‘ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க கூடாது’ என்பார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த அவசரத்தால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். ஆண்களைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையும் இல்லை. மறைவிடமாகப் பார்த்து ‘ஜிப்’&ஐ அவிழ்த்துக் கொள்வார்கள். சென்னையின் சுவர்களில், பல இடங்களில் ‘சிறுநீர் கழிக்காதே’ என்று எழுதி வைத்திருப்பார்கள். பலர் வேண்டுமென்ற அந்த சுவரை ‘பொதுக் கழிப்பறையாக’ நினைத்து இயற்கை உபாதையை கழித்து விட்டு வருவார்கள்.
பெண்களுக்குத்தான் இது பெரும் பிரச்னையாக உள்ளது. கோயில், பீச், பூங்கா மற்றும் ஷாப்பிங் என்று வெளியிடங்களுக்கு செல்லும் போதெல்லாம் கூச்சம் மற்றும் வசதியின்மை காரணமாக பெண்கள் தங்கள் இயற்கை உபாதையை அடக்கி கொள்கிறார்கள். இதனால் சிறுநீரக தொற்று என்பது ஆண்களை விட பெண்களுக்கு 20 சதவீதம் அதிகமாக ஏற்படுகிறது. வெளியிடங்களுக்கு செல்லும்போது, சிறுநீரை அடக்கி வைப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
போலீஸ் என்றாலே நம்மில் நிறைய பேருக்கு எரிச்சல்தான் வரும். ஆனால், சாலைகளில், பாதுகாப்பு பணிகளில் பல மணி நேரம் ஈடுபடும் போலீஸ்காரர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அதிலும் பெண் காவலர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். இயற்கை உபாதைகளை கழிக்க வசதியின்றி அவர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.
மலஜலம் கழிப்பதில் பிரச்னை இல்லை என்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். உடல் ஆரோக்கியத்துக்கான முக்கியமான இயக்கங்களில் ஒன்று இயல்பாக சிறுநீர் கழிப்பது. நம் உடலுக்கு தேவையான நீரை குடித்தவுடன், உடற்கழிவுகளுடன் வெளியேறும் மீதமுள்ள நீர்தான் சிறுநீர். தினமும் தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பதும், சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு ஏற்பட்டவுடன் அதை வெளியேற்றுவதும் ஆரோக்கிய வாழ்வின் முதல்படி. சிறுநீரை வெளியேற்றாமல் தேக்கினால், சிறுநீர் பையின் கொள்ளளவையும் மீறிய சுமையை அது தாங்க வேண்டி வரும். இதனால் நமக்கும் அவஸ்தை ஏற்படும். இந்த ‘சுமக்கும்’ வேலை தொடர்ந்தால் சிறுநீரக தொற்று ஏற்படுவதோடு, சிறுநீரக செயலிழப்பு வரை பிரச்னைகள் நீளும். எனவே சிறுநீரை அடக்காமல் கழிப்பதுதான் சாலச் சிறந்தது.
கோடை காலம் ஆரம்பித்து விட்டது. இந்தக் காலத்தில் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். மற்ற காலங்களில் 2 லிட்டர் தண்ணீர் போதும். குடிநீரைத் தவிர பால், பழ ஜூஸ், காய்கறி போன்றவற்றில் இருந்தும் நமது உடலுக்கு தேவையான தண்ணீர் கிடைத்து விடுகிறது.
அதே நேரத்தில், தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதும் பிரச்னைதான். தாகம் எடுத்தால் அதிகமாக தண்ணீர் குடிப்பதில் தவறில்லை. ஆனால், தண்ணீர் நிறைய குடி. உடம்புக்கு நல்லது என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு இஷ்டம் போல் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. இதனால் சிறுநீரகத்துக்குத்தான் கூடுதல் சுமையாகும். இதயம் பழுதானவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குத்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாது. இதனால், இதயம், ரத்தத்தை சரிவர ‘பம்ப்’ செய்ய முடியாமல் போகும். அதேபோல, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களும், கல்லீரல் நோயாளிகளும் அதிகமாக தண்ணீர் குடிக்க கூடாது. இதில், சிறுநீரக கற்கள் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் விதிவிலக்கு. அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது அது, சிறுநீரக கற்களை வெளியேற்றும் என்பதால், அவர்கள் மட்டும் அதிகமாக நீர் குடிக்கலாம்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சிறுநீரை அடக்குவது, சுகாதாரமற்ற கழிப்பறையைப் பயன்படுத்துவது, சுத்தமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் சிறுநீர் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் விட்டால், நீர்க்கடுப்பு, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றும் உணர்வு, சொட்டு சொட்டாக நீர் வெளியேறுவது, சிறுநீர் கழிக்கும்போது வலி, எரிச்சல் என நோய்களின் பட்டியல் நீளும். எனவே, சிறுநீர் தொற்று உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
நீரிழிவு நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டால் அது சிக்கலான பிரச்னை என்பதை உணர வேண்டும். கர்ப்ப காலத்தில் தாய், சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டால், குழந்தைக்கும் அந்த பாதிப்பு ஏற்படலாம். சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்பதால், சிறுநீர் தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. ஆனால், ஐந்து வயது தொடங்கி 15 வயது வரை அடிக்கடி சிறுநீர் தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்கள் கட்டாயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு சிறுநீரக தொற்றுப் பிரச்னை தீவிரமாக இருக்கும். இறைச்சி, பீர் உள்ளிட்ட மதுபானங்களை அதிகளவில் எடுத்துக் கொண்டால் அது, சிறுநீர் பிரச்னைக்கு வழி வகுக்கும்.
சிறுநீர் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க சிறுநீர் வெளியேற்றுவதற்கான உணர்வு ஏற்பட்ட உடன் சிறுநீர் கழிக்க வேண்டும். அதை அடக்கி வைக்க கூடாது. நன்றாக கை கழுவ வேண்டும். பெண்கள் மாத விலக்கு காலங்களில் இரண்டு நாப்கின்களை பயன்படுத்த வேண்டும். தாம்பத்யத்துக்கு முன்னும் பின்னும் பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தாலும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னை எனில், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரி, தர்பூசணி போன்றவைகளை சிறுநீர் பெருக்கிகள் எனலாம். நீர்ச்சத்து மிக்க இந்தக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கோடை காலத்தில் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான மனிதன் நான்கில் இருந்து ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும். அதிக குளிர், மழைக்காலங்கள் மற்றும் ஏ.சி. அறை, ஏ.சி. காரை பயன்படுத்துபவர்கள் ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழித்தால் தவறில்லை. ஒரு நாளில் ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் சிறுநீர் வெளியேறுவதுதான் இயற்கை. தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், தேவைப்படும்போது சிறுநீர் வெளியேற்றாமல் இருப்பதும் உடல் நலத்துக்கு நல்லதல்ல.