எந்த ஒரு தாயையும் கேட்டுப்பாருங்களேன், ‘உங்கள் குழந்தை சரியாக சாப்பிடுகிறதா? என்று. ‘இல்லை‘ என்ற பதில் தான் வரும். தனது வீட்டில் உணவை கையில் வைத்துக் கொண்டு கெஞ்சும் தாயிடம் சாப்பிடாமல், அதே உணவை பக்கத்து வீட்டில் கேட்டு வாங்கி சாப்பிடும் குழந்தைகளும் உண்டு! மிக அதிகமாக தாய்மார்களுக்கு ஏற்படும் கவலை தனது குழந்தையின் பசியை எப்படி தூண்டுவது என்பது தான்.
ஆயுர்வேதம் இதற்கு வழி சொல்கிறது. அதன் படி, 16 வயது வரை குழந்தைகள் / சிறுவர், சிறுமியர், கபம் மிகுந்த பிரகிருதியாக இருப்பார்கள். கபச் சீர்கேடுகளுக்கு ஆளாவார்கள். கபம் தூக்கலாக இருப்பதால் சளி, இருமல், சைனஸ் பிரச்சனைகள், அஜீரணம், பசியின்மை இவற்றுக்கு ஆளாவார்கள். எனவே கபத்தை உண்டாக்கும் வறுத்த பொரித்த உணவுகள், இனிப்புகள், எண்ணெய், நெய் செறிந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஜாடராக்னி (ஜீரண அக்னி) குறைபாடுகள் பசி எடுப்பதை தடுக்கும். உணவு சரியாக ஜீரணமாகாது இதனால் குழந்தைகள் சோர்ந்து, களைப்பாக, ஆகிவிடுவார்கள். சில சமயங்களில் குழந்தை சரிவர சாப்பிட்டாலும், பெற்றோர்கள் திருப்தி அடைவதில்லை. குழந்தை சரியாக சாப்பிடுவதில்லை என்று கவலைப்படுவார்கள். இதற்கு வழி – குழந்தையின் எடை குறைந்து போனாலும், விளையாட்டில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், குழந்தை போதிய அளவு உணவு உட்கொள்வதில்லை என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆயுர்வேதத்தில் ‘அஷ்ட சூரணம்‘ என்ற மருந்து பசியின்மையை போக்கும் அருமருந்து. பெயருக்கு ஏற்ப இஞ்சி, திப்பிலி, மிளகு, ஓமம், ரசகந்தி பிசின், சீமை சீரகம், கருஞ்சீரகம், பெருங்காயம் என்ற 8 பொருட்கள் அடங்கியது. இந்த சூரணத்தை அரை தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து, சாப்பிடுவதற்கு சற்று முன்பு குழந்தைக்கு கொடுக்கலாம். அதிக பட்சமாக 41 நாட்கள் கொடுக்கலாம். அஷ்ட சூரணம் வயிற்றுப் பூச்சிகளையும் போக்கும். வயிற்றுப் பூச்சிகளாலும் பசியின்மை ஏற்படும்.
அஷ்ட சூரணம்
வெண்ணெய், மைதா, சர்க்கரை, சீஸ் ஆகியவற்றை அதிகமாக அளவில் சாப்பிடும் போது அஜீரணம் ஏற்படுவதில் வியப்பில்லை. ஆனால் எட்டு மருந்துப் பொருட்களை வறுத்து இடித்து வைத்துக் கொண்டால், சுடுநீரோடு அருந்த அஜீரணம் பறந்து விடும்.
தேவை
சுக்கு – 1 பெரிய துண்டு
திப்பிலி – 1 டே. ஸ்பூன்
மிளகு – 1 டே. ஸ்பூன்
ஓமம் – 1 டே. ஸ்பூன்
சீரகம் – 1 டே. ஸ்பூன்
கருஞ்சீரகம் – 1 டே. ஸ்பூன்
இந்துப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 சிறு கட்டி
செய்முறை
எல்லாவற்றையும் நைசாகப் பொடித்து லேசாக வறுத்து மீண்டும் பொடித்து சலித்து வைக்கவும். பிள்ளை பெற்ற பெண்கள் சுடச்சுட அன்னத்தோடு சாப்பிட ஏற்றது தனியாப் பொடியும், அங்காயப் பொடியும்.
