வாய் துர்நாற்றம் என்பது பொதுவாக தன் எதிரில் பேசும் நண்பர்கள், உறவினர்கள் “உன் வாய் ஏன் இவ்வளவு நாற்றம் வீசுகிறது” என்று கேட்கும் பொழுது தான் தெரிய முடிகிறது. வாய் துர்நாற்றம் காரணமாக, உடன் வேலை செய்யும் மனிதர்களுடன் நண்பர்களுடன் உறவினர்களுடன் பேசுவதற்குக் கூசப்பட வேண்டியுள்ளது. ஒரு வித தாழ்வு மனபான்மையும் ஏற்படுகிறது.
வாய்த் துர்நாற்றம் ஏற்படக் காரணம் என்ன?
வாயில் ஏற்படும் துர்நாற்றம், பல், ஈறு, வாய் மற்றும் வாய் சார்ந்த பகுதிகளில் ஏற்படும் நோய்களின் காரணத்தால் அல்லது உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோயினால் ஏற்படும்.
காலையில் ஏற்படும் வாய் நாற்றம்
பொதுவாக காலையில் எழுந்தவுடன் வாயிலிருந்து ஒரு விதமான் துர்நாற்றம் ஏற்படுகிறது. இரவில் வாயில் உமிழ் நீர் குறைவது மற்றும் உரிந்து விட்ட எபிதீலியம் என்னும் படர்திசு வாயிலிருந்து அகற்றப்படாதது தான் இதற்கு காரனமாகும். வாய் மூலம் சுவாசிக்கப்படுவதால், இரவில் பல் இடுக்கினுள் சிக்கிக் கொண்ட உணவுப் பொருட்கள் அழுகி விடும். இது வாய் மூலம் சுவாசிப்பவர்கள், குறட்டை விடுபவர்கள் மற்றும் உறங்கும் பொழுது வாய் திறப்பவர்களுடன் இவ்வாறு உணவு அழுகும் சூழல் அதிகம் காணப்படும். காலையில் பல் துலக்கிய பின்பு, காலை உணவிற்குப் பின் இந்த வாய் துர்நாற்றம் மறைந்து விடும்.
பசி மற்றும் உணவின் காரணமாக ஏற்படும் வாய் நாற்றம்
அதிக பசியுடன் இருப்பவர்களின் மூச்சில் மற்றும் வாயில் இருந்து ஒரு வித துர்நாற்றம் ஏற்படலாம். அவர்களது இரத்தத்தில் குறைவான அளவு சர்க்கரை இருக்கும் பொழுது இவ்வாறு நாற்றம் ஏற்படக் காரணமாக உள்ளது. அவர்களும் உணவு உட்கொண்ட பின் துர்நாற்றம் மறைந்து விடும். உணவுப் பொருட்களில் வெங்காயம், பெருங்காயம், கருவாடு, அதிகம் மசாலா கலந்த பொருட்கள், ஆல்ஹகால் கலந்த மது வகைகள் உட்கொண்ட ஒரு சில நேரத்தில் வாயிலிருந்து துர்நாற்றம் வீசும். நுரையீரலில் இருந்து வெளியேற்றப்படும் ஆவியாகக் கூடிய ஒரு சில பொருட்களே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
புகை பிடிப்பதும் வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கும்
புகை பிடிப்பவர்களின் மூக்கு, வாயில் இருந்து துர்நாற்றம் அடிக்கும். இவர்கள் பீடி புகைத்தனரா? சிகரெட் பிடித்தனரா? என்று நாற்றத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
வாய்ச் சுத்தம் அவசியம்
வாயை அன்றாடம் காலை, இரவு என்று தினசரி இருவேளை சுத்தம் செய்யவில்லையெனில் வாய்த் துர்நாற்றம் ஏற்படும். இதுவே முக்கியக் காரணம். சரியாக பற்களை துலக்கி, வாய்க் கொப்பளிக்கத் தவறினால் பல்லில் பற்படலம் படிந்து பற்காறையாக துர்நாற்றம் ஏற்படுகிறது. நிகோடின் புகையும் இதனுடன் சேர, இன்னும் துர்நாற்றம் அதிகரிக்கும்.
