கோபத்தை அறிவது என்பது கீழ்க்காணும் முறைகளில் அணுகலாம்.
உதாரணத்திற்கு, உங்கள் மாமியார் கோபம் வருவது மாதிரி நடந்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அவரைத் திட்டவோ அல்லது கடுமையாக பதில் சொல்லவோ நினைக்கிறீர்கள் எனில், அதை அவர் முன் சொல்வதற்குப் பதிலாக, தனியே வந்து அவரிடம் சொல்ல நினைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு தாளில் எழுதுங்கள். மொபைலிலும் தட்டச்சு செய்து கொள்ளலாம். பின், சிறிது நேரம் கழித்து கோபம் குறைந்து காணப்படும் சூழலில், தாளை எடுத்து கிழித்து விடவும். மொபைலில் தட்டச்சு செய்ததை டெலிட் செய்து விடலாம். இதனால் அப்போதைய கோபம், மறுபடியும் மாமியார் கோபப்படுத்தும் போது தலை தூக்காது.
கோபம் வருகையின் தங்களது உணர்வுகளை உற்று நோக்குங்கள். அப்போது கண்டிப்பாக இதயத் துடிப்பு உங்களுக்கு அதிகமாகும். அதிகமாக மூச்சு விடுவீர்கள். சிலர் நகங்களை கடிப்பர். பற்களைக் கடிப்பது மற்றும் கை, கால்களை இறுகப் பிடிப்பது போன்றவற்றை செய்து கொண்டிருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக எண்களை எண்ணி தங்களை சாந்தப்படுத்திக் கொள்ள முயற்சியுங்கள். இப்படி செய்தால், கோபத்தை தற்காலிகமாக தள்ளிப் போட முடியும்.
தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்து விட்டு, அமைதியாக ஒரு இடத்தில் சம்மனம் இட்டு அமர்ந்து, பிரணாயாமம் செய்யலாம். கண்களை மூடிக் கொண்டு, பின்னர் மனதிற்குள் ஒன்றிலிருந்து ஆறு வரை எண்ணிக் கொண்டு மூச்சை உள்ளிழுங்கள். பதினெட்டு வரை எண்ணிக் கொண்டு உள்ளிழுத்த மூச்சை வெளிவிடாமல் இருங்கள். பின்னர் எட்டு எண்ணும் வரை மெதுவாக வெளிவிடுங்கள். இம்முறைப் படி நீங்கள் சிரமப்படாமல் செய்து வந்தாலே, மூன்று நாட்களில் உங்கள் கோபம் பெருமளவு குறையும்.
அதிகாலையில் எழுங்கள். மித வேக ஓட்டம் அல்லது நடை பயிற்சி செய்யுங்கள். இதனால் உங்களில் இரத்த அழுத்தம் கட்டுப்படும். முடிந்தால் சிலம்பம், கராத்தே போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கோபத்தை மடைமாற்றிக் கொண்டு நிதானத்தை கைக் கொள்ளலாம்.
சில சமயங்களில், அதிக கோபம் வரும் பட்சத்தில் உங்கள் அறைக்குள் சென்று அமர்ந்து, பழைய போட்டோக்களையும், பழைய நினைவுகளையும் நினைத்துப் பார்க்கலாம். தலையணையை எதிரே வைத்து அதை அடித்து, கோபத்தைத் தீர்க்கலாம். உங்கள் மனம் ஒத்துழைத்தால், அந்த நேரத்தில் ஒரு கவிதை கூட எழுத முயற்சிக்கலாம்.
பசுமையான சூழல் உங்களைச் சுற்றி இருந்தால் மனமும் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டு மாடியிலோ அல்லது வீட்டைச் சுற்றியோ சில மரக் கன்றுகளை நட்டு வைத்து பராமரித்தால், மனம் லேசாகும்.
நகைச் சுவை, செல்லப் பிராணிகளின் காணொளிகளைப் பார்க்கலாம்.
முதல் முயற்சியாக ஒன்று முதல் முப்பது வரை எண்ணிக் கொண்டு வரலாம். பின்பு அதையே தலைகீழாக எண்ணவும். இப்படிச் செய்வதால், கொஞ்சம் கால அவகாசத்தில் கோபம் அகலும்.
அதிக கோபம் வரும் நேரங்களில், மனதுக்குப் பிடித்தவர்களிடம் நேரிலோ அல்லது போனிலோ அழைத்துப் பேசலாம்.
கோபத்தால் உறவுகளில் விரிசல்கள் ஏற்படும் என்றால், உங்கள் கோபம் தணிந்ததும் கோபத்திற்கான காரணங்கள் என்ன என்று யோசியுங்கள். யார் உங்களுக்கு கோபத்தைத் தூண்டுகிறார்களோ, அவரை சில மணி நேரங்கள் கழித்து தனியாக அழைத்துப் பேசி, நீங்கள் மன வருத்தமடைந்ததாக கூறுங்கள். இதனால் உறவுப் பாலம் பலப்படும்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் குறைந்தது பத்து நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். தற்போது, இணையம் வாயிலாக, இலவச தியான வகுப்புகள் கூட நடத்துகிறார்கள். அதில் கலந்து கொள்ளலாம்.
