நமது உடலின் உறுப்புகளில் எது முதல்வன்? எது நமது உடலின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம்? இதற்கு பதில் மூளை.
பழங்காலங்களில் மூளையின் மகிமை முற்றிலும் தெரியப்படவில்லை. ஆயுர்வேதமும், சீன வைத்தியத்தில் கூட மூளையின் முக்கியத்துவம் முழுமையாக தெரியவில்லை. இதயம் தான் எல்லா இயக்கங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் காரணம் என்று கருதப்பட்டது. ஆயுர்வேதத்தில் “மனது” என்று சொல்வது, மூளையைத் தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
உடலின் நிகரில்லாத, அற்புதமான அவயம் மூளை. அதன் எடை உடல் எடையின் 2 சதவிகிதம் தான். சராசரி மனிதனின் மூளையின் எடை 1.4 கிலோ ஆனால் தினமும் உடலுக்கு தேவையன கலோரிகளில், 30 சதவிகிதத்தை (கிராம்) மூளை எடுத்துக்கொள்கிறது. மற்ற அவயங்களை விட அதிக சக்தி (கலோரிகள்) மூளைக்கு தேவைப்படுகிறது. தவிர ஆக்சிஜனும் மற்ற அவயங்களை விட மூளைக்கு அதிகம் தேவை. 24 மணி நேரமும் செயல்படும் மூளை, நாம் தூங்கும் போது கூட இயங்குகிறது. மூளைக்கேற்ற உணவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன். (Free Radicals) கள் பற்றி தெரிந்து கொள்ளுவோம். இவற்றைப்பற்றி முன்பே “முதியோர்களுக்கான உணவுகள்” என்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சில டிப்ஸ்
ஈரப்பசையினால் இரும்பு துருப்பிடிப்பது, சில காய்கறி, பழங்களை வெட்டி வைத்தால் நிறம் மாறுவது போன்றவற்றின் காரணம் என்ன? இவற்றில் உள்ள வேதிப்பொருட்கள், சுற்றுப்புற காற்று மண்டலத்திலுள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து மாறுபடுவது தான். இந்த செயலை (பிராண வாயுடன் கலப்பதை) ஆசிடேஷன் (Oxidation) என்பார்கள்.
ஆக்சிஜன் இன்றி நாம் உயிர்வாழ இயலாது. ஆனால் ‘நார்மல்’ செல் / திசுக்களின் செயல்கள் Free – Radicals எனப்படும் ஹைட்ராக்ஸில், லிபிட் பெராக்சைட், ஹைட்ரஜன் பெராக்ஸைட் முதலில் நச்சுப் பொருட்களையும் உண்டாக்கும். இவை குறைந்த அளவில் இருந்தால் பாதகமில்லை. அதிகமானால் உடல் தளர்ச்சி அடைந்து முதுமை கூடும். நோய்கள் வரும்.
சில Free – Radicals கள் நன்மை பயப்பவை. வைரஸ், பாக்டீரியாக்களை அழித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். ஆனால் சுற்றுப்புற சூழ்நிலையின் மாசுகள், தூசிகள், கதிர்வீச்சுகள் உடலை தாக்கி ப்ரீரேடிக்கல்கள் அதிமாகின்றன. அதிகமானால் ப்ரீரேடிக்கல் செல்களை சுற்றியுள்ள ஜவ்வுகளையும், DNA க்களையும் தாக்கி சேதம் விளைவிக்கும். இதனால் முதுமை சீக்கிரம் ஏற்படும். பல வியாதிகளுண்டாகும். மேற்சொன்ன காரணங்களை தவிர ஃப்ரீரேடிகல்கள் பாக்டீரியா / வைரஸ் தொற்றாலும் உண்டாகலாம். புகைபிடித்தல் ஒரு முக்கிய காரணம்.
