சிறுநீரகக் கற்கள் ஏன் ஏற்படுகின்றன?

Spread the love

சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவது இன்றைய காலத்தில் சர்வ சாதாரணம். இன்றைய உணவுப் பழக்கமும், வாழும் முறையும் காரணங்கள். முன்பெல்லாம் பெண்கள் இதற்கு விதிவிலக்காகயிருந்தனர். இன்று அவர்களும் பாதிக்கப்படுகின்றனர். கால்சியம் பற்றாக் குறை நம் உடம்பில் ஏற்படில் குடல் அதிக அளவில் ஆக்சிலேட்டை ஈர்த்துக் கொள்ளும் இவ்வாறு சேர்ந்த ஆக்சிலேட் ரத்தத்தில் கலப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுகின்றன.

இதற்கு வேறுயென்ன காரணங்கள்?

நம் பாரத நாட்டில் நிலவும் வெப்பநிலை சிறுநீரகக் கற்கள் தோன்ற ஒரு காரணம். வெப்பம் அதிகரிக்கும் பொழுது உடல் அதிகம் வேர்க்கிறது. வேர்த்து வெளியேறும் வேர்வையை ஈடுகட்ட நாம் தகுந்த அளவு தண்ணீர் அருந்தாவிட்டால் சிறுநீரகக் கற்கள் ஏற்படும்.

அடுத்து நம் உணவுமுறை, பீட்சா, பர்கர் போன்ற உணவுகள், மாமிச உணவு ஆகியவற்றை அதிகமுண்டு, பழங்கள், காய்கறிகள் குறைவாகச் சாப்பிடுவதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன.

குறைந்த உடலுழைப்பு, ஏ.சி. அறையில் வேலை, வாகனப் பயணம், நடையின்மை ஆகியவை மற்றக் காரணங்கள்.

பெண்களிடமும் சிறுநீரகக் கற்களின் பாதிப்பு முன்பிருந்ததைவிட இன்று அதிகம் காணப்படுவதற்குக் காரணம் அவர்களின் வாழ்க்கை முறையும் மாறிவிட்டதால்தான். வீட்டில் அடைந்து கிடந்த பெண்கள் இன்றைய நாளில் வெளியே சென்று வேலை பார்ப்பதால் போதிய அளவு தண்ணீர் குடிப்பதில்லை. நல்ல உணவும் அவர்கள் சாப்பிடுவதில்லை.

போதுமான அளவு, அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்காக ஒரேமட்டமாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதுவும் காலையில் சிலர் அருந்துகிறார்கள். இதனால் பிற்பட்ட நேரத்தில் தண்ணீர் நன்கு குடிப்பதில்லை. சாப்பிடுமுன்பு, சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கலாம். தாகம் எடுக்கும்பொழுது குடிக்க வேண்டும். இதில் மாறுபட்டால் சிறுநீரகக் கற்கள் தோன்றும்.

குடிக்கும் தண்ணீர் போதுமான அளவில் இல்லையென்பது எவ்வாறு தெரிந்து கொள்வது?

சிறுநீர் மஞ்சள் நிறத்தில் அல்லது வேறு நிறத்தில் போகலாம்.

சிறுநீர் கழிக்கும்பொழுது எரிச்சல் ஏற்படலாம். சிறுநீரில், சிறுநீரகத்தில் கற்கள் தோன்றினால் அவற்றை அகற்றுவது இன்று எளிது. அதற்கான மருத்துவ சாதனங்கள், முறைகள் வந்துவிட்டன. துளைபோட்டு கற்களை எடுத்துவிடுவர். வாழைத்தண்டு உணவில் சேர்ந்தால் நல்லது.


Spread the love