எந்த ஒரு காரணமும் இல்லாமல் அதிக கோபம் மற்றும் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டு இருப்பின் உடனே, நீங்கள் மன நல மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும்.
வீட்டிலுள்ளோர் மீது கோபம் வரும் சமயத்தில், வெளியே வந்து குளிர்ச்சியான நீராகாரங்கள் அருந்தாலம். இதனால், உங்கள் உள்ளம் அமைதியுறும்.
உங்கள் மன அமைதிக்கும், உங்கள் உணவுகளுக்கும் அதிக சம்பந்தம் உண்டு, நீங்கள் கண்டிப்பாக துரித வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏதாவது தீய பழக்கங்கள் இருப்பின் அவற்றை விட்டு விடுவதும் நல்லது.
முக்கியமாக உங்கள் வீட்டில் டி.வி. இல்லாமல் இருந்தால் நல்லது. டி.வி. இருந்தாலும், அதில் சீரியல் நேரங்களில் அணைத்து வைத்தால் மிகவும் நல்லது.
ஆரோக்கியமான, நார்ச் சத்துக்கள் நிறைந்த உணவுகளையே அடிக்கடி உட்கொள்ளுங்கள். மாமிசம் சாப்பிடாதீர்கள். என்னென்ன உணவுகளில் அதிக ஊட்டச் சத்துக்கள் இருக்கின்றன என்பதைப் பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும்.
வயிறு சம்பந்தமான கோளாறுகள் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக கோபம் அடிக்கடி வரும். இவர்கள் வேளாவேளைக்கு நேரம் தவறாமல் சாப்பிட்டு வந்தாலே, அவர்களுக்கு கோபம் நின்று விடும்.
நீங்கள் சிந்தித்தாலும், பேசினாலும் எழுதினாலும், எதைக் கவனித்தாலும் அவை எல்லாமே நேர்மறை சிந்தனைகள் நிரம்பியவைகளாக இருந்தால் உங்களுக்கு கோபம் துளியும் வராது. எதை செய்தாலும், நேர்மறையாகவே நினைத்துக் கொண்டு ஆரம்பியுங்கள். உங்கள் மனதில் தானாகவே மகிழ்ச்சி தவழும்.
சிலருக்கு, கோபம் சில நோய்களின் அறிகுறியாக இருக்கும். தைராய்டு, அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், மன அழுத்த நோய், மறதி நோய், ஆட்டிசம், தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வோருக்கும் அதிக கோபம் வரும். இவர்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு குணம் பெறலாம்.
கோபம் வர வைக்கும் உணவுகள்
காரமான உணவுகள் எல்லாமே அமிலச் சுரப்பை ஏற்படுத்தும். இதனால், இரைப்பையில் ஒரு வித எரிச்சல் உண்டாகும். இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல், உடல் சூடு போன்றவற்றை இவ்வகை உணவுகள் உண்டாக்கி உங்களை எப்போதும் ஒரு வித பரபரப்பு மன நிலையிலேயே வைத்திருக்கும்.
அதிக அளவு ட்ரான்ஸ் கொழுப்புகள் உட்கொள்பவர் உடனடியாக கோபம் கொள்கிறார். இவை உடல் வளர்சிதை மாற்றம் கொள்வதில் பிரச்சனையை ஏற்படுத்தி, பல மனப் பிரச்சனைகளைக் கொண்டு வந்து விடும். இதனால், அனைத்து விதமான பொரித்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்கள்.
காபின் அதிகமுள்ள பொருட்களை அதிக அளவு உட்கொள்ளும் போது, மனிதர்களுக்கு தூக்கத்தின் அளவு குறைந்து விடுகிறது. தூக்கம் குறைந்தால் மனிதனுக்கு பல மன உபாதைகள் ஆரம்பித்து விடும். அதில் கோபமும் ஒன்று. இதனால், அதிக அளவு காபி மற்றும் தேனீரை குடிக்காதீர்கள். தூங்கப் போகும் முன்பு, இவற்றை தவிர்த்தல் நலம்.
பிஸ்கட், ரொட்டிகள், பப்ஸ் போன்ற சில நொறுக்குத் தீனிகள் தின்பவர்களுக்கு உடலில் அதிக அளவில் இரத்த அழுத்தம் ஏற்படும். இதனால், மன நிலை சம நிலையற்றதாகி, கோபம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
சுயீங்கம், மிட்டாய்கள் போன்றவற்றை உண்டால், வயிற்றுத் தொந்தரவில் ஆரம்பித்து கோபத்தில் கொண்டு போய் விடும். இவைகள் செயற்கை நிறமூட்டிகளைக் கொண்டிருப்பதால் இரைப்பையில் ஒரு வித எரிச்சலை உண்டாக்கி, அசிடிட்டியை ஏற்படுத்தும்.
ஆல்கஹால் பருகும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கார்ட்டிசோல் எனப்படும் ஹார்மோன்கள் அதிக அளவு வெளிப்படும். இதனால், தங்களால் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு கோபம் அவர்களுக்கு கண்ணை கட்டிக் கொண்டு நிற்கும்.