இந்த Free – Radicals களை எவ்வாறு கட்டுப்படுத்துவது? ‘ஆக்சிடேஷன்’ எனும் செயல்பாட்டை எதிர்க்கும். Anti – oxidant களால் தான். வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், Super oxide dismutase போன்ற என்சைமுகள், ஹார்மோன்கள் – முதலியவை எல்லாம் ஆன்டி – ஆக்ஸிடென்டுகள். நம் உடலிலேயே சில ஆன்டி – ஆக்ஸிடென்டுகள் இயற்கையாக ஏற்படுகின்றன. ஆனால் உணவில் உள்ள பல ஆன்டி ஆக்ஸிடாட்டுகளை உடல் தயாரிக்க இயலாது.
ஃப்ரீரேடிகல்களாலும், ஆன்டி – ஆக்ஸிடான்டுகளின் குறைபாடுகளாலும், புற்றுநோய், ஆடோ – இம்யூன் நோய்கள், இதயநோய், ருமாடாய்டு ஆர்த்தரைடீஸ், நீரிழிவு, காட்ராக்ட் (கண்களில்), பார்க்கின்ஸன், அல்சீமர் போன்ற நரம்பு வியாதிகள் உண்டாகலாம்.
ஆன்டி ஆக்சிடான்ட் உள்ள உணவுகள்
1. விட்டமின் ‘இ’ – கொழுப்பில் கரையும் விட்டமின் ‘இ’ சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆகும். செல் ஜவ்வுகளில் உள்ள லிபிட் (கொழுப்பு) கள் ஆக்ஸிடேஷன் ஆகாமல் தடுக்கும். கூடவே செலீனியமும் இருந்தால் நல்லது. தினசரி 400 மில்லிகிராம் தேவைப்படும். தாவர எண்ணெய்கள், கோதுமை, கீரை, முட்டைக்கரு, விதையுள்ள காய்கறிகளில் (Legume) வைட்மின் ‘இ’ உள்ளது.
2. விட்டமின் ‘சி’ – சிறந்த ஆன்டி – ஆக்ஸிடான்ட் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். ஃப்ரீரேடிக்கல்களை சமநிலைப்படுத்தும். கொலஸ்ட்ராலை குறைக்கும். உடலின் இயற்கை ஆன்டி ஆக்ஸிடான்டான் Glutathione ஐ அதிகரிப்பதால் மூளைக்கு ஏற்படும் ப்ரீரேடிக்கல் பாதிப்பு குறையும். விட்டமின் சி ஆரஞ்ச் வகை பழங்கள் தக்காளி, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், நெல்லிக்காய், கொய்யாப்பழம், முளைகட்டிய பருப்புகள் முதலியவற்றில் உள்ளது.
3. விட்டமின் ‘ஏ’ – மற்றும் பீடா – கரோடினாய்டுகள் – இவை ஃப்ரீரேடிக்கல்களை கட்டுப்படுத்தும் சிறந்த பொருட்கள். முதுமையடைந்த மூளையின் செல்களை புதுப்பிக்கிறது. தினமும் ஒரு கிளாஸ் கேரட் சாறு அருந்தி வந்தால் மூளையின் நரம்புகள் முதுமைய அடையாது. மீன் எண்ணெய், மாமிசம், முட்டைக்கரு, வெண்ணெய், பாலாடை, கேரட், கீரை வகைகளில், மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகள் முதலியவற்றில் வைட்டமின் ‘ஏ’ உள்ளது.
4. லிகோபின் – இது ஒரு காரோடினாய்ட் நிறமி. தக்காளிக்கு சிகப்பு வண்ணத்தை கொடுப்பது லிகோபின் தான். இது ஒரு இயற்கையாக ஆன்டி – ஆக்சிடான்ட் தக்காளியின் அபரிமிதமாக லிகோபின் உள்ளது. குறைந்த அளவில் கொய்யா, தர்பூசணியில் உள்ளது.
5. சாக்லேட்டுகள் – சாக்லேட்டில் உள்ள பெனாலிக்ஸ் என்ற ஆன்டி – ஆக்சிடான்ட், இருதயத்தை காக்கிறது என்பது சமீபத்தில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. கோகோ – வெண்ணெய்யிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பினால் சாக்லேட் செய்யப்படுகிறது. இந்த கொழுப்பில் உள்ள அமிலம், ரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்தாது. சாக்லேட்டை தினமும் 40 கிராம் அளவில் சாப்பிடலாம். இது சாக்லேட் பிரியர்களுக்கு நல்ல செய்தி! ஆனால் சாதாரண சாக்லேட்டை விட கறுப்பு நிற சாக்லேட் தான் உகந்தது.
