நோய் எதிர்ப்பு சக்திமேம்பட

Spread the love

சில குழந்தைகளுக்கு அடிக்கடி ஜுரம், ஜலதோஷம் ஏற்படும். கூடவே இருக்கும் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படுவதில்லை. என் குழந்தை தான் பாதிக்கப்படுகிறான் என்று தாய்மார்கள் பலர் புலம்புகிறார்கள். காரணம் நோய் தடுப்பு சக்தி குறைபாடு தான். மாசு நிறைந்த சுற்றுப்புற சூழ்நிலை, விட்டமின், தாதுப்பொருட்கள் இல்லாத உணவு, தவறான உணவுமுறை – -இவற்றால் உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) பாதிக்கப்படும். அடிக்கடி நோய்வாய்ப்படுவது நேரிடும்.

நோய் தடுப்பு சக்தி, ஆயுர்வேதத்தில் “வியாதிக் ஷமத்வா” எனப்படுகிறது. ஆயுர்வேதம் ‘இம்யூனிடியை’ மூன்று விதமாக சொல்கிறது. சகஜா- சகஜமானது, கலஜா – நேரம் காலம் யுக்தி க்ருதா – சம்பாதிப்பது.

சகஜா பலா – இந்த ‘பலம்‘ பெற்றோர்களிடமிருந்து குழந்தை பெறும் பாரம்பரிய சக்தி. இந்த காலத்தில் குழந்தைகள் பல ஒவ்வாமைகளுக்கு (Allergies) ஆளாவதால் பெற்றோர்களை விட பலவீனமாக இருக்கிறார்கள். குழந்தை ஆரோக்கியம் பெற்றோர்களை பொருத்து அமையும். நோய் தடுப்பு சக்தியை பெற்றோரிடமிருந்து குழந்தை பெற்றுக் கொள்வதால், இந்த சக்தியின் குறைகளை தவிர்ப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது.

  கலஜா – நாள், பருவம், வயது –இந்த மூன்று விஷயங்கள் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்க செய்வதற்கு தேவை. உடல் வலிமை காலையில், வசந்தருதுவில், இளமையில் அதிகமிருக்கும். சாயங்காலத்தில், கோடை பருவத்தில், முதுமையில் குறைந்திருக்கும். வசிக்கும் இடங்களை பொருத்தும் நோய் தடுப்பு சக்தி மாறும். யுக்தி க்ருதபலா – செயற்கை முறையில் நோய் தடுப்பு சக்தியை அதிகரித்தல் – உதாரணம் தடுப்பூசி (Vaccination) போடுதல்.

இம்யூனிடியை அதிகரிக்க

உள்ளுக்கு சத்துள்ள உணவு கொடுத்தல், வெளி மசாஜ், உறக்கம், மெலிந்த, தூக்கமில்லாத பலமற்ற குழந்தைகளுக்கு கஷ்டமாண்ட சுவலேஹா, அமலாக்கி ரசாயனா முதலியவை கொடுக்கப்படும். சில வைத்தியர்கள் தங்கம், நெய், மூலிகை கலந்த மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

வெளி மசாஜ்

சிறு குழந்தைகளுக்கு பிரம்மிக்ரிதா பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு அஸ்வகந்தா பலாலக்க்ஷதி தைலம், மஹாமாஷ தைலம், பிண்ட தைலம், பிரம்மி தைலம் உபயோகிக்கப்படுகின்றன.

உணவு (சேர்க்கைகள்)

ஒரு வயதுக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மசித்த, நசுக்கிய வாழைப்பழம் (அ) ஆப்பிள் கொடுக்கலாம். நெய், சர்க்கரை, பால் கலந்தும் தரலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உலர் பழக்கலவை கொடுக்கலாம்.

செய்முறை

2 பிஸ்தா, 1 பாதம் பருப்பு, 1 முந்திரிப்பருப்பு, 1 பேரிச்சம்பழம், 1 அத்திப்பழம், 8 உலர்ந்த திராட்சை -இவற்றை தண்ணீரில் 6 லிருந்து 8 மணி நேரம் ஊற வைத்து அரைத்து பால், சர்க்கரை சேர்த்து கொடுக்கவும். வீட்டிலே செய்யும் பாயசம், லட்டு, அல்வா முதலியவற்றை கொடுக்கலாம்.

ஞாபக சக்திக்கு – பிரம்மி சாறு 2 மிலி தேன் உடன் சேர்த்து தினமும் கொடுக்கவும்.

நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்க – நெல்லிப்பொடி – 1/4 (அ) 1/2 டீஸ்பூன் தேன் உடன் கொடுக்கவும்.

ஜீரணத்திற்கு – இஞ்சிப்பொடி – 1 சிட்டிகை, சீரகம் 1 சிட்டிகை கொடுக்கவும்.

அஸ்வகந்தா (Withania somnifera) மூலிகைப் பொடி, பசுநெய், பால் சேர்த்து செய்யும் லேஹியம் குழந்தைகளின் நோய் தடுப்பு சக்தியை பெருக்க சாலச் சிறந்தது. ஆயுர்வேதத்தின் படி பாலும் நெய்யும் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டி நன்கு வளர செய்யும் உணவுகளாகும். ‘ச்யவன பிராஸ் லேஹியமும் இம்யூனிடியை அதிகரிக்கும் சிறந்த டானிக். இரண்டு ‘பல்’ பூண்டை எடுத்து அந்த சாற்றை பழ ஜுஸ் (அ) வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து கொடுக்கவும். மேற்சொன்னவற்றை 2-3 மாதங்கள் செயல்படுத்தி பிறகு பாருங்களேன்.. உங்கள் குழந்தையின் வளர்ச்சியை…


Spread the love