மூலிகை ஃபேஸ் பேக்ஸ்

Spread the love

முக பேக்குகள் (Face packs):

முகச் சுருக்கங்கள், கோடுகள், கண் கருவளையங்கள் போன்றவை வராமல் தடுக்க, மேனியின் எண்ணெய்ப் பசை,ஈரப்பசை சீராக அமைத்துக் கொள்ளவும் முக பேக்குகள் ( குறிப்பாக மூலிகைகளினால் தயார் செய்யப்பட்டது )உதவுகின்றன. மூலிகை முகப் போக்குகள் எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றவை என்பதுடன் பாக்டிரியாவை எதிர்த்து ஆரோக்கியம் பேணுகிறது. மாஸ்க்குகளை விட மிருதுவானவை.

முக பேக் தயாரிக்கப் பயன்படும் பழங்கள், காய்கறிகள்:

பழங்கள் மற்றும் காய்கறியினால் செய்யப்படும் பேக்குகள் சருமத்திற்கு சத்துகளை அளிக்கின்றன. நாம் உபயோகிக்கும் பழம், காய்கறிகளின் சாறினைப் பிழிந்து எடுத்து அதனுடன் கடற்பாசி (Agar Agar) மற்றும் முல்தானி மட்டி அல்லது ஓட்ஸ் மாவு சேர்த்து விழுதாக அல்லது களிம்பாக செய்து கொள்ள வேண்டும்.

எந்த சருமத்திற்கு எந்த பழங்கள், காய்கறிகள் முக பேக்கில் பயன்படுத்தப்படுகின்றன?:

நார்மலான சருமத்திற்கு &- திராட்சை, வாழைப்பழம்

உலர்ந்த சருமத்திற்கு -& ஆப்பிள், வாழைப்பழம், கேரட், முலாம் அல்லது தர்பூசணி.

எண்ணெய்ப் பசை சருமத்திற்கு -& வெள்ளரி, முட்டைக் கோஸ், தக்காளி, எலுமிச்சை

முதிர்ந்த சருமத்திற்கு -& ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை

குறையுள்ள சருமத்திற்கு -& ஆப்பிள், திராட்சை, தக்காளி, முட்டைகோஸ்

மேலும் சில முக பேக்குகள்:

சாதாரண சருமத்திற்கு:

பால், பாலாடை கலந்த பேக்கை முகத்திற்குத் தடவலாம். எலுமிச்சைச் சாறும், வெள்ளரிச் சாறும் கலந்து தடவி அரை மணி நேரம் கழித்து கழுவிக் கொள்ள வேண்டும்.

உலர்ந்த சருமத்திற்கு:

சூடான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் இரண்டு வைட்டமின் இ மாத்திரைகள், ஒரு வைட்டமின் ஏ மாத்திரை, ஒரு வைட்டமின் டி மாத்திரை சேர்த்து கரைத்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து டவல் ஒன்றின் மூலம் வெந்நீர் ஒத்தடம் கொடுத்து பஞ்சினால் துடைத்து எடுக்கவும். இந்த பேக் உலர்ந்த சரும வகைக்கு மிகவும் நல்லது.

எண்ணெய்ப் பசை மிகுந்த சருமத்திற்கு:

1. முல்தானி மட்டி, ஆரஞ்சு பழச் சாறு, பன்னீர், தேன் ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்பூன் எடுத்து களிம்பாக்கிக் கொண்டு முகத்தில் பூசவும். நன்கு காய்ந்த பின் கழுவிக் கொள்ளவும்.

2. தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு பேக்கையும் பூசலாம்.

3. நன்கு நசித்த பப்பாளி பழத்தை முகத்தில் இட்டு 15 நிமிடம் கழித்து கழுவலாம்.

மூலிகை முகப் பேக்குகள்:

1. மஞ்சள் பொடி, சந்தனம், பால் இவற்றைக் கலந்து முகத்தில் தடவிக் கொள்ளலாம்.