6. செலீனியம் – ஃப்ரீரேடிகல்களை எதிர்க்கும் சக்தி இந்த தாதுப்பொருளில் உள்ளது. கடல் உணவு, தானியங்கள், சதை நிறைந்த மாமிசங்கள், கொட்டைகளில் செலீனியம் நிறைந்துள்ளது. தானியங்களின் உள்ள செலீனியத்தின் அளவு, அவை விளைந்த மண்ணில் உள்ள செலீனியம் அளவைப் பொருத்தது. 55 லிருந்து 70 மைக்ரோ கிராம் அளவு செலீனியம், தினசரி தேவைப்படும்.
7. துத்தநாகம் (Zinc)- ஆன்டி – ஆக்சிடான்ட் குணமுடைய என்சைம் ஒன்று சூப்பர் ஆக்ஸைட் டிஸ்முடேஸ் (Superoxide dismutase) என்பது. இந்த என்ஸைமுள் உள்ள முக்கிய பொருள் துத்தநாகம். விட்டமின் ஏ, இ – இவற்றை தகுந்த அளவில் இருக்க உதவுகிறது. துத்த நாகம் புண்கள் ஆற, சர்ம ஆரோக்கியத்திற்கு மற்றும் வளர்ச்சிக்கும் தேவை. ஆன்டி – ஆக்ஸிடான்ட் உணவுகளை உட்கொண்டாலே மூளை சரிவர இயங்கும். அவை தவிர மூளைக்கு பயனிக்கு இதர உணவுகள்.
மூளையின் ஞாபக சக்தி பெருகி சுறு சுறுப்பாக இயங்க
• கீரைகள், பால் சேர்க்காத கறுப்பு தேநீர் – இவற்றில் உள்ள ‘பாலிபெனால்’ (Polyphenol) ஆன்டி – ஆக்ஸிடான்டைப் போலவே மூளையை இளமையாக வைக்க உதவுகிறது.
• தினமும் வைட்டமின் ‘ஏ’ நிறைந்த இயற்கை உணவை உட்கொண்டு வந்தால் (அளவுக்கு மீறாமல்) மூளையிள் அறிவாற்றல் பெருகும்.
• விட்டமின் பிரிவை சேர்ந்ததாக கருதப்படும் ‘கோலின்’ (Choline) உள்ள அவரைக்காய் போன்ற Legume காய்கறிகள், பீட்ரூட், ஆப்பிள், வேர்க்கடலை, மீன், நண்டு முதலியவை உணவில் சேர்த்துக் கொண்டால் முதுமையால் ஏற்படும் ஞாபக மறதியை தவிர்க்கலாம்.
• வைட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) செறிந்த வாழைப்பழம், கோதுமை வித்து, பருப்புகள், புழுங்கலரிசி, பால், வேர்க்கடலை, முட்டைக்கோஸ், உலர்ந்த திராட்சை, மாமிசம், மீன் முதலியவற்றை உட்கொண்டால் தெளிவான சிந்தனைகள் உருவாக உதவும்.
• விட்டமின் ‘பி’ – காம்ப்ளெக்ஸ் பிரிவை சேர்ந்த மற்றொரு வைட்டமின்னான பி- 12, மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும். பால், பால்சார்ந்த உணவுகள், இறைச்சி, முட்டை, மீன், இதர அசைவ உணவுகள் முதலியவற்றிலிருந்து விட்டமின் பி 12 கிடைக்கும். வயதாக வயதாக பி- 12 வைட்டமின்களை உணவிலிருந்து கிரகிக்கும் சக்தி குறைவதால், தனியாக இந்த விட்டமினை எடுத்துக் கொள்வது நல்லது.
• பாதாம், அக்ரோட் கொட்டைகள், எள், சோயாபீன்ஸ், முழுக்கோதுமை, பரங்கி விதைகள், மூளையை சுறு சுறுப்பாக வைக்கின்றன.