பற்கள் சார்ந்த துர்நாற்றம்
பற்புறத் திசு நோய் என்ற ஒன்று பொதுவாக இளங்குழந்தைகளை அதிகமாகத் தாக்குகிறது. அவர்களின் வயது அதிகரிக்க, அதிகரிக்க பற்புறத் திசுக்கள் அழற்சியுற்று பயோரியோ போன்ற நோய் ஏற்படும். பயோரியா போன்ற நோய்களினால், ஈற்றுப் பரப்பு அழுத்தப்படுவதுடன் சீழ்வடிதல் மற்றும் அதனால் துர் நாற்றம் வீசுவதுமாக காணப்படும்.
பற்சொத்தை
வாயில் துர்நாற்றம் ஏற்பட இதுவும் ஒரு காரணமே!
செயற்கை பற்கள்
அகற்றப்படக் கூடிய பல் செட்டை, தினசரி கழட்டி, சுத்தம் செய்து மீண்டும் பொருத்திக் கொள்ளவில்லை எனில் பல் இடுக்கில் உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு, அழுகி, துர்நாற்றத்தை ஏற்படுத்தும். வல்கனைட், அக்ரிலிக் போன்றவற்றால் செய்யப்பட்ட பல் செட் அணிவதாலும் ஒரு வித துர்நாற்றம் ஏற்படலாம்
வாய்ப் புண்களும் ஒரு காரணமே!
ஊட்டச் சத்துக் குறைவான உணவுகள் அல்லது தவறான உணவுப் பழக்க வழக்கங்களின் காரணமாக வாயில் புண்கள் ,நச்சுயிரி, நுண்ணுயிரி, காளான் போன்றவற்றால் வாயில் ஏற்படும் புண்கள், வாய்ப் புற்று நோய் கட்டிகள் போன்றவைகள் காரணமாக வாய் துர்நாற்றம் ஏற்படும். உடலில் பிற உள்ளுறுப்புகளில் காணப்படும் நோய்களின் காரணமாகவும், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. முதலாவதாக, நுரையீரல் பகுதிகளில் அழற்சியுடன் சீழும் ஏற்படும் பொழுது, அவர்கள் தங்கியிருக்கும் அறைகளில் நுழையும் பொழுதே சகிக்க முடியாத துர்நாற்றம் வீசும். செரிமான மண்டலத்தில், மேல் பகுதியில் தோன்றும் பெப்டிக் அல்சர், காற்று தொல்லை அதாவது வாயு, வயிற்றில் புற்று நோய் உள்ளவர்களுக்கு வாயிலிருந்து துர்நாற்றம் வீசலாம்.
தூங்கும் பொழுது குறைந்த அளவு உமிழ் நீர் சுரப்பதால், வாய் வறட்சி அடைவது, அட்ரோபின் மருந்து செலுத்துவதன் காரணமாவும் வாய் வறட்சி அடைந்தாலும், உடலில் நீர் இழப்பு அதிகம் காணப்பட்டாலும் வாய்த் துர் நாற்றம் வீசும்.
நீரிழிவு நோயுள்ளவர்களின் இரத்தத்தில், அதிக அளவு கீடோன் இருக்கும். அதிகளவு கீடோன் இருப்பதால், அவர்கள் மூச்சு விடும் பொழுது, நாற்றம் ஏர்படும். சிறுநீரக நோயாளிகளிடம் வாய் துர்நாற்றம் ஏற்படலாம். நோய் முற்றி, சிறுநீரகம் வேலைத் திறன் குறையும் பொழுது நாக்கு வறட்சி அடையும். இதனால் நிறமாற்றம் மற்றும் அழற்சி ஏற்படும். சிறுநீர் மூலம் வெளியேற வேண்டிய யூரியா என்ற கழிவுப் பொருள் உமிழ் நீர் மூலம் வெளியேறுவதால், வாயில் துர்நாற்றம் வீசும். அவர்கள் விடும் மூச்சிலும் யூரியா நாற்றம் இருக்கும்.
