சமையல் சுவையாகவும், தரமாகவும் இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பதுதான சமையலில் அனைவரும் கடைபிடிக்கும் நடைமுறை. தரமான பொருட்கள் கொண்டு சமைத்தால் தானே தரமான உணவு நமக்கு கிடைக்கும். அதிலும் குறிப்பாக காய்கறி விஷயத்ததில் கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் நம்மில் பலருக்கு காய்கறி எப்படி பார்த்து வாங்குவது என்பது தெரிந்திருக்கவில்லை. யாரோ சொல்லக் கேட்டும், ஏதோ ஒரு புத்தகத்தில் படித்திருந்தும் காய்கறி கடையில் நிற்கும் போது மட்டும் மறந்தே போய்விடுகிறது. அதனால் சொத்தைக் கத்தரிக்காய் முதற்கொண்டு பல காய்கறிகளில் நாம் ஏமாந்து போகிறோம். இனிமேலும் அந்த நிலை உங்களுக்கு வராதிருக்க இதோ சில யோசனைகள்.
வாழைத்தண்டு என்றதும் அதன் பளபளப்பை பார்த்து வங்கும் பழக்கம் பல பேருக்கு உண்டு. அவ்வாறு வாங்குவது சரியான முறையல்ல. வாழைத்தண்டின் மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
வெள்ளை வெங்காயம் வாங்கும்போது நசுக்கினால் சாறு வருகிறதா என்று பார்ப்பது அவசியம். அப்படி சாறு வந்தால் அந்த வெள்ளை வெங்காயம் நல்ல காய்தான்.
முருங்கைக் காய் பச்சை நிறத்தில் இருந்தால் மட்டுமே போதுமென்கிற சிந்தனை பலருக்கு உண்டு. முருங்கைக்காயை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல்களைப் பயன்படுத்தி சிறிது முனுக்கினால், எளிதாக வலைந்தால் அது நல்ல முங்கைகாய்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு உறுதியானதாக இருந்தால் இனிக்கும். அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் வாங்கும் போது அதை மனதில் வைத்து கொள்ளுங்கள்
மக்கா சோளம் இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அது நல்ல மக்காச் சோளம்.
தக்காளி வாங்கும் போது, நல்ல சிவப்பில் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.
கோவைக்காயைப் பொறுத்தவரையில் முழுவதும் பச்சையாக இருப்பதுதான் நல்லது. அதில் சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்.
சின்ன வெங்காயம் வாங்க வேண்டுமெனில் பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்.
குடை மிளகாய் வாங்கும் போது தோல் சுருக்கமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். கரும்பச்சையில் இருந்தால் வாங்க வேண்டாம். அடிபட்டிருக்கும் எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்.
பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடிமனாக இல்லாமல் பார்த்து வாங்குங்கள். இது காலி ஃபிளவர் வாங்குவதற்கான ஆலோசனை.
மாங்காய், தேங்காய் காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டிப் பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறியதாக இருக்கும்.
பீர்க்கங்காய் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயம், அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரேயளவு பருமனானதாக இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது.
புடலங்காய் வாங்கும்போது கெட்டியாக இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். அப்போது தான் விதைப்பகுதி குறைவாக சதை பகுதி அதிகமாக இருக்கும்.
முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினால் தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும். அப்படி இருந்தால் கரணைக் கிழங்கு தாராளமாக வாங்கலாம்
சேப்பங்கிழங்கு முளை விட்டது போல் ஒருமுனை நீண்டிருக்கும் கிழங்கு சமயலுக்கு சுவை சேர்க்காது உருண்டையாக பார்த்து வாங்கவும்.
பெரிய வெங்காயம் வாங்கும்போது அதன் மேல் குடுமி பகுதியில் தண்டு பெரியதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்.
இஞ்சி விஷயத்தில் லேசாக கீறி பார்க்கும்போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்.
கத்தரிக்காய் தோல் மெல்லியதாக இருப்பது போல் பார்த்து வாங்கவும்.
சுரைக்காய் நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போதுதான் இளசு என்று அர்த்தம்.
அவரைக்காயைத் தொட்டுப் பார்த்து விதைகள் பெரிதாக இருக்குமானால், அதை தவிர்த்து விடுவது நல்லது இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது.
வாழைப் பூ வாங்கும் போது அதன் மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்த்து வாங்கவும். அப்படி இருந்தால் பிரஷ்காய் என்று அர்த்தம்.
பச்சை மிளகாய் நீளமாக இருந்தால் காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டாணது தான் காரமாகவும் வாசனையாகவும் பிரமாதமாக இருக்கும்.