சினம் ஒரு இயல்பான உணர்ச்சி, நமது உடல் அமைப்பு, வளர்ப்பு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைகின்ற ஒரு உணர்ச்சி. இந்தச் சினம் என்ற உணர்வு நம்மை சேதப்படுத்தாமலிருக்க அதைக் கவனமுடன் கையாளுவதெப்படி? அப்படிக் கையாளத் தவறினால் அது நம்மை என்ன செய்யும்?
சினம் சேர்ந்தாரைக் கொல்லும் என்பான் வள்ளுவன். உண்மைதான். சினம் சேர்ந்தாரைக் கொல்லக் கூடியது தான். ஆனால், இப்போதுள்ள பிரச்சனையெல்லாம் எப்போது எப்படிக் கொல்லும் என்பதுதான்.
சினத்தை அடக்காது போனால் அது ஆளைக் கொல்லும் என்பார் சிலர். அடக்கி வைக்கும் சினம் தான் ஆளைக் கொன்றுவிடும் என்கிறார்கள் சிலர். இதில் எது சரி-.
கிஸீரீமீக்ஷீ – ஜிலீமீ னீவீsuஸீபீமீக்ஷீstஷீஷீபீ ணி.னீஷீtவீஷீஸீ தமது நூலில் அடக்கி வைக்கப்பட்ட தினத்தைக் காட்டிலும் அதிக தீங்கிழைக்கக் கூடியது அணையை உடைத்துக் கொண்டு வரும் வெள்ளம் போன்ற வெளிப்படையான கோபமே என்கிறார் கேரல் டாவ்ரிஸ் என்ற உளவியலார். அவரது கருத்தை வலியுறுத்த 40 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 3000 ஆண்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றினைத் துணைக்கழைக்கிறார். இதயத்தாக்கு யாருக்கு வரும் என்பதை ஆராய்வதற்காக நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஆத்திரத்தாலும், கோபத்தாலும், வெடிப்புறப் பேசுகின்றவர்களுக்கே இதயத் தாக்கு எளிதில் ஏற்படுகிறது என்பது அறியப்பட்டது. மேலும் இவர்கள் வாரத்திற்கு ஒருமுறையே சினமும் சீற்றமும் அடைகிறார்கள் என்பதும் தெரிய வந்தது.
இரத்த அழுத்தத்தை நிர்ணயிப்பதில் சினத்தின் பங்களிப்பு என்னவென்று அறிய மிஷிகன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவும் மேற்சொல்லப்பட்டுள்ள கருத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த ஆய்வில் சினம் ஏற்படுகின்ற போது அதன் எதிர் விளைவுகளை எண்ணிப் பார்த்துச் சினத்தை அடக்கிக் கொள்கின்றவர்களது இரத்த அழுத்தம் சினத்தை வெளிப்படையாகக் காட்டுகின்றவர்களது இரத்த அழுத்தத்தை விடக் குறைவாக இருந்தது அறியப்பட்டது என்கிறார் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளரான டாக்டர் எர்னஸ்ட் ஹர்பர்க்.
ஆனால், இக்கருத்திற்கு எதிரான அணியில் இருப்பவர்கள். இல்லையில்லை, அடக்கி வைக்கப்படும் சினம் தான் ஆளைச் சாய்த்து விடும் என்கிறார்கள். ஏனெனில், சினம் வெளிப்பட்டு விட்டால் அதன் பின் ஏற்படும் உள்ளத்து அமைதி, உடல்நலத்தை மேம்படுத்தும் என்கிற உளவியல் கோட்பாட்டை இவர்கள் சான்று காட்டுகின்றனர்.
சினம் தோன்றுகின்றபோது உடலில் எபிநெஃபிரின் (அட்ரீனலின்) மற்றும் நார்எபி (நார் அட்ரீனலின்) போன்ற ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன்கள்நாடித் துடிப்பை விரைவுபடுத்தி, இரத்தச் சர்க்கரை அளவை உயர்த்தி, வயிற்று இரத்தக் குழாய்களைக் குறுக்கி, இரத்த அழுத்தத்தை உயரச் செய்கின்றன. சினத்திற்கு ஒரு வடிகால் ஏற்பட்டுவிட்டால் இவை அனைத்தும் சீரடைந்து விடுகின்றன என்கிறார்கள் இவர்கள்.
சினத்தை வெளிப்படவிடாமல் அடக்குவதால் அது உள்ளுக்குள்ளேயே கனன்று உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடும். அவ்வாறன்றி சினத்தை வெளிப்படுத்த அ மதித்தால் உள்ளம் லேசாகி உடல்நலம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுவிடும் என்பது இவர்கள் கட்சி. இவ்வாறு வெளிப்படையான சினம் நல்லது என்று கருதுகின்றவர்கள் அக்கருத்தை வலியுறுத்தப் புகழ்பெற்ற லியோமெடோ போன்ற உளப்பாங்கு ஆய்வியலார பலரைச் சான்றுரைக்க அழைக்கின்றனர்.