• சிட்ரஸ் பழங்கள் (ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை முதலியன), இதர பழங்கள் மூளைக்கு சுறு சுறுப்பை தருபவை. திராட்சை மூளையின் நரம்பு செல்களை சரிவர இயங்க வைக்கும். தினசரி 100 கிராம் திராட்சை சாப்பிடலாம். தக்காளியும் மூளைக்கு நல்லது.
• மீன் எண்ணெய், சோயா எண்ணெய்கள் மூளையின் ஆரோக்கியத்தை வளர்க்கும். மீன் ஒரு சிறந்த மூளை உணவு. சால்மன், துனா போன்ற எண்ணெய் நிறைந்த மீன்கள் மூளைக்கு பலத்தை தருபவை. வாரத்திற்கு ஒரு முறை மீன் உணவு சாப்பிட்டால் போதுமானது.
• வைட்டமின் பி 6, பி 12 தவிர இதர ‘பி’ காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான தியாமின் (பி1), நியாசின் (பி3), ஃபோலிக் அமிலம் முதலியவை மூளை இயக்கத்தை சரிவர செய்ய உதவும்.
இதர ‘டிப்ஸ்’
1. காலை உணவை தவிர்க்காதீர்கள். மூளைக்கு தேவை குளூகோஸ். இரவு முழுவதும் “பட்டினி” இருக்கும் மூளை காலையில் உணவை (க்ளூகோஸ்ஸை) தேடும். காலை உணவில், ஒரு பழம், ஒரு பருப்பு (அ) தானிய உணவு (பரோத்தா, கிச்சடி / உப்புமா போன்றவை) ஒரு புரத உணவு (முட்டை, தயிர் போன்றவை) இருக்கட்டும்.
2. காப்பி (அ) டீ எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குறைவாக ஒரு நாளில் 2 (அ) 3 கப் போதும்.
3. ஒரு நாளின் 3 வேளை உணவை 6 வேளை உணவாக பிரித்து உட்கொள்ளவும். இதனால் மூளை சுறு சுறுப்பாக இயங்கும்.
4. எடையை குறைப்பதற்காக திடீரென்று குறைந்த அளவு டயட்டில் இறங்க வேண்டாம். கலோரிகளை திடீரென்று குறைத்தால் மூளை பாதிப்படையும். டாக்டரின் ஆலோசனைப் படி நிதானமாக எடையை குறைக்க உணவை குறைக்கவும்.
5. தினமும் ஆரஞ்சு ஜுஸ், பசலை கீரை, கேரட், புதிய பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
6. சோகை உண்டாகாமல் இரும்புச்சத்தை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.
7. கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
ஆயுர்வேத மூலிகைகள்
• உடலும் மூளையும் சரிவர இயங்க புத்துணர்வு கொடுக்கும் அப்யங்கம், சிரோதரா, பிழிச்சல், நஸ்யம் முதலிய மூளைக்கு “எண்ணெய் போஷாக்கு” சிகிச்சைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன.
• நீர் பிரம்மி மூலிகை தொன்று தொட்டு மனநோய்களுக்கு மருந்தாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மூலிகை மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். கூந்தல் தைலங்களில் சேர்க்கப்படுகிறது. இதில் உள்ள Bacoside என்ற பொருள் மூளை நரம்புகளை வலுப்படுத்தி ஞாபசக்தியை அதிகரிக்கும்.
• கொத்தமல்லி கீரையும் மூளைக்கு நல்லது.
• வல்லாரை ஆயுர்வேதத்தில் அதிகமாக பயன்படும் மூலிகை. நரம்பு டானிக்காகவும், மூளையின் ஞாபக சக்தியை பெருக்கவும் கொடுக்கப்படுகிறது. ஞாபக சக்தி குறைவு (அ) முற்றிலும் இல்லாமை மற்றும் மனநோய்களுக்கும் வல்லாரை ஒரு அருமருந்து. மூளைக்கேற்ற மூலிகை உணவு என்று கருதப்படும் வல்லாரை மூளைச் செல்களை புதுப்பிக்கிறது. நரம்புத்தளர்ச்சியை போக்குகிறது.