2. மஞ்சள் பொடி, சந்தனப் பொடி, கடலை மாவு இவற்றைக் கலந்து தடவிக் கொள்ளலாம். அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்.

முகம் பளபளக்க இன்னும் என்ன செய்யலாம்?

1. வெந்தயத்தைப் பாலில் அரைத்து களிம்பாக்கி முகத்தில் தடவிக் கொள்ளவும். உலர்ந்த பின்பு வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்.

2. இளநீர் அல்லது தேங்காய்ப்பால் உடன் சிகப்பு சந்தனப் பொடியினை சேர்த்து கலந்து களிம்பாக்கி முகத்தில் தடவிக் கொள்ளலாம்.

3. தக்காளிச் சாறு அரை கோப்பை அளவுடன் எலுமிச்சைச் சாறு 30 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்து முகத்திலும், கழுத்திலும் தடவிக் கொள்ளவும்.

தண்ணீரை அடிப்படையாக பொருளாக உபயோகித்து தயாரிக்கப்படும் முக பேக்குகள்:

இந்த வகை பேக்குகள் முக சருமத்தை வலுவாக்கும். முகச் சுருக்கங்களைப் போக்கும்.

1. ஆரஞ்சு முக பேக் :

தேன் ஒரு மேஜைக் கரண்டி, ஆரஞ்சுச்சாறு ஒரு தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டியினை 2 தேக்கரண்டி பன்னீரில் அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்த பின்பு இதனுடன் தேன், ஆரஞ்சுச் சாறு கலவையினையும் சேர்த்து களிம்பாக்கிக் கொள்ளவும். முகத்தில் தடவி உலர்ந்த பின்பு வெதுவெதுப்பான நீரில் கலந்து பின்பு குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளவும்.

2. தேன் பேக் : முதலாவது பேக்கில் கூறியுள்ள செயல்முறை தான். ஆரஞ்சு பழச் சாறு சேர்த்துக் கொள்வதற்குப் பதிலாக எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. ஆலிவ் எண்ணெய் பேக் :

தேவையான பொருட்கள்:

பாதாம் எண்ணெய் -& ஒரு மேஜைக் கரண்டி.

ஆலிவ் எண்ணெய் -& 1 தேக்கரண்டி;

தண்ணீர் -& 2 மேஜைக் கரண்டி.

கார்ன் பிளேக்ஸ் &- 1 மேஜைக் கரண்டி.

செய்முறை:

பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இரண்டையும் கலந்து வைத்துக் கொள்ளவும். கார்ன் ஃபிளேக்ஸை தனியாக கலந்து கொள்ள வேண்டும். இதில் சிறிது சிறிதாக எண்ணெய்க் கலவையினைச் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை முகத்தில் தடவிக் கொண்டு உலர்ந்த பின்பு கழுவி விடவும்.

வெயில் காலத்தில் சருமத்தினைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

தினமும் இருமுறையாவது குளிக்கலாம். காலையில் குளித்;த பின்பு மாலையில் தான் அடுத்த குளியல் அமைய வேண்டும். மாலைக் குளியலால் நாள் முழுவதும் ஏற்பட்ட வெயிலின் தாக்கம், அசதி, அலுப்பு குறையும். நாட்டு மருந்து கடையில் சந்தனாதி தைலம், பிருங்காமலாதி தைலம், திரிபலா தைலம் போன்ற தைல எண்ணெய்கள் கிடைக்கும். மேற்கூறிய தைல எண்ணெய்களில் ஏதாவது ஒன்றினைத் ( நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஓ.கே தான் ) தலையில் தடவிக் குளித்து வரலாம். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு வெயிலில் அலைந்தால் தலைவலி ஏற்படும். மாலையில் செய்யும் எண்ணெய்க் குளியலால் தூக்கம் நன்றாக வரும். பாலில் அரைத்த வெள்ளை மிளகு, தேங்காய்ப் பாலில் அரைத்த சீரகம், நீரில் அரைத்த கசகசா இவற்றையும் உடலில் தேய்த்துக் கொண்டு குளிக்கலாம்.

