்த பொருள்களை கூட அடையாளம் சொல்ல முடியாது. எதை சொன்னாலும், அதை  புரிந்துகொண்டு செயல்பட முடியாது. சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இருக்காது. இதன் உச்சகட்டமாக  தான் யார் என்பதே மறந்துவிடும்.

மனிதனின் நினைவாற்றலை ஆயுர்வேதம் ஸ்ம்ருதி என்கிறது. நினைவாற்றலை பெருக்கும் மருந்துகளாக ஆயுர்வேதத்தில் நெய், வல்லாரை, அதிமதுரம், மண்டூக பரணி, சங்குபூ, கொட்டம், திப்பிலி, வெண்தாமரை, வசம்பு, கல்யாணப் பூசணிச் சாறு, பால், தயிர் ஆகியவை சொல்லப்பட்டிருக்கிறது. தியானம், தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தலும் நினைவாற்றலை பெருக்கும்.

நினைவாற்றலை பெருக்க உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயைப் பச்சையாகச் சாப்பிடலாம். ஒரு கப் எலுமிச்சை சாற்றில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்துச் சாப்பிட வேண்டும்.  வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி, மிளகு சேர்த்துச் சட்னி போல சாப்பிடலாம். தினமும் 5 துளசி இலைகளைச் சாப்பிடலாம். இவை யாவும் நினைவாற்றலை பெருக்கும்.

உணவில் சிறிது நெய் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. அஸ்வகந்தா சூரணத்தை 10 கிராம் எடுத்து இரவில் பாலில் கலந்து சாப்பிடலாம். புதினா கீரையைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 நெல்லிக்காய் சாப்பிடலாம். இவையாவும் நினைவாற்றலுக்கு மிகவும் நல்லது.

பெரியவர்களும் குழந்தைகளும் ஒன்று. முதிய வயதில் நம் வீட்டுப் பெரியவர்களை குழந்தைகளைப் போல் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் குழந்தைகளாக.. சிறியவர்களாக இருக்கும்போது செய்யும் தவறுகளை பெரியவர்கள் பொறுத்துக் கொள்வார்கள். சரியாகச் செய்யாவிட்டால் திரும்பத் திரும்ப சொல்லித் தர தயங்க மாட்டார்கள். நம்மிடம் எப்போதுமே சலித்துக் கொள்ள மாட்டார்கள். நாம் வாலிபர்களாக ஆகும்போது, நம் வீட்டுப் பெரியவர்கள், வயதான குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள். சிறுவயதில் நம்மிடம் அவர்கள் காட்டிய பொறுமை நமக்கு இருப்பதில்லை. ‘வயசான காலத்தில் ஏன் உயிரை வாங்குற..’ என்று எரிச்சல் படுகிறோம். ‘வயசாயிடுச்சில்ல.. ஒரு ஓரமா கிடக்க வேண்டியதுதானே..’ என்று சலித்துக் கொள்கிறோம்.

எட்டி உதைத்தாலும் கட்டி அணைத்த அம்மாவை மறந்து விடுகிறோம்.. காயம்படும் என்று நினைத்து சேலையின் தலைப்பால் காற்றினை தடுத்த தாயின் பேரன்பை மறந்து போகிறோம்.. ஏறி மிதித்தாலும் தாங்கிக் கொள்கிற அப்பாவை மறந்து விடுகிறோம்.. தப்புத் தப்பாக பேசினாலும், ‘என் புள்ள சூப்பரா பேசறான் பார்..’ என்று உச்சி முகர்ந்த அப்பாவை மறந்து போகிறோம்.. நாட்டில் பெருகி வரும் முதியோர் இல்லங்களே நம் மனநிலைக்கு சாட்சிகள். முதியார்களுக்கு மூன்று வேளை உணவோ, பணம், காசோ.. நகை, நட்டோ.. சொத்து பத்தோ முக்கியமல்ல.. அவர்களுக்கு தேவை அன்பான அரவணைப்பும், ஆறுதலான வார்த்தைகளும்தான். இது ஞாபக மறதி நோயில் இருந்து மட்டுமல்ல.. எல்லா நோய்களில் இருந்தும் அவர்களை காப்பாற்றும்.. திடப்படுத்தும். ஆயுளை கூட்டும். இவை எல்லாவற்றையும் விட நமக்கும் நாளைக்கு வயதாகும் என்பதை ‘ஞாபகத்தில்’ வைத்துக் கொள்ள வேண்டும். முன் ஏர் போன வழியில்தான் பின் ஏர் போகும் என்பதை எப்போதும் ‘மறக்கக் கூடாது.’


Spread the love