பசியை தூண்ட மற்றொரு நல்ல மருந்து முஸ்தாரிஷ்டம். இதில் கோரைக்கிழங்கு முக்கியப் பொருள். இது கபத்தை குறைக்க வல்லது. வயிற்றுப்பூச்சிகளையும் எதிர்க்கும். இந்த முஸ்தாரிஷ்டத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பசி எடுக்கும். குழந்தைகளின் ஜீரணக்கோளாறுகளை ‘கிரஹணி‘ என்கிறது ஆயுர்வேதம். இதற்கு சாஸ்தீரிய ஆயுர்வேத வைத்தியமாக “முஸ்தாதகரம்” என்ற மருந்து பயன்பட்டு வந்திருக்கிறது. முஸ்தா என்றால் கோரைக்கிழங்கு. தகரம் என்றால் “மோர்”.
மருந்துகளை தவிர குழந்தையின் உணவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். லேசான, இனிமையான, சூடான, புதிய, வண்ண உணவுகளை குழந்தைகள் விரும்புவார்கள். மூன்று வேளை உணவு கொடுப்பதற்கு பதில் அதையே சிறு சிறு உணவாக பிரித்து 5 (அ) 6 தடவை கொடுக்கலாம். எலுமிச்சை பழச்சாற்றில் தேன் சேர்த்து வெதுவெதுப்பான நீரில் கலந்து கொடுத்தாலும் பசி ஏற்படும். சிறிது சீரகமும், தனியாவும் சேர்த்து, கொதிக்க வைத்த நீரை குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுப்பது நல்லது. மாதுளம் பழம், அன்னாசி, மாம்பழம் கொடுப்பதும் நல்லது.
பசியெடுக்காத குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவது நல்லது. இதற்காக நல்ல ஆயுர்வேத தைலங்கள் கிடைக்கின்றன.
பசி குறைவாக உள்ள குழந்தையை வெளி விளையாட்டில் ஈடுபடுத்தவும். பசி குறைவதற்கு, மனோ ரீதியான காரணங்களும் இருக்கலாம். எதற்கும் உங்கள் குழந்தை பசியில்லாமல் உணவை புறக்கணித்தால், ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.
எடுத்துக் கொள்ள வேண்டியவை
அரிசிக்கஞ்சி, முருங்கை இலை சூப், பாகற்காய், வெந்தயம், கொள்ளு சூப், மைசூர் பருப்பு, நண்டு சூப், மட்டன், லிவர், சிக்கன், அன்னாசி, பப்பாளி, மோர், நெய், கொதித்து வெதுவெதுப்பாக ஆற வைத்த நீர் பூண்டு, இஞ்சி, கேரட், தேன், கிராம்பு, லவங்கப்பட்டை, ஏலக்காய்.
உணவு நலம் ஜனவரி 2011
குழந்தைகளின், பசியை, தூண்ட, ஆயுர்வேதம், சளி, இருமல், சைனஸ் பிரச்சனைகள், அஜீரணம், பசியின்மை, உணவுகள், அஷ்ட சூரணம், மருந்து, இஞ்சி, திப்பிலி, மிளகு, ஓமம், ரசகந்தி பிசின், சீமை சீரகம், கருஞ்சீரகம், பெருங்காயம், குழந்தைகள், வயிற்றுப்பூச்சி, அஷ்ட, சூரணம், செய்முறை, சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம், சீரகம், கருஞ்சீரகம், இந்துப்பு, பெருங்காயம், எடுத்துக், கொள்ள, வேண்டியவை, அரிசிக்கஞ்சி, முருங்கை இலை சூப், பாகற்காய், வெந்தயம், கொள்ளு சூப், மைசூர் பருப்பு, நண்டு சூப், மட்டன், லிவர், சிக்கன், அன்னாசி, பப்பாளி, மோர், நெய்,