உடல் வலிமையைக் கூட்டவும்

Spread the love

நல்ல, தேர்ந்த விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கக் காரணம் அவர்களின் உடல் கட்டல், உடல் வலிமை தான். உடல் வலிமை, ஆற்றல், (STAMINA) எக்காரியத்தையும் செய்ய உதவுவது மட்டுமன்றி, நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை அளிக்கிறது. எந்தவிதமான பதட்டமிக்க சூழ்நிலையிலும் நாம் எதிர்த்து செயல்பட ஆற்றலையும் அளிக்கிறது.

எவ்வாறு வலிமையைக் கூட்டுவது? முதலில் உங்கள் உடம்பை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் தேக ஆரோக்கியம் பற்றிய உண்மை நிலை தெரியவரும். காயப்பட்டால், தளர்வு ஏற்பட்டால், வேறு பிரச்னைகள் எழுந்தால் அவற்றை எதிர்நோக்க உதவும். உடல் பலமடைய உடலால் உழைத்து, வேலைகள் பல செய்தால் போதுமென்று நினைக்காதீர்கள். நீங்கள் சாப்பிடும் உணவும் மிக முக்கியம். சரிவிகித உணவு தேவை. பழங்கள், காய்கறிகள், குறைந்த அளவுள்ள புரோட்டின், கொழுப்புப் பதார்த்தங்கள், கொஞ்சம் மாமிச உணவு உணவில் சேர வேண்டும். இத்தகைய உணவு உங்கள் உடம்பு வலிமையை மேம்படுத்தும். மனத்திண்மையை வளர்க்கும், ஆரோக்யமான உடம்பைத் தரும்.

உணவுக்கு அடுத்ததாக விளையாடுவது மிகவும் முக்கியம். வெளிப்புற விளையாட்டுகள் நம் தளர்ச்சியைப் போக்கும். உடம்பை ஆரோக்யமாக வைக்கும். கால்பந்து, கூடைப்பந்து, தாவி ஓடிவிளையாடுவது போன்றவை இரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்யும் இதயத்தை பலப்படுத்தும்.

இவற்றை உடனடியாக, முரட்டுத்தனமாக செய்ய வேண்டாம். மெதுவாக ஆரம்பித்து, சிறிது சிறிதாக ஆரம்பித்து மேலே செல்லவும். உதாரணமாக ஓட வேண்டுமென நினைத்தால் முதலில் நடக்கவும் அல்லது குறைந்த தூரம் ஓடவும். பின்பு வேகத்தை, தூரத்தை அதிகப்படுத்தவும், உடலுக்கு நல்லது. இதயத்தைப் பலப்படுத்தும் ஓட்டம், நீச்சல், தாண்டுதல் போன்ற பயிற்சிகள் ஏற்றவை.

ஒரு பயிற்சிக்கும், மற்றொன்றிற்கும் இடைவெளி தேவை. களைப்பு ஏற்பட்டால் ஒய்வு எடுக்கவும். (strain) வேதனைப்படுத்தி பயிற்சிகள் செய்ய வேண்டாம். பயிற்சி முடிந்ததும் மூச்சு வாங்க வேண்டும். வேர்க்க வேண்டும்.

நன்றாக உடலில் ஆற்றல் பெருக கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளிவிட்டு சாப்பிட வேண்டும்.

நிறைய தண்ணீர் குடிக்கவும், களைப்பு மிகாமலிருக்கும்.  தண்ணீரின் அளவு குறைந்தால், ரத்தம் கெட்டியாகி ரத்த ஓட்டம் மெதுவாகிவிடும். அதனால் திசுகளுக்கு பிராண வாயு வேண்டிய அளவில் கிடைக்காமல் போகும்.

நல்ல வெப்பமான நேரத்தில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்தால் நிறைய வேர்க்கும். அதனால் உடம்பிலுள்ள உப்பு சக்தி வெளியேறிவிடும். உப்பின் அளவு குறைந்தால் எலக்ட்ரோலைட் (Electrolyte) அளவு மாறுபட்டு தலை சுற்றலாம்.  மயக்கம் வரலாம்.  உடல்பலம் குன்றும். எனவே சோடியம் அளவு சீராக இருக்கும்படி உணவு உட்கொள்ளவும்  அதற்குமுன் ரத்த அழுத்தம் (Blood pressure) எப்படியுள்ளதென்பதை தெரிந்து கொள்ளவும். இவற்றைப் பின்பற்றி ஆரோக்யமாக வாழலாமே.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love