வாய் துர்நாற்றம் தவிர்க்க என்ன செய்யலாம்?
தினசரி காலை எழுந்தவுடன் மற்றும் இரவில் படுக்கச் செல்லும் முன்பும், பற்களை பிரஷ் கொண்டு நன்றாக துலக்கி, நாக்கில் மேல் பகுதியை வழித்து விட்டு, வாயில் குளிர்ந்த நீர் கொண்டு நன்றாக கொப்பளிக்கவும்.
உணவு உண்ட பின்பு ஒவ்வொரு முறையும் நன்கு வாய் கொப்பளித்து பல் இடுக்கில் உணவுப் பொருட்ள் சிக்கி அழுகி விடாமல் பார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் குறிப்பிட்ட நேரம் வரை வாய் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கும். அதிக அளவு தண்ணீர் அருந்தவும். நீண்ட நாட்களாக உலர்ந்த வாய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. உடலில் போதிய அளவு நீர்ச் சத்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளவில்லை எனில், உமிழ் நீர் ஊறுவது குறைய ஆரம்பிக்கும். உமிழ் நீரில் உள்ள ஈரப் பதத்தைப் பெற்றுக் கொண்டு, வாய் துர்நாற்றத்தை தரும் பாக்டீரியா மற்றும் அதன் கழிவுகளை வடிகட்டி சுத்தப்படுத்துவது தான் உமிழ் நீரின் வேலையாகும். எனவே உமிழ் நீர் அளவு குறைவதால், மூச்சுக் காற்றுடன் வரும் துர்நாற்றத்தை தடுப்பது கடினமாகி விடும்.
எச்சில் அதிகம் ஊறும் உணவுகளை அடிக்கடி சாப்பிடலாம். இதற்கு எதையாவது வாயி போட்டு மெல்லுங்கள். உடல் உணவு ஒன்றை ஏற்க உள்ளது. அதற்கு சீரணிக்க எச்சில் ஊற வேண்டும் என்று மூளைக்கு செய்தி போய், எச்சில் அதிக அளவு ஊற இடமளிக்கும். சூயிங்கம், இலவங்கம், மிண்ட் மிட்டாய் போன்றவை எச்சில் ஊற உதவிடும். இது போன்ற ஒன்றை வாயில் மெல்ல தேர்ந்தெடுக்கும் போது, சர்க்கரை இல்லாத ஒன்றாக இருப்பது அவசியம். ஏனெனில் சர்க்கரையானது பற்களைச் சிதைக்க வைக்கும் கெட்ட பாக்டீரியாக்களை வளரச் செய்யும்.
உப்பு நீரில் வாய்க் கொப்பளியுங்கள். நாக்கைச் சுற்றி மேலே, கீழே என்று ஒரு சிறிய ஸ்பூன் மூலம் அல்லது நாக்கு வழிப்பான் உதவி கொண்டு சுத்தம் செய்து நீர் விட்டுக் கொப்பளியுங்கள். துர்நாற்றம் ஏற்படக் காரணமான நோய் என்ன என்பதைக் கண்டறிந்து அதற்குரிய மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். உடலில் உள்ளுறுப்புகளில் ஏற்பட்டுள்ள நீண்ட அல்லது குறுகிய கால நோய்களினால் வாய் நாற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும், அதற்குரிய மருத்துவ நிபுணர்களைக் கலந்து ஆலோசித்து, மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
வருடம் இருமுறை பல் மருத்துவரிடம் சென்று பற்சுத்தம், ஆலோசனை பெற்றுக் கொள்வதும் நல்லது.