மேலும் இவ்வாறு அமுக்கப்பட்ட, அடக்கப்பட்ட சினத்தால் வயிற்றுத் தொல்லைகள், செரிமானக் கோளாறுகள், மூச்சுறுப்பு நோய்கள், இரத்த குழாய் குறைபாடுகள் மற்றும் சரும நோய்கள் தோன்றக் கூடும் என்கின்றனர். சில அறிவியலார்கள் இதுபோன்ற ஒடுக்கப்பட்ட சின உணர்வினால் புற்றுநோய் ஏற்படவும் கூடுமென்கிறார்.
மூட்டுவாதம், கீழ் வாதம் ஆகியவற்றால் துயருற்ற 5000 பேர்களது கடந்த கால வாழ்க்கைமுறைகளை ஆராய்ந்தபோது அவர்களின் பெரும்பகுதியினர் கோபத்தை வெளிப்படையாகக் காட்டத் தெரியாமல் உள்ளுக்குள்ளே வைத்துக் குமைப்பவர்கள் என்பது தெரிய வந்தது என்கிறார் ஒரு ஆய்வாளர்.
நம் முன்னோர்கள் சொல்லியபடி, ‘சினங்காக்க’ என்பதுதான் சரி. அவ்வாறு சினங்காக்க சில வழிமுறைகள் உள்ளன. சிலர் அதை ஒரு கலையாகவே பயின்றுள்ளனர். இதோ அந்த வழிமுறைகள் ஏழினையும் கீழே தந்திருக்கிறோம்.
சினத்தை இனம் கண்டு கொள்க
சொல்வதற்கு எளிது. ஆனால், மிகப் பெரும்பான்மையான நேரத்தில் இதுவே பெரிய தடைக் கல்லாக இருக்கக் கூடும். பயத்தினாலும் குற்ற உணர்வினாலும் கோபத்தை வெளிப்படையாகக் காட்ட இயலாமல் போகின்றபோது உள்ளுக்குள்ளேயே குடையக் கூடும். இதை இனம் கண்டு உள்ளுக்குள் குமைவதைத் தவிர்க்க வேண்டும்.
சினங்கொள்ளச் செய்தது எது?
உங்களை சினங்கொள்ளச் செய்தது எது என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எதற்காகக் கோபப்படுகிறீர்கள் என்று தெரிந்தால் அதற்காகக் கோபப்பட வேண்டியதுதானா என்று சிந்தித்துப் பாருங்கள். சின்ன விஷயங்கள் ஏதாவது உங்களைச் சீண்டியிருந்தால் தொலையட்டும் என்று விட்டொழியுங்கள். அதை மறக்கப் பாருங்கள். மறக்க முடியவில்லை என்றால் வேறு ஏதோ அடிப்படைக் காரணம் இருக்கிறது என்று உணர்ந்து அது என்னவென்று அறிய முயலுங்கள்.
பொறுமையுடன் எண்ணிப் பாருங்கள்
இவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான், கண்ணில் விரலை விட்டு ஆட்டி விடுவேன். என்றெல்லாம் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள். மற்றவன் சொன்னது சரியாக இருக்கக் கூடுமோ என்று பொறுமையுடன் எண்ணிப் பாருங்கள். ஒருவேளை அது சரியாக இருந்தாலும் இருக்கலாம்.
பத்து வரை எண்ணுங்கள்
கோபம் குமுறிக் கொண்டு வரும்போது ஒன்று முதல் 10 வரை எண்ணுங்கள். அது பழைய முறையாக இருந்தால் புதியமுறை எதனாலாவது உங்களை அமைதிப்படுத்திக் கொள்ள முயலுங்கள். அமைதிக்குப் பின் நிச்சயமாகத் தெளிவான சிந்தனை பிறக்கும்.
உங்கள் வருத்தம் என்ன?
சினமடைவதற்குப் பதிலாக உங்கள் வருத்தமென்ன என்று எதிராளிக்குத் தெரிவிக்கப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வது அநியாயம் என்று சொல்வதைக் காட்டிலும் இதனால் நான் மிகவும் பாதிக்கப்படுவேன் என்று சொல்லுங்கள்.
கவனித்துக் கொள்ளுங்கள்
எதிராளி என்ன சொல்கிறார் என்று கவனித்துக் கேளுங்கள். சச்சரவை அது தவிர்க்கக் கூடும். சச்சரவு தவிர்க்கப்பட்டால் கோபமும் தவிர்க்கப்படும் தானே.
மன்னியுங்கள்
பிறர் செய்யும் குற்றங்களை மன்னித்து மறக்கின்ற முறையை நீங்கள் பின்பற்றினாலே கோபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது போல்தான்.