நிலாவைக் காட்டி சோறூட்டியது எல்லாம் அந்தக் காலம். இன்னமும் கிராமப் புறங்களில் இந்தப் பழக்கம் இருக்க கூடும். நகர்ப்புறங்களில் சிறிதும் இல்லை. பொருளாதார சூழ்நிலை காரணமாக கணவன் & மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய சூழலில் குழந்தையிடம் அன்பு காட்டுவதே அரிதாக இருக்கும்போது, சோறு ஊட்டுவது சொப்பனம்தான்.
இரண்டரை, மூன்றரை வயதிலேயே பிரிகேஜியில் கொண்டு போய் குழந்தைகளை அடைத்து விடுகிறார்கள். அங்கு அவர்களாகவே சாப்பிடக் கற்றுக் கொடுக்கிறார்கள். குழந்தைகள் தங்கள் வேலையை தாங்களே செய்யக் கற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால், அம்மா, பாட்டியின் கை ருசி, பாசம், நேசம் எல்லாம் அந்தக் குழந்தைகளுக்கு கிட்டாமல் போய் விடுகிறது.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் அம்மாக்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.. படியுங்கள்..
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. அது அம்மாக்களுக்கு மட்டுமே கை வந்த கலை. சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் குழந்தைகளை ஏதேதோ சொல்லி, ‘தாஜா’ பண்ணி சாப்பிட வைப்பார்கள். அம்மாவின் கை ருசியில் பருப்பு சாதமும், பஞ்சாமிர்தமாக இனிக்கும்.
எவ்வளவு பெரிய பாசக்கார அப்பாவாக இருந்தாலும், சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் குழந்தையிடம் சட்டென்று கோபப்பட்டு விடுவார்கள். மோசமான அப்பாவாக இருந்தால் லேசாக ஒரு தட்டு தட்டவும் செய்வார்கள்.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது பொறுமை அவசியம். இது தாய்மைக்கு தானாக வருவது. குழந்தைகளின் உணவில் 90 சதவிகிதம் சத்தான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள 10 சதவிகிதத்தில் இனிப்பு, பொறித்த உணவுப்பொருட்கள் இருக்கலாம்.
பழங்கள், காய்கறிகளை வெவ்வேறு வடிவங்களில் வெட்டி கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
வாயில் உணவை ஊட்டும்போது, குழந்தைகள் கீழே சிந்தத்தான் செய்யும். சில குழந்தைகள் துப்பக் கூட செய்யும். அதற்காக ஆத்திரப்படாதீர்கள். அடிக்காதீர்கள். ‘பூச்சிக்காரனிடம் பிடித்து கொடுத்து விடுவேன்’ என்று பயமுறுத்தாதீர்கள்.
குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து வந்தால், அது போரடித்து விடும். உணவின் வடிவத்தையோ, நிறத்தையோ மாற்றிக் கொடுத்தால், அது உணவு உண்பதில் குழந்தைகளுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும்.
சிறுசிறு சமையல் வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அது குழந்தைகளுக்கு உணவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். அதற்காக காய்கறிகளை கொடுத்து வெட்டச் சொல்லாதீர்கள். அது ஆபத்தை ஏற்படுத்தி விடும். கேரட்டை கழுவித் தரச் சொல்லுங்கள். கீரையை கிள்ளி ஆய்ந்து தரச் சொல்லுங்கள்.
சட்டி, பானை சொப்பு வாங்கிக் கொடுத்து அவர்களை விளையாட்டாக சமைக்க விடுங்கள். அவர்கள் சமைத்ததாக சொல்லி பாவ்லா காட்டி பரிமாறும்போது, நீங்களும், ‘பேஷ்.. பேஷ் ரொம்ப டேஸ்ட்டா இருக்கே’ என்று பாராட்டுங்கள்.
வீடுகளில் குளிர்பானம், சிப்ஸ் போன்ற பொருட்களை வாங்கி வைக்கும் பழக்கம் இருந்தால் அதை விட்டொழியுங்கள். கண்ட, கண்ட நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்களை குடிக்க குழந்தைகளுக்கு ஆசையாகத்தான் இருக்கும்.
ஆனால், அவை ஆரோக்கியத்தை கெடுத்து குட்டிச் சுவராக்கி விடும். கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்கள், எனர்ஜிபானங்கள், பழச்சாறுகள் போன்றவைகளில் எந்த சத்தும் இருப்பதில்லை. அதில் உள்ள ரசாயனங்களினால் குழந்தைகளின் உடலுக்குத்தான் கெடுதல் விளையும்.
‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று நொடிக்கு நூறு முறை விளம்பரங்கள் உங்களை ஏமாற்றும். அதற்கு அடி பணிந்து விடாதீர்கள். வெஜிடபிள் சாலட், ஃப்ரூட் சாலட் போன்றவற்றை குழந்தைகளுக்கு நீங்களே செய்து கொடுங்கள். வீட்டிலேயே விதவிதமான தின்பண்டங்களை செய்து கொடுங்கள். பசியறிந்து உணவு ஊட்டுங்கள்.
பசியாதிருக்கும்போது உணவை திணிக்காதீர்கள். குழந்தையின் போக்கிலேயே விட்டு விளையாட்டாக உணவு ஊட்டுங்கள். உணவை அவர்களாகவே விரும்பி சாப்பிடும் சூழ்நிலையை உருவாக்குங்கள்.
குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் மிகப்பெரிய பிணைப்பை ஏற்படுத்துவதே தாய்ப்பால்தான். அதற்கடுத்தபடியாக பிணைப்பை ஏற்படுத்துவது அம்மா கையால் ஊட்டும் சோறு என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வேலைக்கு செல்லும் தாய்மார்கள் விடுமுறை நாட்களிலாவது இந்த பிணைப்புக்கு பிள்ளையார் சுழி போடுங்கள். ‘ஆயா ஃப்ரிட்ஜ்ல பால வச்சிருக்கேன். குழந்தைக்கு காய்ச்சி குடுத்துடுங்க..’ என்று வழக்கமான பல்லவி பாடாதீர்கள்.