கோடைக் காலத்திற்கு ஏற்ற உணவுகளான இளநீர், பனை நுங்கு, தர்ப்பூசணி, முலாம்பழம், வெள்ளரிப் பிஞ்சு போன்றவற்றை பகல் உணவுக்குப் பின் ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து உண்பது நல்லது. இந்த உணவுகள் கோடையில் உடலுக்கு நன்மை செய்வதால் தோலுக்கும் ( சருமம் ) மிகுந்த ஆரோக்கியத்தினை, பளபளப்பினைத் தருகின்றது. தினமும் கோடையில் பழச்சாறினை அருந்துவது நல்லது.

தினமும் நீராவி முகருவதினைச் செய்தால் முகத்துவாரங்கள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் 5 நிமிடமும், எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் 10 நிமிடமும் கொதிக்கும் நீரிலிருந்து எழும் நீராவியை நுகருவது நல்லது.

கோடையில் கொப்புளங்கள், வேர்க்குரு, கட்டிகள் ஏற்படுவது சகஜம் தான். வெப்பத்தால் ஏற்படும் சரும அலர்ஜி, சருமம் வறண்டு போவதற்கு காரணங்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்ளாதது, மாங்காய், மாம்பழம் அதிகம் உண்பது போன்றவற்றாலும் சரும பாதிப்புகள் உருவாகும். இவற்றுக்கு சீரகம், ஓமம், கார்போக அரிசி இவற்றைத் தேங்காய் பாலில் அரைத்து உடலில் தடவி சிறிது நேரம் குளித்தால் நல்லது.

கோடையில் தோலில் அரிப்பும், சினப்பும் ஏற்பட்டால் முன்னிரவில் கசகசாவை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தேய்த்துக் குளித்தால் அரிப்பு குறையும்.

அருகம்புல் சாறு கொண்டு தயாரிக்கப்படும் அருகம் புல் தைலம் மேல் பூச்சாக பயன்படுத்தினால் அரிப்பு, உடல் சூடு குறையும்.

வெயிலில் பயன்படுத்த சில முகத் தேய்ப்புகள் (Scrubs):

1. உலர்ந்த ஆரஞ்சுத் தோல், சமைத்த ஓட்ஸ் + பாதாம் பருப்பு இவை ஒவ்வொன்றும் ஒரு கப் எடுத்து மிக்ஸியில் பொடித்து கலந்து கொள்ளவும். பொடியை சிறிது எடுத்து வெதுவெதுப்பான நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் அல்லது அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதனால் அழுக்குகள் நீங்கும்.

2. உலர்ந்த சருமத்திற்கேற்ற ‘மாஸ்க்’: இரண்டு தேக்கரண்டி அளவு பால் எடுத்துக் கொண்டு அத்துடன் இரண்டு மேஜைக் கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவவும். சம அளவு ரோஜா பன்னீர், கிளிசரின் எடுத்து இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் Moisturiser ஆக பயன்படுத்தலாம்.

3. எண்ணெய்ப் பசை உள்ள சருமத்திற்கு ஒரு தக்காளியிலிருந்து எடுக்கப்பட்ட கூழுடன், முல்தானி மட்டி சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவிக் கொள்ளவும். முகத்தில் இந்த கலவை உலர்ந்து போகும் வரை விட்டு, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.

4. இயல்பான ( நார்மல் ) சருமத்திற்கு மஞ்சள் பொடியை பாலில் குழைத்துத் தடவி, அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கழித்துத் கழுவவும். சந்தனப் பொடியுடன் ரோஜா பன்னீர் சேர்த்து குழைத்து தடவி வரவும். கருமை திட்டுக்களையும் இந்த கலவை போக்கும். இரவு முழுவதும் இந்த கலவை முகத்தில் இருக்கட்டும்.


Spread the love